சோட்டாணிக்கரை பகவதி அம்மன் ஆலயம்

தெரிந்த கதை. தெரியாத வரலாறு.

 இன்று நாம் காண இருப்பது கொடுங்கலூர் பகவதி அம்மன் கோயிலுக்கு 22 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சோட்டானிக்கரை பகவதி அம்மனைப்  பற்றியது.நாங்கள் இரிஞ்ஞாலகுடா கொடுங்கலூர் முதலியவற்றை கண்டு அதை பற்றி எழுதிவிட்டேன். இன்று சோட்டாணிக்கரை பகவதி அம்மனைப் பற்றி. இதன் வரலாற்றை சற்று விரிவாக விளக்கமாக பார்ப்போமா!??

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இப்போது உள்ள சோட்டானிக்கரை அடர்ந்த வனமாக காட்சியளித்தது .அங்கு கண்ணப்பன் என்ற ஒரு வேடுவன் வசித்து வந்தான் .(நான் குறிப்பிடும் இந்த கண்ணப்பன் கேரளாவில் வசித்த கண்ணப்பன். எந்தவிதத்திலும் காளஹஸ்தி கண்ணப்பனுக்கு சம்பந்தமில்லை .காலஹஸ்த்தியின் கண்ணப்ப நாயனார்  வேறு .இந்த வேடன் கண்ணப்பன் வேறு. முற்பிறவியில் அர்ஜுனன் பாசுபதாஸ்திரத்திற்காக  தவமிருந்து சிவபெருமான் வேடனாக வந்து அவருடன் மல்யுத்தம் செய்த காரணத்தினால் அடுத்த பிறவியில் நீ வேடனாக பிறப்பாய் என்று சாபத்தின் காரணமாக அர்ஜுனனே அடுத்த பிறவியில் கண்ணப்ப நாயனாராக  காளஹஸ்தியில் தோன்றினார் என்பது வேறு கதை.இதனையும்  அதனையும் முடிச்சு போட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்) இனி கதைக்கு வருவோம்.

இந்த கேரள கண்ணப்பன் வனத்தில் ஒரு காளியை வணங்கி பூஜை செய்து வந்தான். அந்த காளிக்கு தினமும் ஒரு கன்றுக்குட்டியை பலி கொடுத்து வந்தான். இவ்வாறு இருக்கையில் ஒரு நாள் வனத்தின் வழியே செல்லும்போது அடர்ந்த கானகத்தின் நடுவே ஒரு கருப்பு  கண்ணுக்குட்டியைக் கண்டான்.உடனே அதை பலியிடுவதற்காக தூக்கிக் கொண்டு வந்தான். அவனுக்கு மனைவி இல்லை. ஒரு மகள் மட்டுமே உண்டு .மகள் மேல் அவனுக்கு அலாதி பிரியம்.

பலியிடும் வேளையில் அவன் மகள் இடையே புகுந்து பலியிட வேண்டாம் என்று மன்றாடி கெஞ்சிக் கேட்டுக்கொண்டாள்.மகள் மேல் உள்ள பிரியத்தின் காரணமாக அவன் விட்டு விட்டான். சிறிது காலம் கழித்து அவன் மகளை ஒரு பாம்பு தீண்டி இறந்தாள். மகள் இறந்த சோகம் தாளாமல் அவன் வெதும்பி அழுது பின் மகளுக்கு ஈமக்கிரியை செய்யலாம் என்று நினைத்தபொழுது மகளின் உடலை காணவில்லை .அது குறித்து ஒரு ஒரு துறவியிடம் வினவிய பொழுது நீ தாயிடமிருந்து நிறைய குட்டியைப் பிரித்து பலி கொடுத்ததின் காரணமாகத்தான் இவ்வாறு நேர்ந்தது என்று கூறினார்.

பின்னர் அவன் அந்த கருப்பு கண்ணுகுட்டியைத்  தேடிக் கொண்டு வரும் பொழுது அதுவும் காணவில்லை. ஆனால் அங்கே இரண்டு கற்கள் மட்டும் இருந்தன .அதில் ஒன்று அவனுடைய மகள் என்றும் மற்றது அவனது கண்ணுகுட்டி என்றும் நினைத்து துறவியிடம் மீண்டும் விசாரித்தான்.

