வீபீஷணனின் முற்பிறவி

தெரிந்த கதை. தெரியாத வரலாறு .

இன்று நாம் காண இருப்பது ராவணனின் தம்பியும் தங்கையும் ஆன விபீஷணனும் சூர்ப்பனகையினையும் பற்றியது. அவர்களது முன் பிறவியில் அவர்கள் என்னவாக இருந்தார்கள் ??எப்படி விபீஷணன் நல்லவனாக இருந்தான்! அவன் எவ்வாறு ராமனிடம் சேர்ந்தான்! என்பதைப் பற்றிய விரிவாக விளக்கமாக எடுத்துக் கூறும் கதை இது .அதை சற்று நன்கு கவனித்து பார்ப்போமா.

(இன்றுவரை சிலபல அலுவல் நிமித்தமாக கதை எழுதாமல் இருந்தேன். இப்பொழுது சும்மாவே வீட்டில் உட்கார்ந்து கொண்டு இருப்பதால் தினமும் ஒரு வரலாறு எழுதலாம் என்று உள்ளேன்.)

சத்திய விரதன் என்று ஒரு அரசன் இருந்தான் .அவனுக்கு ஒரே மகன் .பெயர் சந்திரசூடன் .அவன் மிகவும் விஷ்ணுவின் மீது பக்தி கொண்டவனாக இருந்தான். சத்தியவிரதனுக்கு ""அனந்தன் ""என்று ஒரு ராஜ குரு இருந்தார் .அந்த மன்னனுக்கு குருவின் வாக்கு வேதவாக்கு .குரு சொன்னால் அதற்கு அப்பீலே கிடையாது.குருவிற்கு" சுமுகி"என்ற ஒரு மகள் இருந்தாள். மன்னன் மகனும் குருவின் மகளும் தந்தையின் குருகுலத்தில் இருந்து சாஸ்திரங்கள் அனைத்தும் கற்று வந்தார்கள்.

தந்தை மகள் என்ற வித்தியாசம் பாராமல் தனது மகளுக்கும் மன்னன் மகனுக்கும் அனைத்து சாஸ்திரங்களையும் நல்ல முறையில் கற்றுக் கொடுத்தார் .இருவரும் கல்வி கேள்விகளில் நன்கு தேர்ச்சி பெற்றனர்.

இவ்வாறு இருக்கையில் சுமுகிக்கு திருமணவயது வந்தது .அவள் மன்னன் மகனாகிய சந்திரசூடனை திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்று விரும்பினாள். இந்த விருப்பத்தை அவனிடம் தெரிவிக்கும் பொழுது அவன் அதற்கு சம்மதிக்கவில்லை .மேலும் அவளிடம் நீ என் குருவின் மகள். ஆகையால் நீ எனக்கு தங்கை முறை போன்றவள். நான் உன்னை வேறு விதமாக நினைக்க இயலாது. நான் உனக்கு பெரிய இடத்தில் மணமகனை தேர்ந்தெடுத்து எனது செலவிலேயே அனைத்தையும் செய்து சிறப்பாக திருமணம் செய்து வைக்கிறேன் என்று கூறினான்.

ஆனால் அதற்கு சுமுகி சம்மதிக்கவில்லை. தொடர்ந்து தன் விருப்பத்தை அவனிடம் தெரிவித்துக் கொண்டிருந்தாள்.அதற்கு அவன் ஒரேடியாக அவளது வேண்டுகோளை ஏற்க மறுத்துவிட்டான்.

ஒரு நாள் மாலை வேளையில் சந்திரசூடனுக்கு குரு கற்றுக் கொடுத்த பாடத்தில் சற்று சந்தேகம் ஏற்பட்டதால், குருவிடம் சந்தேகம் கேட்டு நிவர்த்தி செய்து கொள்வது ,என்று நினைத்து ஆசிரமத்திற்கு வந்தான்.அச்சமயம் குரு ஆசிரமத்தில் இல்லை .உடனே  சுமுகி அவனைக் கண்டவுடன் அவனைக் கட்டி அணைத்து என்னை மனைவியாக ஏற்றுக் கொள்ளுங்கள் என்று கெஞ்சினாள்.உடனே அவன் அவளை வேகமாக உதறிவிட்டு, நீ இப்படி செய்வது முறையா ?நான் உன் சகோதரன் போன்றவன். உன்னை ஏற்றால் நான் குருவுக்கு துரோகம் செய்த பாவத்திற்கு ஆளாவேன் என்று கூறிவிட்டு வேகமாக அந்த இடத்தை விட்டு சென்று விட்டான்.

