பணம் பதவி அந்தஸ்து முதலியவை மனிதனை மாற்றுமா

பணம் பதவி அந்தஸ்து சமூகத்தில் ஏற்றத் தாழ்வு முதலியவை ஒரு மனிதனின் குணத்தை செயலை சொல்லை நடவடிக்கையை மாற்றுமா! மாற்றாதா? என் பதிவைப் பார்த்து தீர்ப்பை நீங்களே கூறுங்கள்.

2014ஆம் வருடம் மே மாதம். தேதி சரியாக நினைவில் இல்லை. நான் எனது வீடு சம்பந்தமாக பத்திரத்தை பதிவு செய்யும் விஷயத்திற்காக வேண்டி பொள்ளாச்சி பத்திரப்பதிவு ஆபீசில் நின்று கொண்டு இருக்கிறேன்.

ரிஜிஸ்ட்ரர் வரத் தாமதமாகும் என்று சொன்னதால் நான் வெளியில் காத்திருக்கிறேன் அப்பொழுது வெள்ளை  வேட்டி வெள்ளை சட்டை அணிந்து கொண்டு இன்னொருவரும் காத்துக்கொண்டிருக்கிறார் .பொழுது போக வேண்டுமே என்ற நோக்கில் நான் அவரிடம் உரையாடலைத் தொடர அவரும் என்னிடம் பேசுகிறார் எப்படி.!?

நான் தாங்க மகேந்திரன் எங்க குடும்பம் விவசாயக் குடும்பம் எண்ணெயைத்தான் அம்மா ஜெயலலிதா பொள்ளாச்சி தொகுதி எம்.பி.யாக தேர்ந்தெடுத்து இருக்காங்க .நான் தான் பொள்ளாச்சி தொகுதியில் எம்.பி க்கு நிக்கறேங்க. நாமினேஷன் ஃபைல் பண்ணிட்டா ரிஜிஸ்டிரார் ஆபிஸீக்கு வரமுடியாது. ஆதலால் கொஞ்சம் ரெஜிஸ்டர் ஆபீஸ் வேலையை அதுக்குள்ள முடிக்கனுன்னு வந்திருக்கேங்க .என்னைக்கு நாமினேசன் தாக்கல் செய்யணும்னு அம்மா சொல்லுவாங்க. அதுக்காக நான் காத்துட்டு இருக்கேங்க .உங்க ஓட்டை எல்லாம் தயவுசெய்து எனக்கே போடுங்க என்று அவர் பேசிக் கொண்டிருந்தார். எனக்கு பயங்கர ஷாக். காரணம் இரண்டு நாட்களுக்கு முன்பு பேப்பரில் படித்த ஞாபகம். பொள்ளாச்சி தொகுதி எம்பியாக மகேந்திரனை ஜெயலலிதா தேர்வு செய்து இருக்கிறார் என்று. நேரில் அதுவும் மிக அருகில் பார்த்த உடன் பயங்கர ஷாக். உடனே அவரிடம் கைகுலுக்கி நீங்கள் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள் உறுதி உறுதி என்று கூறி பத்திரப்பதிவு செய்யும் வரை அவருடன் பேசிக் கொண்டிருந்தேன். (இதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விஷயம் என்னவென்றால் நாங்கள் இருவரும் தான் பேசிக் கொண்டிருந்தோம் . மேலும்அவரைச் சுற்றி கூட்டமோ ஒரு  கோஷமோ ஆளரவமோ மக்கள்  கூட்டமோயாரும் இல்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.)

பின் அம்மா குறிப்பிட்ட நாளில் அனைவரும் வேட்புமனுத் தாக்கல் செய்தார்கள். பொள்ளாச்சி எம்பியாக அவர் தேர்வு  செய்யப்பட்டார். ஐந்து வருடம் முடிந்தது. இடையில் அம்மாவிற்கும் ஆயில் முடிந்தது.(ஆனால் இந்த ஐந்து வருட காலத்தில் நான் அவரை ஒருமுறை கூட சென்று கண்டதில்லை. ஆண்டவன் அருளால் தேவையில்லை .தேவை ஏற்படவும் இல்லை. அதற்காக ஆண்டவனுக்கு சிரம் தாழ்த்தி நன்றி கூறிக் கொள்கிறேன்.)

