அரசியல் வத்தக்குழம்பு

வத்தக்குழம்பு செய்வது எப்படி?
(எக்ஸ்கியூஸ் மீ, நீங்க சரியான அட்ரஸுக்குத்தான் வந்திருக்கீங்க!)

விரைவில் தமிழகத்தில் (இந்தியா) நடைபெறவிருக்கிற பொதுத்தேர்தலை முன்னிட்டு, இந்த சிறப்பு சமையல் குறிப்பு!

வத்தக்குழம்பு (அ) தேர்தல் அறிக்கைக்குழம்பு செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்

இலவசச்சலுகைகள் - 2 எலுமிச்சை அளவுக்கு
மொழிப்பற்று - 1 தேக்கரண்டி
சுயமரியாதை - 1/2 மூடி (துருவி நைசாக அரைத்து வைத்துக்கொள்ளவும்)
வறுமையொழிப்பு- 2 தேக்கரண்டி
ஈழம்-சிறிதளவு
இட ஒதுக்கீடு-1/2 தேக்கரண்டி
வரிக்குறைப்பு- 5 பல்
கொள்கை-சிறிதளவு
வளர்ச்சித்திட்டங்கள்-சிறிதளவு
சமூகநீதி-1/2 தேக்கரண்டி
மதச்சார்பின்மை-தேவையான அளவு
விவசாயம்-1 தேக்கரண்டி
மானியங்கள்-3 தேக்கரண்டி
சுயபிரதாபம்-1 கைப்பிடி

இலவசச்சலுகைகளை 2 டம்ளர் அடுக்குமொழியில் ஊறவைத்து, நன்றாகக் கரைத்து வடிகட்டி வைத்துக்கொள்ளவும்.

வாணலியில் 1 தேக்கரண்டி விவசாயத்தை ஊற்றி, சமூகநீதி, மொழிப்பற்று, ஈழம் சேர்த்து வதக்கவும்.

மொழிப்பற்று சிவந்தவுடன், வறுமையொழிப்பு, இட ஒதுக்கீடு சேர்த்து வதக்கிய பின், இலவசச்சலுகைகள் கரைசலை ஊற்றி மதச்சார்பின்மை போட்டு கொதிக்க விடவும்.

வாணலியில் மானியங்களை ஊற்றி, சுயபிரதாபம் சேர்த்து, பொரிந்தவுடன், வரிக்குறைப்பை நசுக்கிப்போட்டு, அரைத்த சுயமரியாதை விழுது சேர்த்து, நன்கு வாசம் வரும் வரை வதக்கவும்.

வதங்கியதும், கொதித்துக் கொண்டிருக்கும் இலவசச்சலுகைகள் கரைசலில் கொட்டி, கொள்கை சேர்த்து கொதிக்க விடவும்.

குழம்பு கொதித்து விவசாயம் பிரிந்துவரும் வரையிலும் அடுப்பில் வைத்து பிறகு எடுக்கவும்

அவ்வளவுதான்! சுவையான தேர்தல் அறிக்கைக் குழம்பு தயார்!

இந்தக் குழம்பை அடுத்த ஐந்தாண்டுகள் வரைக்கும் ஃபிரிட்ஜிலேயே வைத்திருந்தாலும் ஊசிப்போகாது. ஆகையால், தேவைக்கேற்ப குழம்பைச் செய்து வைத்துவிட்டால், அடுத்த சில தேர்தல்களுக்கும் இதே குழம்பை சுடவைத்து, ருசியுடன் பரிமாறி மகிழலாம்.

என்ன, உடனே வத்தக்குழம்பு செய்யக் கிளம்பிட்டீங்களா?

Comments

Popular posts from this blog

மாசாணி அம்மன் வரலாறு

கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும்

யாயும் ஞாயும் யாராகியரோ