அந்த தீபாவளி கட்டுரை ரெண்டு

#அந்த தீபாவளி#_ 

நான் ஏற்கனவே ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். இது இரண்டாவது.

 1978-ம் வருடம் தீபாவளிக்கு ஒரு வாரம் முன்பாக எனது தங்கையின் திருமணம் கோவையில் பேரூரில் நடந்தது .நான் எனது தங்கை திருமணத்திற்காக டெல்லியில் இருந்து வந்தேன் .திருமணம் வியாழக்கிழமை நடந்தது. வெள்ளிக்கிழமை தங்கையை மாப்பிள்ளை வீட்டில் கொண்டு விட வேண்டும். அந்தக் காலத்தில் எது என்றாலும் வாசுக்கு (நான் தான்) எல்லாம் தெரியும் .அவன்  எல்லாம் சமாளிப்பான் . ஏனென்றால் அவன் பல ஊர்களில் இருந்து உள்ளான் என்று எல்லாவற்றிலும் குடும்பத்தில் என்னையே ஈடுபடுத்துவார்கள். எனது வயது 24 .  ஏற்கனவே மூன்று நாட்கள் தூக்கமில்லாமல் ட்ரெய்னில் வந்துள்ளேன். இரண்டு நாட்கள் திருமண  அலைச்சல்.  

ஏன் இதை கூறுகிறேன் என்றால் திருமணம் முடிந்து தங்கையை அழைத்துக்கொண்டு நாங்கள் அனைவரும் கட்டுச் சோத்து மூட்டை யுடன் பேரூரை விட்டு ஒன்பது மணிக்கு கிளம்பி விட்டோம். வரும் வழியில் சற்று ஸ்லோவாக வரவேண்டிய காரணத்தினால் அனைவரும் பதைபதைப்புடன் இருந்தார்கள் .காரணம் அன்று வெள்ளிக்கிழமை. பத்தரை மணிக்குள் வீட்டிற்கு சென்று விளக்கேற்றி விட வேண்டும் என்பது அனைவரின் அவா.

நேரம் ஆக ஆக அனைவரும் பொறுமை இழந்தனர் (எனது தங்கை அப்பொழுது பொள்ளாச்சியில் இருக்கிறார் நான் டெல்லியில் இருக்கிறேன்) ஒருவழியாக பத்து பத்துக்கு பொள்ளாச்சி வந்து அவசர அவசரமாக பஸ்ஸிலிருந்து இறங்கி ஆட்டோ பிடித்து 10 .20க்குள் அனைவரும் வீட்டிற்குள் சென்று விட்டார்கள்.

என்னடா இன்னும் விதி விளையாட வில்லையே என்று நினைக்கிறீர்களா!!? இதோ ஆரம்பித்துவிட்டது.

வீட்டுக்கு சென்றவுடன் பெண்ணை விளக்கேற்றுமாறு கூறினார்கள்.(இங்கு தான் விதி விளையாடியது)

உடனே என் தங்கை வெள்ளி விளக்கு எங்கே, அந்த பெட்டி எங்கே?? என்று தேட வீட்டில் உள்ள அனைவரும் பெட்டியை தேட அனைவருக்கும் ஷாக் ஆகிவிட்டது. காரணம் பஸ்ஸிலிருந்து இறங்கும் அவசரத்தில் வெள்ளிப் பாத்திரம் நகை பட்டுப்புடவை அனைத்தும் ஒருசேர வைத்து இருந்த பெட்டியை (அந்தக் காலத்தில் எல்லாம் ஒரு பெரிய டிரங்க் பெட்டி தான் குடுப்பார்கள். இந்தக் காலம் போல சூட்கேஸ் எல்லாம் கிடையாது).

உடனே அவரவர் பெண் வந்த வேலை என்றும் அது என்றும் இது என்றும் என்னவெல்லாமோ கூற வாய்க்கு வந்த படி கூற ஆரம்பித்து விட்டார்கள். நான் ஏற்கனவே டயர்ட் கண் சுற்றுகிறது. ஆனாலும் தங்கைக்கு ஒன்று என்றால் அண்ணன் தானே முன்னிற்க வேண்டும். மேலும்  மாப்பிள்ளைக்கு என்றாலும் மச்சினன் தானே முன்னிற்க வேண்டும்.