2019 ஆம் வருடம் மார்ச் மாதம் 25ஆம் தேதி பேங்கிற்கு அவசரமாக செல்ல வேண்டும் என்ற காரணத்தினால் வீட்டில் இருந்து காலை 10 மணிக்கு புறப்படுகிறேன்(kvb க்கு 15H ஃபார்ம் குடுக்க வேண்டி). வழியில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டேன். நான் மட்டும் அல்ல ஆயிரக்கணக்கான வாகனங்களும் அனைவரும் தடுத்து நிறுத்தப்பட்டனர் ..கோவையில் இருந்து பொள்ளாச்சி வரும் மார்க்கம், கேரளாவில் இருந்து பாலக்காடு ரோடு வழியாக வரும் மார்க்கம், வால்பாறையில் இருந்து வரும் மார்க்கம், திருச்சி பழனி உடுமலை வழியாக வரும் மார்க்கம், திருப்பூர் பல்லடம் வழியாக வரும் மார்க்கம் , என்று அனைத்து மார்க்கங்களும் அங்கு  அங்கு தடுத்து நிறுத்தப்பட்டு வாகனங்களும் மக்களும் நீண்ட நெடு நேரமாக காத்திருக்கின்றனர். ஆனால் லாரி லாரியாக பொம்பளைகளும் பெரியவர்களும் வந்து குவிந்துகொண்டே இருந்தனர்.

நான் அருகிலிருந்த போலீசாரிடம் என்ன காரணம் என்று வினவியதற்கு எம்பி மகேந்திரன் அவர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கு போகிறார். ஆதலால்தான் அனைத்து வாகனங்களும் அனைத்து ரோட்டிலும் தடுத்து நிறுத்தப் பட்டுள்ளன என்று கூறினார்.

நான் சற்று நினைவலைகளைப் பின்னோக்கி ஓட விட்டுக் கொண்டிருந்தேன் 2014லிலும் இவர் வேட்புமனுத் தாக்கல் செய்தார் ஆனால் ஆள் அரவமும் கூட்டமும் கோஷமும் இது போன்ற வாகனங்களும் மக்களும் தடுத்து நிறுத்தப்படவில்லை .ஆனால் இப்பொழுதோ ஐந்து வருட காலம் எம்.பி.யாக இருந்து பதவி பணம் அந்தஸ்து முதலியவைகளை அனுபவித்து அதன் எதிரொலியாக ஒரு ""பந்தா ""என்று சொல்வார்களே அது போல் பந்தாவாக மீண்டும் 2019 இல் வேட்புமனுத் தாக்கல் செய்யும் பொழுது நடந்து கொண்டிருக்கின்ற நிலையையும் சற்று அலசிப் பார்த்தேன். மக்களே பணம் பதவி அந்தஸ்து ஒரு மனிதனை மாற்றுகிறது என்பது உண்மையா ?? இல்லையா?? நிற்க மேலும் இரு நிகழ்வையும் கூறிக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.

திரு பொள்ளாச்சி ஜெயராமன் அவர்கள் தற்போதைய துணை சபாநாயகர் 2010ஆம் வருடம் என்று நினைக்கிறேன் அப்பொழுதுதான் பொள்ளாச்சிக்கு முதன்முறையாக புதியதாக எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் .அவர் பொள்ளாச்சி SRMH  ஸ்கூலில் படித்தவர். என் நண்பர்கள் அனைவரும் அவருடன் படித்தவர்கள். மேலும் என்னுடைய க்ளோஸ் ஃப்ரண்ட் 24 தெலுங்கு செட்டியார். இருவரும் ஒரே இனம் என்பதால் இவர் அவர் வீட்டுக்கும் அவர் இவர்  வீட்டுக்கும் படிக்கும் காலத்தில் அடிக்கடி சென்று வருவார்கள். அதைப்பற்றி எல்லாம் என் நண்பன் கூறியுள்ளான். அவர் ஒரு முறை மாரியம்மன் கோயில் அருகில்  ஜீப்பில் வரும் பொழுது எதிர்த்தாற்போல்  நான் ஸ்கூட்டரில் வர என்னை கண்டு சல்யூட் அடித்து நலமாக இருக்கிறீர்களா !!??என்று சிரித்த முகத்துடன் வினவ நானும்  இருக்கிறேன் என்று கூறி  உடனே அவ்விடம் இருந்து அகன்று விட்டேன்.