அந்த துறவி அதற்கு இரண்டு கற்களும் மிகவும் சக்திவாய்ந்த பூஜைக்குரிய தெய்வங்களாகும் என்று கூறினார்.(அதாவது அது மகா விஷ்ணுவும் லட்சுமியும் என்று கூறினார்) அதுமுதல் அவன் இந்த இரண்டு கற்களையும் பூஜித்து வந்தான் .காலங்கள் பல சென்றது .அவனும் மறைந்தான் .பின்பு அந்த கற்களை யாரும் பூஜிக்கவில்லை.

காலங்கள் பல சென்றன.புற்கள் வளர்ந்து இரு கற்களையும் மூடி விட்டன. ஒரு நாள் ஒரு பெண் வனத்தில் புற்களை  அறுக்க வேண்டி தனது அருவாவை கூர்மையாக்க அக்கற்கள் இருந்த இடத்தை நோக்கி சென்று அக்கற்களின் மேல் அரிவாளால் தேய்த்தாள். அப்போது அதிலிருந்து ரத்தம் வருவது கண்டு பயந்து போய் ஊரைக் கூட்டிக்கொண்டு வந்து காண்பித்தாள். அவ்வூர் பெரியவர்கள்  கூறியபடி  ஆராய்ந்து அது தெய்வங்கள் என்று அறிந்து அங்கு கோயிலை நிர்மாணித்து பூஜைகள் செய்து வழிபடத் தொடங்கினர். இதுவே சோட்டானி அம்மன் தோன்றிய வரலாறு. இது செவிவழிக் கதை.புராணம் என்ன கூறுகிறது என்று சற்று ஆராய்வோமா!!??.

ஆதிசங்கரர் கேரளாவில் சரஸ்வதி அம்மன் ஆலயம் இல்லை என்பதை அறிந்து அவருக்கு ஒரு ஆலயம் நிர்மாணிக்க முனைந்து கர்நாடகாவில் உள்ள மைசூர் சென்று சாமுண்டியின் முன்பு பல வருட காலம் தீவிர தவத்தில் ஈடுபட்டார்.

அவருடைய பல கால கடுந்தவத்திற்குப் பிறகு வெள்ளை ஆடை உடுத்தி சரஸ்வதிதேவி அவர்முன் காட்சி தந்தார். கேரளாவிற்கு வரவேண்டும் என்று ஆதிசங்கரர்  விண்ணப்பிக்க ஒரு கண்டிஷன் பூர்த்தி செய்வதாக இருந்தால் நான் வருவேன் என்று தாயார் கூற, என்ன என்று ஆதிசங்கரர் வினவ ,நீ முன்னே செல், நான் உன்னை பின் தொடர்ந்து வருகிறேன், ஆனால், எக்காரணம் கொண்டும் நீ திரும்பிப் பார்க்கக் கூடாது என்று கூற ,சரி என்று சொல்லிவிட்டு ஆதிசங்கரர் முன்னே நடந்து சென்றார் .தாயாரும் அவர் பின்னே நடந்து சென்றார்.

ஒரு குறிப்பிட்ட இடம் வந்தவுடன் தாயாரின் கொலுசு சத்தம் கேட்பது நின்றவுடன் விதித்த நிபந்தனையை மறந்து ஆதிசங்கரர் திரும்ப தாயார் அங்கேயே ஐக்கியமாகிவிட்டார் .அவ்வாறு  ஐக்கியம் ஆகிய இடம்தான் மூகாம்பிகை ஆலயம். ஆதிசங்கரர் தன்னுடன் கேரளா வரவேண்டும் என்று வினவ நான் இங்கு நிரந்தரமாக கோயில் கொண்டு விட்டேன். உன்னுடைய வேண்டுகோளின்படி காலையில் பிரம்ம முகூர்த்தத்தில் 3 மணி முதல் 7 மணி வரை நான் அங்கு சரஸ்வதி தேவியாக காட்சி தருவேன் என்று கூறினார் .மூகாம்பிகை ஆலயக் கதவு திறப்பதற்கு முன்பு சோட்டாணிக்கரை ஆலயத்தின் கதவு திறந்துவிடும் .மேலும் காலையில் சரஸ்வதியாகவும் மதியத்தில் லட்சுமியாகவும் இரவில் துர்காவாகவும் வெள்ளை புடவை சிவப்பு புடவை நீல வண்ண புடவை சார்த்தி காட்சி தருகிறார். மூன்று தேவிகளும் ஒருசேர காட்சி தரும் ஆலயம் சோட்டானிக்கரை பகவதி அம்மன் ஆலயம் ஆகும்.

