வாழ்க்கை அனுபவம்

இன்று ஒரு சிறிய நிகழ்வு நடந்தது. அதை அனைவரிடமும் பகிர்ந்து கொள்ள விழைகின்றேன்.

கடந்த இரண்டு மாதங்களாக எங்கள் குடிலில் இருந்து வெளியே செல்வதற்கு அனுமதி தரவில்லை. ஆதலால் யாரும் வெளியே போகவில்லை. இன்று ஒருநாள் அவரவர் தேவைக்கு வெளியே சென்று வேண்டியதை வாங்கி வாருங்கள் என்று கூறினார்கள். அதன் காரணமாக அனைவரும் வெளியில் சென்றார்கள். நானும் எனது டூவீலரில் வெளியில் சென்றேன் பொள்ளாச்சியில் சந்து பொந்து எல்லாம் போய் வாங்க வேண்டும் என்பதால் காரில் செல்ல வில்லை.

டூவீலரில் மாஸ்க் அணிந்து கொண்டு வடக்கிபாளையம் நான் சென்ற பொழுது அங்கிருந்த காவலர்கள் என்னை நிறுத்தினார்கள். என் ஸ்டாண்டில் பின்னாடி ஹெல்மெட் உள்ளது.நான் அவர்களிடம் என்ன என்று கேட்டதற்கு வண்டியை ஓரமாக நிறுத்துங்கள் என்று கூறினார்கள். நான் அவர்களிடம் சார் நான் ஒரு எகஸ்.சர்வீஸ் மென் என்று கூறினேன்.

உடனே என்னை நிறுத்திய கான்ஸ்டபிள் அடுத்துள்ள இன்ஸ்பெக்டரை பார்த்தார். இன்ஸ்பெக்டர் என் அருகில் வந்து எக்ஸ் சர்வீஸ் மேனு க்கு அறிவுரை சொல்லும் அளவுக்கு எங்களுக்கு அறிவு இல்லை. உங்களுக்கு நாங்கள் எல்லாம் ஒன்றும் அறிவுரை சொல்லக் கூடாது. ஆனால் இந்த ஹெல்மெட்டை பின்னாடி எதற்கு வைத்துக் கொண்டிருக்கிறீர்கள் விளையாட்டுக்காக வா என்று கேட்டார். நான் உடனே போடுகிறேன் சார் என்று சொன்னேன். போட்டுக்கொண்டு போங்கள் என்று கூறி என்னை அனுப்பி விட்டார்.

இரண்டு மாதகாலம் எடுக்காத காரணத்தினால் அது லாக் ஆகி விட்டது. பிறகு ஒர்க்ஷாப் சென்று ஆயில் ஊற்றி அதை தொறந்து பின் அணிந்து கொண்டேன் ஆனால் எனது மனம் மிகவும் சங்கடப் பட்டுக் கொண்டே இருந்தது அவரது வார்த்தையைக் கேட்டு. நான் எனது பணிகளை எல்லாம் முடித்துவிட்டு மனம் குத்திக்கொண்டே இருந்ததனால் மீண்டும் நேராக வடக்கிபாளையம் வந்த பொழுது மூன்று இன்ஸ்பெக்டர்கள். நான்கு காவலர்கள் நின்று கொண்டிருந்தார்கள். நான் என்னை குற்றம் கூறிய இன்ஸ்பெக்டரிடம் சென்று சார் நீங்கள் என்னை ஒரு அடி அடித்து இருக்கலாம் சார். அந்த சொல் நீங்கள் அன்பாக சொன்னது என்னை மிகவும் குத்திக் கொண்டு இருக்கிறது என்று கூறினேன். அவர் உடனே சார் என்ன சொல்லுகிறீர்கள் நீங்களெல்லாம் வயதானவர்கள். எங்களுடைய மதிப்புக்கு உறியவர்கள். மேலும் நீங்கள் ஒரு எக்ஸ் சர்வீஸ் மேன். நான் ஏதாவது தவறாக கூறி விட்டேனா என்று மிகவும் ஆதங்கத்துடன் கேட்டார்.

நான் கூறினேன். நீங்கள் தவறாக கூறவில்லை. உங்களுடைய வார்த்தை என்னை குத்திக் கொண்டே இருக்கிறது. நான் தவறு செய்து விட்டேனே இப்படி ஒரு சந்தர்ப்பத்தை உங்களுக்கு வழங்கி விட்டேனே என்று என் மனம் என்னை குத்துகிறது என்று கூறினேன். அதற்கு அவர் பரவாயில்லை சார் தவறென்றால் மன்னித்து விடுங்கள். காரணம் எங்கள் குடும்பமே எக்ஸ் சர்வீஸ் மேன் குடும்பம். எனது தந்தை எனது தமையன் எனது சித்தப்பா மாமா அனைவரும் எக்ஸ் சர்வீஸ் மேன். ஆதலால் எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. மேலும் தங்கள் தோற்றத்தை  உடலை பார்த்த உடனேயே நீங்கள் மிலிட்டரி மேன் ஆகத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். தாங்கள் மனது புண்பட்டால் மிகவும் வருந்துகிறேன். இதையெல்லாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள். வருந்தாதீர்கள். உங்களுடைய கருணைக்கும் உங்களுடைய வார்த்தைக்கும் மிக்க நன்றி சார். மிக மிக நன்றி. தங்கள் வீடு எங்கு உள்ளது என்ன என்ற விவரம் அனைத்தையும் கேட்டு மூன்று பேரும் சல்யூட் அடித்து சென்று வாருங்கள் சார் என்று என்னை அனுப்பினார்கள்.

அவர்கள் நன்கு மரியாதை செய்த காரணத்தினால் தான் மேலும் என் மனம் குத்திக் கொண்டே இருக்கிறது. நான் தவறு செய்யவில்லை. இரண்டு மாதம் கழித்து ஒரு ஆவலில் வெளி உலகத்தை பார்ப்போம் என்ற காரணத்தினால் சென்று விட்டேன். ஆனால் இதுபோன்ற ஒரு வார்த்தை கேட்டது மிகவும் சஞ்சலமாக இருக்கிறது. இதை உங்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியதால் பகிர்ந்து கொண்டேன் நன்றி.

Comments

Popular posts from this blog

மாசாணி அம்மன் வரலாறு

கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும்

யாயும் ஞாயும் யாராகியரோ