தீபாவளி கட்டுரை ஒன்று

#அந்த ஒரு தீபாவளி#

தீபாவளியைப் பற்றி சில கெட்ட விஷயங்களையும் சில நல்ல விஷயங்களையும் பகிரலாம் என்று இருக்கிறேன்.

 1.எனது சிறிய வயதில் புஸ்வானம் விடுகையில் எனது தங்கை இன்னும் எரியவில்லையே  என்று திடீரென்று தன் முகத்தைப் புஸ்வானத்தில் காண்பிக்க அது திடீரென்று தீ பற்றி சிதற முகம் முழுவதும் தீக்காயங்கள் ஆகி புருவம் முதற்கொண்டு வெந்துவிட்டது .அவளை உடனடியாக டாக்டரிடம் அழைத்து கொண்டு போனால்  அந்த சிறு வயதிலும் அவள் சொன்ன வார்த்தை தான் இன்னும் காதில் ரீங்காரம் அடிக்கிறது. எனது எல்லா வெடியையும்  பத்திரமா பாத்துக்கோங்க யாரும் வெடிக்காமல் பார்த்துக் கொள்க என்று கூறினார்.
 துன்பத்திலும் இன்பம் என்று கூறுவது இதைத் தான்.

2. நான் ஒருமுறை விமானப்படையில் இருந்து விடுமுறையில் வரும் பொழுது என் அண்ணன் இதே புஸ்வானத்தை கையில் வைத்து பற்றவைக்கும்  பொழுது திடீரென்று வெடித்து கை முழுவதும் தீ பரவி தோல் முழுவதும் வெள்ளை வெளேரென்று ஆகி நான் விடுமுறை முழுவதும் என் அண்ணனின் தீக்காயத்திற்காக கூடவே இருந்து ஒருவழியாக தோல் வளர ஆரம்பித்து பல வருடங்கள் வளராமல் திருமணத்திற்கு பெண் பார்க்கச் செல்லும் பொழுது கூட இது வந்து தொழுநோயா ? தோல் வியாதியா? என்று கேட்கும் அளவிற்கு பல வருட காலம் அந்த தோல் வளராமல் இருந்தது .

3.இனி சில நல்ல விஷயங்களை பார்ப்போம் .நான் விமானப் படையை விட்டு கோவையில் யுனிவர்சல் ரேடியேட்டரில் பணிசெய்து பின் அதிலிருந்து விலகி யுனைடெட் இன்ஷூரன்ஸில் சேர்ந்த பொழுது யுனிவர்சல் ரேடியேட்டரில்  பணிசெய்த காலத்திற்கு எனக்கு போனஸ் வழங்கினார்கள். அதுவரை நான் போனசை கண்ணால் பார்த்ததே இல்லை. காரணம் போனஸ் வழங்கும் பணத்திற்கு மேல்  இருந்தது எனது சம்பளம் .ஒரு நல்ல அமௌன்ட் வந்தவுடன் அனைவரும் கோவைக்கு சென்று (அப்பொழுது நாங்கள் சூலூரில் இருந்தோம் )பெரிய துணிக்கடையில் அனைவருக்கும் போதும் போதும் என்று சொல்லும் அளவுக்கு துணியும் இனிப்பும் பட்டாசும் வாங்கிக்கொண்டு மிக மகிழ்ச்சியாக வீடு திரும்பினோம். அந்த ஒரே ஒரு தீபாவளி 1989 ஆம் வருடம் மிக மிக சிறப்பாக நடந்தது என்பதில் சந்தேகமில்லை.

எனது தலை தீபாவளி.

எனது தலை தீபாவளிக்கு நான் விமானப் படையில் டெல்லியில் இருந்த பொழுது விடுமுறைக்காக போராடி கடைசி நிமிடத்தில் விடுமுறை கிடைத்து அங்கிருந்து ஜிடி எக்ஸ்பிரஸில் புறப்பட்டு சென்னை வந்து சென்னையிலிருந்து தஞ்சாவூருக்கு டிரெயினில் வந்து இறங்கி அதிகாலை நேரம் தலை தீபாவளி என்று அரக்கப்பரக்க தஞ்சையிலிருந்து திருக்காட்டுப் பள்ளிக்கு வந்து சேரும் பொழுது மணி 8. ஊரெங்கும் குதூகலம், கொண்டாட்டம் ,வெடி ,அனைவரும் மாப்பிள்ளை தலை தீபாவளிக்கு வரலையா என்று கேட்க ,திடீரென்று வந்து இறங்கி அனைவரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி எனது தலை தீபாவளியை  சிறப்பாக கொண்டாடினேன் என்று கூறவும் வேண்டுமோ.

இதுவே எனது தீபாவளி நிகழ்ச்சிகள். இன்னும் நிறைய உள்ளது. தற்போது இது போதும் என்று முடிவு செய்து இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன் .நன்றி வணக்கம்

Comments

Popular posts from this blog

மாசாணி அம்மன் வரலாறு

கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும்

யாயும் ஞாயும் யாராகியரோ