சிறுகதைப் போட்டி

#சின்ன சின்ன ஆசை

சின்ன சின்ன ஆசைகள் நிறைவேறி அதற்காகத்தான் நான் எழுத வேண்டும் என்று நினைத்தேன். இடையில் சின்ன சின்ன ஆசை என்பதை விட சின்ன சின்ன சோதனை ,சின்ன சின்ன வேதனை ,சின்ன சின்ன குறும்பு முதலியவற்றை எழுதலாம் என்று நினைத்தேன். என் வாழ்க்கையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை நான் இங்கு எழுதலாம் என்று நினைக்கிறேன் .இது சின்ன சின்ன ஆசை யா சின்ன சின்ன வேதனையா  என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

எனக்கு ஒரு எட்டு அல்லது ஒன்பது வயது இருக்கும். 63 ,64 ஆம் ஆண்டு நாங்கள் பழனியில் ஓட்டல் வைத்திருந்தோம் .அந்த நேரத்தில் அரிசித் தட்டுப்பாடு, சர்க்கரை தட்டுப்பாடு முதலியவை மிகுந்திருந்தது,1964ம்  ஆண்டு பாரதப் பிரதமர் நேரு இறந்தவுடன் லால்பகதூர் சாஸ்திரி அவர்கள் பிரதம மந்திரியாக வந்து திங்கட்கிழமை  இரவு கம்பல்சரியாக   ஓட்டலை மூட வேண்டும் என்று கூறினார். தமிழ்நாட்டில் ஒருவர் எலிக்கறி தின்னலாம் என்றெல்லாம் கூறினார். அவ்வளவு உணவுத் தட்டுப்பாடு இருந்தது. உணவுத் தட்டுப்பாடை விட  சர்க்கரை தட்டுப்பாடு மிகவும் அதிகமாக இருந்தது.

ஏன் நான் சக்கரை தட்டுப்பாட்டை வலியுறுத்திக் கூறுகிறேன் என்றால் எனது ஒன்பது வயதாகும் பொழுது என் தந்தையார் மிகுந்த சிரமப்பட்டு சர்க்கரை வாங்கி வைத்திருப்பார்கள் ஓட்டலில் டீ காபி போடுவதற்கு .அது என்னமோ தெரியாது இரவு டான் என்று 12 மணி அடித்தால் நான் எங்கு உறங்கிக்கொண்டிருந்தாலும் எழுந்து என்னை அறியாமல் தூக்கத்தில் நடக்கும் வியாதி போல் சென்று ஓட்டலில் வைத்திருக்கும் சர்க்கரை டப்பாவில் இருந்து  எடுத்து நான் பாட்டுக்கு சர்க்கரையை தின்று கொண்டிருப்பேன். இதற்கு எனக்கு ஏற்பட்ட உடல் நோயா மன நோயா என்ன வியாதி என்று இன்றுவரை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.

என் தந்தையார் மிகவும் சிரமப்பட்டு  பகீரதப் பிரயத்தனம்  செய்து எங்கெல்லாமோ சர்க்கரையை கஷ்டப்பட்டு வாங்கி ஒளித்து வைப்பார். ஆனால் துப்பறியும் ஏஜென்ட் தோற்றான் என்பது போல் எப்படித்தான் தூக்கத்தில் நான் எழுந்து நடந்து சரியாக எங்கு ஒளித்து வைத்திருக்கிறார் அந்த சர்க்கரையை  என்று கண்டு பிடித்து எடுத்து நான்  பாட்டுக்கு  ஸ்பூனால் தின்று கொண்டே இருப்பேன். இது எனக்குத் தெரிந்து ரொம்ப காலம் நடந்தது என்று நினைக்கிறேன்.

ஒரு நாள் நான் வழக்கம் போல் இரவு  12 மணிக்கு எழுந்து சென்று தேடிப் பிடித்து சர்க்கரையை திங்க ஆரம்பிக்கும் பொழுது என் தந்தையார் தாயார் எனது சகோதரர்கள் அனைவரும் எழுந்து விளக்கைப் போட்டுவிட்டு என்னைப் பார்க்கிறார்கள் .எனக்கு அவர்கள் நிற்பது அனைத்தும் தெரிந்தாலும் நான் விடாமல் சர்க்கரையை அள்ளித் தின்று கொண்டே இருக்கிறேன். அதைப் பார்த்தவுடன் அவர்கள் என் மேல் பரிதாபம் தோன்றி என் கையிலிருந்து சர்க்கரை டப்பாவை மட்டும் வாங்கி விட்டு போய் படுத்துக்கொள் என்று கூறிவிட்டார்கள்.

பலகாலம் நடந்த இந்த சம்பவம்  எந்த மருத்துவரிடமும் அழைத்துச் செல்லாமல்  எந்த நோய் என்றும் அறிகுறி தெரியாமல் மிகுந்த சிரமப்பட்டு தினமும் எனக்கு புத்தி கூறுவதுபோல் இவ்வாறு செய்யக் கூடாது கூடாது என்று சொல்லிச் சொல்லி ஒரு இரண்டு மூன்று வருடம் கழித்துத்தான் இந்த நோய் என்னை விட்டு சென்றது என்று நினைக்கிறேன் .9 வயதில் ஆரம்பித்த இந்த பழக்கம் 12 வயது வரை நீடித்தது என்பது தான் என்னால் தாங்க முடியாத ஒரு மனவேதனை துயரம் .நான் இதை அறிந்து செய்யவில்லை என்று மனப்பூர்வமாக கூறுகிறேன். ஆனால் ஏன் இப்படி செய்தேன்  என்று அதற்கான முடிவை இன்றுவரை எட்டமுடியவில்லை. இப்படி ஒரு வியாதியா?? யாராவது தெரிந்தால் கூறுங்கள். ஆனால் இன்றளவும் நான் சர்க்கரையை தொடுவதில்லை என்பதோ  சர்க்கரை மேல் அது போன்ற ஒரு மோகமும் எனக்கு இல்லை  என்பதோ உண்மை.ஆனால் அறியாத பருவத்தில் கஷ்ட காலத்தில் ஏன் எனக்கு அது மாதிரி தோன்றியது. நான் ஏன் அவ்வாறு செய்தேன் என்பதற்கு விடை இன்றுவரை எனக்கு கிடைக்கவில்லை .இதை சின்ன சின்ன ஆசை என்று சொல்வதைவிட சின்ன சின்ன மனவேதனை என்று சொல்வது தான் சால சிறந்தது என்று நினைக்கிறேன்

தலைப்பைக் கொண்டு வர வேண்டுமே. இதுவரை நான் இன்னும் தலைப்பைக் கொண்டு வரவில்லையே. கொண்டு வருகிறேன். என்னுடைய சின்ன சின்ன ஆசை என்னவென்றால் இது போன்ற நோயால் யாராவது பிடிக்கப் பட்டு இருக்கிறீர்களா ??இல்லை  இது நோயா?? மன வியாதியா.?? இல்லை ஒன்றுமில்லாமல் சிறுவயதில் தோன்றிய ஒரு விபரீத ஆசையா?? என்ன என்பதை தெரிந்து கொள்வதற்கு எனக்கு மனப்பூர்வமாக ஏற்பட்ட ஒரு சின்ன சின்ன ஆசை. யாராவது முடிந்தால் தீர்த்து வையுங்கள்.

.இதுவரை படித்தமைக்கு நன்றி வணக்கம்..

Comments

Popular posts from this blog

மாசாணி அம்மன் வரலாறு

கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும்

யாயும் ஞாயும் யாராகியரோ