வரங்களும் சாபங்களும்

இன்று நாம் காணவிருப்பது சில சாபங்களும், வரங்களும். அது என்ன? சாபங்களும் வரங்களும், நமது இதிகாச புராணங்களை படித்தால் அதில் பெருமளவு வருபவை சாபங்களும் வரங்களும் தான். சாபத்தின் காரணமாக பிறவி எடுப்பது, வரத்தின் காரணமாக பிறவி எடுப்பது, என்று பல பல கதைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அவற்றில் சிலவற்றை தொடர்ந்து பார்ப்போம்.

பிரம்மதேவன் சனகாதி முனிவர்களை படைத்தார். அவர்கள் பிரஜாபதி ஆக வேண்டும் என்று விரும்பினார். ஆனால் அவர்கள் அதை வெறுத்து தவத்தை நாடினார்கள். ஒருசமயம் மகாவிஷ்ணுவைத் தரிசிக்க வைகுண்டம் சென்றனர். அப்போது வாயில் காப்பாளர்களாக இருந்த ஜெய விஜயர்கள் அனுமதி மறுக்க உடனே அவர்களுக்கு சாபம் கொடுக்க ஆரம்பித்தனர். இதுதான் நமது இதிஹாச புராணத்தில் தோன்றிய முதல் சாபம்.

இதன் காரணமாகத்தான் இரணியன், இரணியாட்சன், கும்பகர்ணனும், ராவணனும், கம்சனும்,  சிசுபாலனும், தோன்றினார்கள். 

அது மாத்திரமல்ல வராக அவதாரம், நரசிம்ம அவதாரம் ,ராம அவதாரம், பலராம, கிருஷ்ண அவதாரம் இந்த சாபத்தின் காரணமாகத் தான் எடுக்க வேண்டி வந்தது.

இனி இரண்டாவது சாபம் பார்ப்போம். பிருகு முனிவரின் மனைவி அரக்கர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக மகாவிஷ்ணுவே வெகுண்டு அவரின் தலையை வாங்க அது கண்டு கோபமுற்ற பிருகு முனிவரும் மகாவிஷ்ணுவை நோக்கி நான் என் மனைவியை எவ்வாறு பிரிந்திருந்து அவதியுறுகின்றேனோ அது போல நீயும் உன் மனைவியை பிரிந்து இருப்பாய். பூலோகத்தில் மானிடனாக பிறந்து, என்று ஒரு சாபம் கொடுக்கிறார்.
 அப்போது மகாவிஷ்ணு அதை நான் மனமுவந்து கேட்கிறேன் என்று கூறுகிறார்.

பரசுராமரின் தந்தை ஜமதக்னி முனிவர். அப்போது அங்கு ஆட்சி செய்து கொண்டிருப்பவன் கார்த்தவீர்யார்ஜுனன் என்ற மன்னன். ஜமதக்கினி முனிவரின் மனைவி ரேணுகாதேவி யிடம்  மன்னன் தவறாக நடக்க முற்பட, எச்சரிப்பதற்காக அவனுடைய அரண்மனைக்கு சென்றிருந்த நேரம் ஜமதக்கினி முனிவர் தன் மனைவியை காணோம் என்று தேடிக் கொண்டிருக்கிறார். அனைத்து இடங்களிலும் தேடி வெறுப்புற்று, சலிப்புற்று, மகாவிஷ்ணுவை நோக்கி நான் என் மனைவியைக் காணாமல் எப்படி அவதியுருகிறேனோ அதே போல் நீயும் உன் மனைவியைப் பிரிந்து அவதியுறுவாய் என்று ஒரு சாபம் கொடுக்கிறார். அதையும் மகாவிஷ்ணு நான் மனமுவந்து ஏற்கிறேன் என்று கூறினார். இந்த இரண்டு சாபத்தின் காரணமாகத் தான் ராமாவதாரம் ஏற்பட்டு சீதையை ராமன் பிரிந்திருக்க வேண்டிய ஒரு சந்தர்ப்பம் சூழ்நிலை ஏற்பட்டது. இது முனிவர்களின் சாபத்தால் விளைந்த வினை.

சாபத்தையே கூறுவதை விட ஒரு வரத்தையும் கூறுவது சிறப்பாக இருக்கும் என்ற காரணத்தினால் அடுத்து ஒரு வரத்தை கூற விரும்புகிறேன்.

சூரியனையே உதிக்காதே என்று கூறிய பதிவிரதை நளாயினி, தன் கணவன் குஷ்டரோகத்தால் அவதியுற்று ஒருமுறை அவன் கை சுண்டு விரல் அவள் உண்ணும் உணவோடு கலக்க அவள் அதையும் உண்டுவிட்டு பெருமிதமாக கணவனுக்கு பணிவிடை செய்துகொண்டிருந்தார்.

ஆனால் அவள் இல்லற வாழ்வில் ஒரு போதும் சுகம் அனுபவிக்காத காரணத்தினால், இறைவனை நோக்கி எனக்கு அடுத்த பிறவியில் நல்ல அழகான, குணமுள்ள, நேர்மையான, பலசாலியான, வீரமான தர்மவான் ஆன  கணவர்
வேண்டும் வேண்டும் வேண்டும் வேண்டும் வேண்டும் என்று கூறினார்.

இவ்வாறு இவர் ஐந்து முறை கூறிய காரணத்தினால், அடுத்த பிறவியில் பாஞ்சாலியாகப் பிறவி பெற்று ஐந்து கணவர்களை அடைந்தார் .இது அவள் வேண்டிய வரத்தின் படி ஐந்து கணவர்களை பெற்றாள்

மிகவும் நீண்டு விட்ட காரணத்தினால் வரத்தையும், சாபத்தையும் ,இன்று இத்துடன் முடித்துக் கொண்டு மீண்டும் நாளை தொடர்வோம் நன்றி.

Comments

Popular posts from this blog

மாசாணி அம்மன் வரலாறு

கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும்

யாயும் ஞாயும் யாராகியரோ