ஒரு புரட்டாதி மாதம் சனிக்கிழமை கோவை ரோட்டில் உள்ள ஆஞ்சநேயர் ஆலயத்திற்கு நாங்கள் ஒரு திருமண விஷயமாக கோவைக்கு சென்று கொண்டிருக்கும் பொழுது இன்று புரட்டாசி சனிக்கிழமை ஆஞ்சநேயர் கோயிலுக்கு செல்லலாம் என்று முடிவு எடுத்து சென்றோம். நான் திருமணத்திற்கு செல்லும் காரணத்தினால் பைஜாமா அணிந்து இருந்தேன்.அப்பொழுது ஜெயலலிதா உயிருடன் நோய்வாய்ப்பட்டு இருந்த நேரம். அவர் பூரண குணம் பெற வேண்டி  பொள்ளாச்சி ஜெயராமன் அதே ஆஞ்சநேயர் ஆலயத்திற்கு பிரார்த்தனை செய்வதற்காக வந்து உள்ளே பிரார்த்தனை செய்து கொண்டு இருந்தார்.

அந்தக் கோயிலில் உள்ளவர்கள் எனக்குத் தெரிந்தவர் என்ற காரணத்தினால் நானும் எனது மனைவியும் சென்று முதல் ஆளாக அவருக்கு நேர் எதிராக நின்று நாங்களும் சாமி தரிசனம் செய்தோம். இடையிடையே அர்ச்சகர் எனக்கும் அர்ச்சனை தட்டு மாலை முதலியவை தருவதைப் பார்த்துக்கொண்டே இருந்தார் திரு ஜெயராமன் அவர்கள் .அர்ச்சனை அபிஷேகம் அனைத்தும் முடிந்து அவரும் புறப்பட நானும் புறப்பட இருவரும் வெளியில் வந்த பொழுது அவர் என்னிடம் ஒரு கேள்வி ஒரே கேள்வி தான் கேட்டார். எனது மனது வெடித்து சுக்கு நூறாகி விட்டது. அப்படி என்ன கேட்டார் என்று கேட்கிறீர்களா.

நீங்கள் பொள்ளாச்சியில் தான் இருக்கிறீர்களா?? நீங்கள் தமிழர் தானா?? பைஜாமா எல்லாம் போட்டிருக்கிறீர்களே!! உங்களை இதற்கு முன்பு பார்த்ததே இல்லையே !!என்று கேட்டார் .நான் உடனே எனது நண்பரின் பெயரை குறிப்பிட்டு சொல்லி நாம் அடிக்கடி  சந்தித்து பேசி இருக்கிறோம் என்று சொன்னவுடன் ஓ அப்படியா என்று கூறி அவ்விடத்தில் இருந்து அகன்று விட்டார்.

இப்பொழுது கூறுங்கள் மக்களே பணம் பதவி சமூக அந்தஸ்து மரியாதை முதலியவை ஒரு மனிதனை மாற்றுமா மாற்றாதா.??

வேதாளத்தின் கூற்று போல் இதற்கு சரியான விடை தெரிந்தும் கூறவில்லை என்றால் அதற்கு மேல் நான் ஒன்றும் சொல்வதற்கில்லை நன்றி நன்றி நன்றி.

(நான் எந்த உடையில் இருந்தேன் என்று தெரிவிப்பதற்காக அந்த ஃபோட்டோவையும் இத்துடன் இணைத்துள்ளேன்)

Comments

Popular posts from this blog

மாசாணி அம்மன் வரலாறு

கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும்

யாயும் ஞாயும் யாராகியரோ