உடனே நான் மேலும் ஒருவரை அழைத்துக்கொண்டு (நாங்கள் வந்த பஸ் கோவையில் இருந்து பழனி வரை செல்லும் பஸ்) பழனிக்கு பயணப்பட்டோம். (அதற்குள் அனைவரும் வேண்டாத தெய்வங்கள் இல்லை. தேங்காய் உடைக்கிறேன் .கொழுக்கட்டை செய்கிறேன் என எல்லாமும் அவர் அவர்கள் வேண்டிக் கொண்டார்கள்.

நாங்கள் உடுமலை சென்று சேரும் பொழுது அப்பொழுதுதான் உடுமலையில் இருந்து அந்த பஸ் கிளம்பியது என்று கூறினார்கள். (இந்தக் காலம் போல் அந்தக் காலத்தில் மொபைல் போன் வசதியோ  இன்டர்நெட் வசதியோ இல்லை. ஆதலால் நேரில் தான் போக வேண்டுமே ஒழிய யாரையும் போனில் காண்டாக்ட் செய்ய முடியாது).

நாங்கள் இருந்த இருக்கை கடைசி பெட்டி. டிரைவர் அமரும் இடத்திற்கு அருகில். ஒருவழியாக பழனி சென்று டிரைவரை கண்டுபிடித்து பெட்டியை பற்றி கேட்க ஓ அது உங்கள் பெட்டியா?? . நான் யாரோ தவற விட்டு விட்டார்கள். ஆபீஸில் ஒப்படைக்கலாம் என்று நினைத்தேன் என்று கூறினார் .(அவருக்கு என்னென்ன உள் இருக்கிறது என்ற விவரம் தெரியாது)உடனே ஓடிச் சென்று பெட்டியை கண்டு கையில் எடுத்தவுடன் தான் அம்மாடி !!!ஆண்டவா !!என்று ஒரு நிம்மதி பெருமூச்சு வந்தது.

இதற்கிடையில் பொள்ளாச்சியில் வந்தவுடன் செலவா?? கட்டுவதற்குக் கூட புடவை இல்லையா ??எங்கிருந்து தீபாவளி கொண்டாடுவது .தீபாவளியாவது! ஒன்றாவது ,ஒன்றுமில்லை  என்று அவரவர்கள் என் தங்கையிடம் கூற, அவள் அழ, அங்கு ஒரே கலவரம் நடந்து கொண்டிருந்தது..

அந்த நேரத்தில் பெட்டியுடன் நாங்கள் வீட்டிற்குள் நுழைய அனைவர் முகத்திலும் ஒரே ஆனந்தம் ,மகிழ்ச்சி, சந்தோஷம் ,குதூகலம், அதை வார்த்தைகளால் சொல்லி மாளாது.உடனே அதைத் தொடர்ந்து அனைத்தும் சரியாக இருக்கிறதா என்று பார்த்து வெள்ளி விளக்கை எடுத்து விளக்கேற்றி அனைவருக்கும் உணவு சமைத்து வயிறார உண்டு அங்கிருந்து கிளம்பினோம். அதற்கிடையில் வயதில் மூத்த அத்தை அவர்கள் யாரார் என்னென்ன வேண்டினீர்களோ அதை மறக்காமல் செய்து விடுங்கள் என்று கூறினார். நான் கிளம்புவதற்கு முன்பு நீ மீண்டும் வந்து இவர்களை தீபாவளிக்கு அழைத்துச் செல் என்றும் கூறினார்கள்.

நான்கு நாட்கள் நன்கு ஓய்வு எடுத்த பிறகு மீண்டும் பொள்ளாச்சிக்கு வந்து சந்தோஷமாக தங்கையும் மாப்பிளையும் அழைத்து தலை தீபாவளியை மிகவும் சிறப்பாக கொண்டாடினோம் என்பதை கூறவும் வேண்டுமோ!.

Comments

Popular posts from this blog

மாசாணி அம்மன் வரலாறு

கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும்

யாயும் ஞாயும் யாராகியரோ