உடனே மிகவும் கோபம் கொண்டது சுமுகி அவனை எப்படியாவது அடைய வேண்டும் என்று மனதில் நினைத்து, தன் உடைகளை கலைந்து ,வளையலை உடைத்து ,தலை முடியை விரித்துப் போட்டுக்கொண்டு அழுதுகொண்டு உட்கார்ந்திருந்தாள்.அந்த நேரத்தில் தந்தை ஆசிரமத்திற்கு வர மகளைப் பார்த்து அதிர்ந்து !என்ன விவரம் என்று கேட்க ,அவள் நீங்கள் ஆசிரமத்தில் இல்லாத சமயத்தில் சந்திரசூடன் வந்து என்னிடம் தவறாக நடந்து கொண்டு விட்டான் !என்று பொய் சொல்லிவிட்டு தொடர்ந்து அழுது கொண்டிருந்தாள்.

குரு ,மகளை முழுவதும் நம்பி என்ன ஏது என்று விசாரிக்காமல் நேராக அரசனிடம் சென்று அப்படியே தெரிவித்தார். அரசனும் குருவை முழுமையாக நம்பி என்ன ஏது என்று விசாரிக்காமல், சந்திரசூடன் எங்கிருந்தாலும் அவனை கைது செய்து மாறு கை மாறு கால் வாங்கி விடுங்கள் என்று கட்டளை இட்டார்.

வீரர்கள் சந்திரசூடனை தேடிப்பிடித்து, அவனைக் கைது செய்து ,காட்டிற்கு இழுத்துச் சென்று ,அவனுடைய ஒரு கையையும் ,காலையும் ,வெட்டினார்கள். பிறகு அப்படியே காட்டில் விட்டுவிட்டு, அரசனிடம் சென்று தங்கள் கடமையை நிறைவேற்றி விட்டோம், என்று கூறினார்கள்.

காட்டில் தனிமையில் விடப்பட்ட சந்திரசூடன் ,விஷ்ணுவை நினைத்து பகவானே !நான் குற்றமற்றவன் ,என்று உங்களுக்குத் தெரியும் .நான் மனதால் எந்தத் தவறும் ,பாவமும் ,செய்யவில்லை. ஒரு குற்றமும் செய்யாத எனக்கு ஏன் இந்த தண்டனை என்று கூறி அழுதான்.

அப்பொழுது சந்திரசூடனுக்கு "ஆதிசேஷன் "தரிசனம் தந்து சந்திரசூடா, நீ இந்த பிறவியில் எதுவும் தவறு செய்யவில்லை ,என்பது உண்மை. ஆனால் முந்தைய பிறவிகளில் செய்த தீவினையின் காரணமாக ,சஞ்சித வினை காரணமாக, உனக்கு இப்பொழுது இந்த தண்டனை கிடைத்தது. ஆனால் நீ மிகவும் விஷ்ணு மீது பக்தி கொண்ட காரணத்தினால், ஸ்ரீவிஷ்ணு ராமபிரானாக அயோத்தியில் அவதரிக்க இருக்கிறார் .அப்போது அவரது தம்பியாக நான் லட்சுமணன் ஆக பிறப்பேன் .நீ தீமையே உருவான ராவணனின் தம்பி விபீஷணன் ஆக மிகவும் நல்லவனாக பிறப்பாய் .சுமுகி இராவணனின் தங்கை சூர்ப்பனகையாக பிறப்பாள்.அப்போது லட்சுமணன் ஆகிய நான் அவளது மூக்கையும், காதையும்  அறுத்து அவளை அவமானப்படுத்துவேன். என்று கூறினார். இந்த ஜென்மத்தில் உனக்கு அவள் செய்த துரோகத்திற்கான தண்டனையை அடுத்த பிறவியில் நான் அவளுக்கு கொடுப்பேன் என்று கூறினார்.

நீ ,ஸ்ரீராமபிரானின் சிறந்த பக்தனாக இருந்து அவரிடம் சரணடைவாய்.ஸ்ரீராமர் பெயர் உலகில் உள்ள வரையில் உன் பெயரும் நிலைத்து நிற்கும், என்று ஆதிசேஷன் கூறி விட்டு மறைந்தார்.

பிறகு அவர் கூறியபடியே ராமாயணத்தில் அனைத்தும் நடந்தது என்பதை நாம் அனைவரும் அறிந்ததே.

இதுவே விபீஷணன் சூர்ப்பனகை ஆகியோரின் முற்பிறவி.

இது வரை படித்தமைக்கு நன்றி நன்றி நன்றி.

நாளை வேறு ஒரு வரலாறுடன் சந்திப்போம்.

Comments

Popular posts from this blog

மாசாணி அம்மன் வரலாறு

கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும்

யாயும் ஞாயும் யாராகியரோ