தீபாவளி கட்டுரை 3

#அந்த தீபாவளி#

1974 ஆம் வருடம் நான் ஆக்ராவில் இருந்தேன். வடநாட்டில் நம் தமிழ்நாட்டைப் போல் அத்தனை விமர்சையாக தீபாவளி கொண்டாடுவதில்லை .ஆனால் தீபாவளியை ஒட்டி அனைத்து வீடுகளிலும் பல வகையான இனிப்பு வகைகளை செய்வார்கள். மேலும் தீபாவளி வருகிறது என்றாலே அனைவரும் பயப்படுவார்கள். காரணம் வடநாட்டில் தீபாவளியை ஒட்டி திருட்டு கொலை கொள்ளை மிக அதிகமாக நடக்கும். அவ்வாறு இருக்கையில்,

எனக்கு ஆக்ராவில் தூரத்து சொந்தம் என்று சொல்லிக் கொண்டு ஒருவர் மிகவும் நட்புடன் இருந்தார். அங்கேயே அவர் இருந்த காரணத்தினால் அவருக்கு வட மாநில நண்பர்கள் மிகவும் அதிகம். அதில் என்னையும் ஒரு வடமாநில நண்பருடன் அறிமுகம் செய்ய நான் அவர்கள் வீட்டிற்கு அடிக்கடி சென்று அவர்கள் தரும் ஆஹாரங்களை உண்டு நான் தமிழில் பேசி ஜோக் அடிக்க, மோனோ ஆக்டிங் செய்ய, வசனம் பேச, அவர்கள் மிகவும் விரும்பி அடிக்கடி வரவேண்டும் என்று கூறுவார்கள். அவர் பெயர் ராம் லால் சர்மா.

நான் கூறிய  1974ம் வருடம் தீபாவளியை ஆக்ராவில் கழிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால், ஒன்றும் சுறுசுறுப்பின்றி தீபாவளி நாளன்று சோம்பலாக காலை நேரமாகியும் எழுந்திருக்காமல் படுத்துக் கிடந்தேன் .திடீரென்று காலை 7 மணி அளவில் எனது உறவினர் சுப்பிரமணியமும்  திரு ஷர்மாவும் என் படுக்கை அருகே வந்து எழுந்திரு, எழுந்திரு, சீக்கிரம் எழுந்து குளித்து விட்டு வா என்று கூறினார்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. என்ன காரணம்?? என்று கேட்டதற்கு சீக்கிரம் ரெடியாகி வா என்று மட்டும் கூறினார்கள்.

நானும் உடனே சரி ஊர் சுற்ற தான் கூப்பிடுகிறார்கள். இவர்களுடன் சென்றுவிட்டு தாஜ்மஹால் போகும் வழியில் உள்ள லட்சுமி விலாஸ் ஹோட்டலில் மதிய உணவை முடித்துக் கொண்டு வரலாம் என்று நினைத்து நானும் சீக்கிரம் ரெடியாகி அவர்களுடன் சென்றேன். அவர்கள் நேராக என்னை சர்மாவின் வீட்டிற்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு நடந்ததை விவரித்தால் என்னை ஆச்சரியக் கடலில் மூழ்கி திக்குமுக்காடச் செய்து விட்டார்கள்.

நான் அவர்கள் வீட்டிற்குள் நுழைந்தவுடன் அவர் தாய் தந்தையர் சகோதரி அனைவரும் ஆவோ ஆவோ என்று அழைத்து என்னை ஓரிடத்தில் உட்கார வைத்து நம் நாட்டில் கோயிலுக்கு பரிவட்டம் கட்டுவதுபோல் எனக்கு என் தலையை சுற்றி ஒரு பரிவட்டம் கட்டி ஒரு தாம்பாளத்தை எடுத்துக்கொண்டு வந்து என்னிடம் கொடுத்தார்கள். என்ன என்று கேட்க இது  உங்களுக்குத்தான் என்று கூறினார்கள் .என்ன ஏது என்று பார்த்தால் புதிய ஒரு பைஜாமாவும் ஒரு குர்த்தாவும் இருந்ததைக் கண்டு நான் ஆச்சரியப்பட்டு போனேன் .அவர்கள் லேலோ ஜி ஏ ஆப்ஹா ஹே (எடுத்துக் கொள்ளுங்கள் இது உங்களுக்குத்தான்) என்று கூறி துணியை  மாற்றி வா என்று ஒரு ரூமுக்குள் அழைத்துச் சென்று என்னை துணியை மாற்ற சொன்னார்கள்.