இதுவே சோட்டானிக்கரை அம்மனைப் பற்றிய புராண வரலாறு .இங்கு பில்லி சூனியம் பேய்  முதலியவற்றிற்கு நிவர்த்தி செய்யப்படுகிறது .பேய் பிடித்தவர்களின் தலையிலிருந்து முடியை எடுத்து அங்கு உள்ள ஒரு மரத்தில் ஆணி அடித்து விட்டால் பேய் பிடித்தது சரியாகும் என்று நம்பப்படுகிறது. குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் திருமணமாகாதவர்களுக்கு நல்ல கணவன் அமைய பெண்கள் இந்த அம்மனை வழிபட்டு வேண்டிய வரத்தை பெறுகிறார்கள்.

இதுவே சோட்டானிக்கரை அம்மனின் வரலாறு ஆகும்.

இதுவரை படித்தமைக்கு நன்றி நன்றி நன்றி.

நாளை வேறு ஒரு வரலாறுடன் சந்திப்போம்.

(Last but not the least என்று கூறுவது போல் என் மனதில் தோன்றிய சில எண்ணங்களை மட்டும் இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் .இதற்கும் இந்த கட்டுரைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சில குறிப்பிட்ட கோயில்கள்.1. உதாரணத்திற்கு திருச்சியிலுள்ள குணசீலம் அங்கு சென்றால் காலையில் முதல் தரிசனம்  மனநிலை சரியில்லாதவர்கள் பித்துப் பிடித்தவர்கள் பைத்தியம் பிடித்தவர்களுக்கு முதல் தரிசனம் செய்து அபிஷேக தீர்த்தம் கொடுக்க நாளடைவில் சரியாகும் என்று கூறுகிறார்கள் .ஆனால் காலை ஆறு மணிக்கு சென்று ஆலயத்தின் முன்பு நின்று சிறு குழந்தை முதல் பெரியவர்கள் வரை காணும் பொழுது மனம் மிகவும் வேதனை அடைகிறது.2. தஞ்சாவூருக்கு பக்கத்தில் அன்பில் என்ற இடம் உள்ளது. அன்பில் பொய்யாமொழி என்று இப்பொழுது எம்எல்ஏ உள்ள அந்த ஆலயத்திற்கு சென்றால் அங்கு அம்மைநோய் பீடிக்கப்பட்டு உடலில் பெரிய பெரிய கட்டிகளாக இருக்கும். அதைப் பார்த்தால் ஆண்டவா, இந்த வாழ்வு எனக்கு கொடுத்தது மிகவும் நன்றி . நான் உனக்கு மிகவும் கடமைப் பட்டுள்ளேன். நன்றி . நன்றி என்று பலமுறை ஆண்டவனுக்கு நாம் நன்றி சொல்வோம். அவர்களையெல்லாம் அவர்கள் அங்கு  படும் வேதனை துன்பம் துயரம் இந்த  நல்ல பிறவி ஆண்டவன் நமக்கு  கொடுத்திருக்கிறார் என்று சற்றும் நாத்திகம் பேசாமல் ஆண்டவனை உளமாற மனமாற பிரார்த்தித்துக் கொண்டே இருப்போம். 3. சோட்டாணிக்கரை அங்கு சிலர் ஆடும் ஆட்டத்தையும் பேசும் வார்த்தைகளையும் கண்டால் தெய்வமே என்னை காப்பாற்று என்று இரு கரம் கூப்பி மனமுருகி வேண்டுவோம் .4. ஏர்வாடி இங்கு சென்று அங்குள்ளவர்கள் சங்கிலியால் கட்டப்பட்டு இருப்பதைப் பார்த்து அவர்கள் நடந்துகொள்ளும் விதம் பேசும் விதம் அனைத்தையும் கண்டால் மனம் வெந்து நொந்து  போவோம். இறைவா !‌இப்பிறவி கொடுத்ததற்கு உன்னை உளமார மனமார வேண்டுகிறேன் என்று தெய்வத்திற்கு நன்றி தெரிவிப்போம்.

 இக்கோயிலை எல்லாம் நான் கண் கொண்டு கண்ட
 காரணத்தினால் என் மனதில் உள்ள நிலையைக் கூறியிருக்கிறேன் வேறொன்றுமில்லை. நன்றி வணக்கம்)

Comments

Popular posts from this blog

மாசாணி அம்மன் வரலாறு

கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும்

யாயும் ஞாயும் யாராகியரோ