கற்புக்கரசி களைப்பற்றி பதிவிரதைகளைப் பற்றி

வாழ்வில் கற்காலம் தொட்டு இக்காலம் வரை நாம் அனேக கதைகளிலும் புராணங்களிலும் கற்புக்கரசி களைப்பற்றி பதிவிரதைகளைப் பற்றி பத்தினிகளை பற்றி கேட்டிருப்போம். படித்திருப்போம் .ஆனால் வாழ்க்கையில் அது போன்ற ஒரு பத்தினியை பார்த்து இருப்போமா என்பது சற்று சந்தேகம். என் வாழ்வில் அதுபோல் நான் ஒருவரை பார்த்திருக்கிறேன். அதைப்பற்றி இங்கு அவசியம் அனைவருக்கும் கூற வேண்டும் என்று நினைக்கிறேன்.

நாங்கள் 2005இல் திருச்சியில் சுமங்கலி பிரார்த்தனை செய்ய வேண்டும் என்பதற்காக ஒன்பது கஜம் புடவை வாங்க வேண்டும் எங்கு செல்லலாம் எங்கு வாங்கலாம் சாரதாவா!! என்ன ஏது என்று யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது எங்கள் கம்பரசம்பேட்டை அக்ரகாரத்தில் ஒரு மாமி பெரியார் நகரில் ஒரு மாமி நல்ல புடவைகளை விற்றுக் கொண்டிருக்கிறார் .வீட்டில் வைத்துதான் வியாபாரம் செய்கிறார். அவரிடம் சென்று வாங்குங்கள் புடவையும் நன்றாக இருக்கும் .விலையும் அதிகம் இருக்காது என்று கூறினார். அதைக் கேட்டு அவருடைய விலாசத்தை வாங்கிக் கொண்டு எங்கள் குடும்பத்தில் உள்ள நாலைந்து பேர் வாங்குவதற்காக அங்கு சென்றோம்.

பெரியார் நகரில் அவர்கள் வீட்டிற்கு சென்ற பொழுது வீடு மிகவும் சாதாரணமான வீடு. வயதான கணவனும் மனைவியும் மட்டும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் .அவர்களுக்கு ஜீவாதாரம் புடவை விற்று வரும் லாபத்தில் தான் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள் ஏன் இதை இங்கு முக்கியமாக கூறுகிறேன் என்றால் பின்வரும் நிகழ்ச்சிகளைக் கேட்கும் பொழுது நான் இங்கு கூறுவது சரி என்று உங்களுக்கே தோன்றும்.

நாங்கள் சென்ற சமயம் மாமி எங்களை வாருங்கள் என்று அழைத்து புடவை வாங்க வந்தீர்களா!!? சற்று காத்திருங்கள். என் கணவர் பூஜையை முடித்து விட்டார் .அவர் உணவருந்த வேண்டிய நேரம். அவருக்கு உணவு படைத்துவிட்டு வந்து தான் நான் உங்களுக்கு புடவையை காண்பிக்க முடியும் .ஒரு கோடி ரூபாய் லாபம் என்றாலும் என் கணவருக்கு உணவு படைக்காமல் நான் வரமாட்டேன் .தாங்கள் அரைமணிநேரம் காத்திருந்தீர்கள் என்றால் நல்லது. அதற்கு மேல் நான் ஒன்றும் சொல்ல விரும்பவில்லை என்று கூறினார்கள். வாழ்க்கையின் ஆதாரமே புடவை விற்று வரும் காசில் தான் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இருந்தும் கணவனே கண்கண்ட தெய்வம் என்று கூறுவதுபோல் கணவனுக்கு உணவு படைக்காமல் வேறு ஒரு காரியத்திலும் இறங்க மாட்டேன் என்று அவர்கள் கூறியது எங்களை புல்லரிக்கச் செய்து விட்டது. நாங்கள் வேறு வழியில்லாமல் அவர் கணவர் உணவருந்தும் வரை அங்கேயே காத்திருந்தோம்.

கணவருக்கு உணவு படைத்துவிட்டு டிவி சீரியல் பார்க்கும் இந்த காலத்தில், விளம்பர நேரத்தில் மட்டுமே கணவருக்கு சட்னி-சாம்பார் போடும் இந்தக் காலத்தில், கணவன் அருகிலேயே நின்று அவருடைய தேவைகளை நன்கு கவனித்து, அவர் உணவருந்தும் வரை காத்திருந்து ,உணவருந்திய பின் அவருக்கு படைக்கப்பட்ட இலையை எடுத்து எச்சிலை தேய்த்துவிட்டு, கணவரை உள் ரூமில் சென்று அமர்த்தி விட்டு வந்துதான் ,எங்களுக்கு புடவையை காண்பிக்க தொடங்கினார், இதுபோன்ற ஒரு கற்புக்கரசிகள், பத்தினிகளை, இந்த காலத்தில் பார்ப்பது என்பது மிகவும் அரிது ,குதிரைக் கொம்பு, நாங்கள் அவரிடம் அவர் கூறிய விலையில் சற்றும் குறைக்காமல் அதே விலையை கொடுத்து விட்டு வேண்டிய புடவைகளை வாங்கிக்கொண்டு ஒரு மட்டற்ற மாதரசியைக்  கண்டோம் என்ற பெருமையுடன், திருப்தியுடன் நாங்கள் எங்கள் வீட்டிற்கு வந்து சேர்ந்தோம். உடலும் மனதும் மிகவும் அமைதியாகவும் சாந்தமாகவும் இருந்தது. இதை அனைவரிடமும் கூற வேண்டும் என்று தோன்றியதால் இப்பதிவைப் பதிகிறேன். நன்றி.

Comments

Popular posts from this blog

மாசாணி அம்மன் வரலாறு

கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும்

யாயும் ஞாயும் யாராகியரோ