மாதங்களின் பெயர்கள் எவ்வாறு தோன்றியது

தெரிந்த கதை .தெரியாத வரலாறு.

 இன்று நாம் காண இருப்பது தமிழ் மாதத்தில் 12 மாதங்களின் பெயர்கள். அது எவ்வாறு ஏற்பட்டது?? என்ன? என்பதை பற்றி சற்று விரிவாக விளக்கமாக பார்ப்போமா!.

நான் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் பொழுது எனது தமிழாசிரியர் எந்த ஒரு பாடத்தையும் மிகவும் தத்துரூபமாக நடத்துவார். ராமாயணத்தில் கும்பகர்ணனை எழுப்பும் படலத்தில் கையிலுள்ள பிரம்பை (அந்த காலத்தில் ஆசிரியர்கள் பிரம்பு வைத்துக்கொள்வது வழக்கம்). உலக்கையாக  பாவித்துக் கொள்ளுங்கள் என்று கூறி , உரலில் உலக்கையை இடிப்பது போல் ""உறங்குகின்ற கும்பகர்ண எழுந்திராய் எழுந்திராய் ""என்று உலக்கையால் குத்தி எழுப்புவார்கள் என்று தத்ரூபமாக நடித்துக் காட்டுவார்.

வேறொரு சமயத்தில் ஒரு பாடலை விவரிக்கும் பொழுது"" தேரோடும் வீதியெல்லாம் செங்கயலும்  சங்கினமும் நீரோடு உலாவி வரும் நெல்லையே கார் ஓடும் கந்தர்ந்த ரந்தரத்தர் கந்தரந்த ரந்தரத்தர் கந்தரந்த ரந்தரத்தர் காப்பு"" என்ற பாடலை அது தோன்றிய விதம் அதன் வழித் தோன்றல்கள் அனைத்தையும் அழகாக விவரமாக கூறுவார் .(இதைப் பற்றிய பதிவை நான் தனியாக இடுகிறேன்).

இதுபோன்ற பாடல்களுக்கு விளக்கம் அளித்து ,ஒரு நாள் ,மாதங்கள் தமிழ் மாதங்கள் 12 எவ்வாறு தோன்றியது?? ஏன் அதற்கு அவ்வாறு பெயர் வந்தது!? என்பதை மிகவும் தமாஷாக ஒரு கதை போல் சொல்வார் .இது முழுக்க முழுக்க கற்பனை கதை என்றும் கூறி விடுவார். அவர் கூறியதை அப்படியே இங்கு தருகிறேன்.

அதாவது கார்த்திகை என்ற பெயருள்ள ஒரு இளம்பெண் மாடியில் நின்று கொண்டிருக்கிறாள். (கார்த்திகை). அப்பொழுது ஒரு குறும்பு வாலிபன் ரோட்டில் நடந்து போய்க் கொண்டிருக்கின்றான். அவன் மாடியில் உள்ள இளம்பெண்ணை காண்கிறான். அவள் அணிந்திருக்கும் உடை மார்புப்பகுதியில் கிழிந்து இருக்கிறது. உடனே அவன் மார் கிழி என்று கூறுகிறான்.(மார்கழி) . அவளும் உடனே அவனைப்பார்த்து அப்படியானால் அதை ""தை"" என்கிறாள்(தை).

அவன் உடனே அது மாசு (மாசி) குற்றம் என்கிறான்.அவள் உடனே அதற்கு உனக்கும் பங்கு உண்டு என்று கூறுவதுபோல் அதில் பங்கு நீ (பங்குனி)என்று கூறுகிறாள்., அவ்வாறு கூறிவிட்டு உடனே சில்லறையாக (சித்திரை) வைகாசு (வைகாசி)என்கிறாள். உடனே அவன் அவளைப் பார்த்து ஆர் நீ (ஆனி) என்று கேட்கிறான். அவள் அதற்கு நான் ஆடிப் பிழைப்பவள் (ஆடி) என்று கூறுகிறாள். அவன் உடனே வெகுண்டு அப்படியே ஆவ நீ (ஆவணி) (ஆகக்கடவது என்று பொருள் )கூறுகிறான். உடனே அவள் கோபங்கொண்டு புரட்டா  சீ (புரட்டாசி)என்கிறாள். புரட்டா செய்கிறாய் சீ போ என்று கூறுகிறாள்.அவனும் உடனே மிகவும் மனம் வருந்தி சாலையில் சென்று கொண்டிருக்கும் பொழுது ஒரு உணவகத்தை பார்த்து ஐ பசி (ஐப்பசி) என்று அந்த உணவகத்துக்கு செல்கிறான் என்று கூறி முடித்தார்.

இதுவே 12 மாதங்கள் தோன்றியதற்கான வரலாறு என்றும் மாதங்களின் பெயர்களை எளிமையாக ஞாபகம் வைத்துக் கொள்வதற்கு இந்த கதை உதவும் என்றும் கூறுவார்.

இதுவரை படித்தமைக்கு நன்றி நன்றி.

நாளை வேறு ஒரு வரலாறு டன் சந்திப்போம்.

Comments

Popular posts from this blog

மாசாணி அம்மன் வரலாறு

கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும்

யாயும் ஞாயும் யாராகியரோ