வடநாட்டில் அளவில்லாமல் எடுப்பது என்றால் பைஜாமாவும் குர்த்தாவும் தான். யாரிடமும் முன்பே அளவு எடுக்க வேண்டிய தேவை  ஒன்றுமில்லை. ஆதலால் எனக்கு பைஜாமா குர்தா வைத்துக் கொடுத்தார்கள். பிறகு எனக்காக அன்று அவர்கள் இட்லி சட்னி செய்து இருந்தார்கள் என்பதுதான் மிகவும் விசேஷம். பலவகையான இனிப்புகளுடன் நான்கு இட்லி சட்னியை ஒரு வெட்டு வெட்டி விட்டு நாங்கள் மூவருமாக சேர்ந்து ஆக்ரா முழுவதும் சுற்றிவிட்டு மதியம் வந்து அருமையான ஒரு உணவை முடித்துக்கொண்டு மிகுந்த சந்தோஷத்துடன் நான் சாயந்தரம் எனது கேம்பிற்க்கு வந்தேன்.

இது நடந்த வருடம் 1974. அப்பொழுது எனக்கு வயது 21. அந்த தீபாவளியை இன்று நினைத்தாலும் மனம் மிகவும் குதூகலிக்கிறது.நமது சொந்த பந்தங்கள் கூட இவ்வளவு அருமையாக ஒரு தீபாவளியை கொண்டாடி இருப்பார்களா என்ற எண்ணம் தோன்றுகிறது.

பிறகு 1977 ஆம் வருடம்  மே மாதம் வரை ஆக்ராவிலிருந்து பிறகு அனைவரிடமும் பிரியாவிடை  பெற்று நான் டெல்லிக்கு மாற்றலாகி போனேன்.

இதுவரை எனக்கு இது போன்ற ஒரு எண்ணம் தோன்றவில்லை. ஆனால், தற்பொழுது இந்தக் கட்டுரையை எழுதும்போது தோன்றுகிறது.. அதாவது அப்பொழுது எனக்கு வயது 21 என்று கூறினேன். இன்று நினைத்தால் அவர்கள் வீட்டில் ஷர்மாவின் தங்கையை எனக்கு மணமுடிக்க வேண்டும் என்று அவர்களுக்குள் பேசி வைத்து அதன் காரணமாகத்தான் எனக்கு அனைத்து சீர்வரிசைகள் செய்தார்களோ என்று தோன்றுகிறது. காரணம் நமது தமிழ்நாட்டில் தான் 28, 29 வயதில் திருமணம். வடநாட்டில் அப்போதெல்லாம் பால்ய விவாகம் என்பது மிகவும் சர்வ சாதாரணம். ஆனால் என்னிடம் அவர்கள் மனம் விட்டு வாய்விட்டு கூறவில்லை. ஆனால் தற்போது நினைக்கும் பொழுது அவர்களது நடவடிக்கை எல்லாம் யோசிக்கும் பொழுது அவர்கள் அவ்வாறு ஒரு எண்ணம் வைத்திருந்தார்கள் என்றே நினைக்கத் தோன்றுகிறது.( எப்படியோப்பா வடநாட்டுப் பெண் மனைவியாகமல் தப்பித்து விட்டு வந்து விட்டேன்.) 

(கீழே உள்ள ஃபோட்டோ எனது மனைவியுடன் உள்ளது.)

Comments

Popular posts from this blog

மாசாணி அம்மன் வரலாறு

கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும்

யாயும் ஞாயும் யாராகியரோ