இக்கரைக்கு அக்கரை பச்சை

தெரிந்த கதை .தெரியாத வரலாறு.

 ஒரு பழமொழி ஒன்று கூறுவார்கள். இக்கரைக்கு அக்கரை பச்சை என்று. அதற்கு அர்த்தம் என்னவென்றால் ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் பொழுது மற்றவனைப் பார்த்தால் அவன் சுகமாக இருப்பதாக தோன்றும். ஆனால் உண்மையில் அவன் அல்லல் படுகிறான் என்பது அவனுக்கே மட்டும் புரியும் .இதை விரிவாக விளக்குவதற்காக ஒரு கதை.

ராமபிரானின் முன்னோரான மாந்தாதா என்பவர் அயோத்தியை ஆண்டு கொண்டிருந்தார் .அப்பொழுது சவுபரி என்னும் ஒரு வயதான மகரிஷி இருந்தார். அவருக்கு சகல யோகங்களும் சித்திகளும் அவருள் அடக்கம் .ஆதலால் அவர் நீரின் அடியிலிருந்து தவம் செய்யும் ஆற்றல் பெற்றிருந்தார். அவ்வாறு ஒருநாள் நீரினில் இருந்து தவம் செய்து கொண்டிருக்கும் பொழுது ஒரு ஆண் மீனும் பெண் மீனும் மகிழ்ச்சியுடன் ஜோடியாக விளையாடுவதை கண்டார்.

அதைக்கண்ட மகரிஷிக்கு தானும் ஏன் இல்லறத்தில் இணைய கூடாது என்ற எண்ணம் ஏற்பட்டது .அதை செயலாற்ற உடனே மாந்தாதாவின் அரண்மனையை நோக்கி புறப்பட்டார் .நேராக மன்னரிடம் சென்று மன்னா நான் இல்லற வாழ்வில் ஈடுபட விரும்புகிறேன். உனக்கு 50 பெண்கள் உள்ளனர் அவர்களில் ஒருத்தியை எனக்கு திருமணம் செய்து கொடு என்று கேட்டார்.

மன்னருக்கு வயதான மகரிஷிக்கு எவ்வாறு பொண்ணை கொடுப்பது என்ற தயக்கம் .அதே நேரம் இல்லை என்று சொன்னால் அவர் சபித்து விடுவார். ஆதலால் சற்று தீர ஆலோசித்து ரிஷியே தாங்களே அந்தப்புரம் சென்று என் பெண்களில் யார் தங்களை விரும்புகிறார்களோ அவர்களை நீங்கள் மணமுடித்துக் கொள்ளுங்கள் என்று கூறினார். மன்னர் அவ்வாறு கூறியதற்கு காரணம் எந்தப் பெண்ணும் வயதானவரை மணக்க மாட்டார் என்ற ஒரு நம்பிக்கையில் தான்.

உடனே ரிஷி தன் தவ வலிமையால் தன்னை ஒரு அழகிய இளைஞனாக மாற்றிக்கொண்டு அந்தப்புரம் சென்றார். கம்பீரமாக ஒரு இளைஞன் உள்ளே வருவதை கண்ட ராஜகுமாரிகள் அனைவரும் அவனது அழகில் மயங்கி மனதை பறி கொடுத்தனர் .எல்லோருமே அவனை மணந்து கொள்ள போவதாக தந்தையிடம் கூறினர் .தந்தையும் வேறு வழியின்றி 50 பெண்களையும் சவுபரிக்கே மணம் செய்து வைத்தான்.

உடனே ரிஷி தேவலோக தச்சன் ஆன விஸ்வகர்மாவை அழைத்து 50 மனைவிகளுக்கும் 50 மாளிகைகளை கட்டுவதற்கு ஏற்பாடு செய்தார் .பிறகு தன்னை 50 இளைஞர்களாக உருமாற்றிக் கொண்டு இல்லற வாழ்க்கை நடத்த ஆரம்பித்தார் .ஐம்பது மனைவியரும் ஆளுக்கு பத்து குழந்தைகளைப் பெற்றனர் .குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களானதும் அவர்களுக்கு திருமணம் நடத்தி வைத்தார். பேரன் பேத்திகள் பிறக்கவே குடும்பம் மேலும் பெரிதானது .அதற்கேற்ப தொல்லைகள் அதிகரித்தன. சமாளிக்க முடியாமல் திணறினார்.

இவ்வாறு தான் துன்பமும் தொல்லைகளும் அனுபவிப்பதற்கான காரணம் என்ன என்று சற்று ஆற அமர யோசித்தார். தவ வாழ்வில் ஈடுபட்ட போது மீன்களை கண்டு கணப்பொழுதில் எடுத்த விபரீத முடிவு தான் இந்த நிலைக்கு ஆளாக நேர்ந்தது என்று வருந்தினார். மீண்டும் குடும்ப பொறுப்பை இளையவர்களிடம் விட்டுவிட்டு  தவ வாழ்க்கைக்கே திரும்பினார்.

குடும்பத்தில் இருப்பவர்கள் சன்னியாசிகள் தான் நிம்மதியாக இருக்கிறார்கள் என்று கூறுவார்கள். ஆனால் சாமியார்களோ  குடும்பஸ்தர்கள் தான் இனிமையாக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று கூறுவார்கள். இதைத்தான் இக்கரைக்கு அக்கரை பச்சை என்று கூறுவார்கள்.

இதுவரை படித்தமைக்கு நன்றி நன்றி நன்றி.

நாளை வேறு ஒரு வரலாறு உடன் சந்திப்போம்.

Comments

Popular posts from this blog

மாசாணி அம்மன் வரலாறு

கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும்

யாயும் ஞாயும் யாராகியரோ