மாங்காய் உப்பும் சேர்த்து நன்கு சாப்பிட்டேன்

ஒரு பழமொழி கேள்விப்பட்டிருப்பீர்கள். தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்று. அதற்கு என்ன அர்த்தம் என்றால், சிறுவயதில் பழகிய பழக்கம் எத்தனை வயதானாலும் நம்மை விட்டு விலகாது போகாது என்பதுதான் அதன் அர்த்தம்.

இதை ஏன் இங்கு கூறுகிறேன் என்றால் நான் சிறுவயதில் பழனியில் இருந்த பொழுது பழனி மலையை சுற்றி கிரிவலம் வரும் பொழுது மூல வாய்க்கால் என்று ஒரு வாய்க்கால் உண்டு .அங்குதான் சென்று நாங்கள் நீராடுவோம். சில நேரங்களில் சாயந்தரம் ஆறு ஏழு மணி வரை கூட குளிப்போம். அப்போதெல்லாம் எங்கள் தலை மேல் தண்ணீர் பாம்பு உருண்டு ஓடும். அதைப்பற்றி எல்லாம் அப்பொழுது பயம் இல்லை.

நான் முக்கியமாக கூற விரும்புவது அவ்வாறு உள்ள வாய்க்காலின் அருகில் மாங்காய் மரம் நிறைய காய்த்துத் தொங்கும் .கிளிமூக்கு மாங்காய் ஆக. எனக்கு சிறுவயதிலிருந்தே மாங்காய் என்றால் கொள்ளை பிரியம் .நிறைய பறித்துக் கொண்டு வந்து வீட்டில் வைத்து நறுக்கி உப்பு மிளகாய்ப் பொடியுடன் சாப்பிடுவேன். இது எனது எட்டு பத்து வயதில் தொடங்கிய பழக்கம்.

நான் தஞ்சாவூரில் உள்ள திருக்காட்டுப்பள்ளியில் திருமணமான பிறகு என் மாமனார் வீட்டிற்கு செல்வேன். ஒரு நாள் அவர்கள் வீட்டிற்குப் பின்னால் இருந்த மாமரத்தில் ஏறி மாங்காய் பறித்து அதை நறுக்கி  தின்ன ஆரம்பித்தேன். 85 வயதான என் மாமனார் அதைப் பார்த்துக் கொண்டே இருந்தார். மறுநாள்  நான் எழுந்து காப்பி குடித்து எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு அவர்கள் வீட்டில் ஒரு ஊஞ்சல் இருக்கும். அந்த ஊஞ்சலில் உட்காரலாம் என்று வந்தால் ஊஞ்சல் மேல் நறுக்கிய மாங்காயும்  உப்பும் வரமிளகாய் பொடியும் இருக்கும். யாரு பார்த்த வேலைடா இது என்று நினைத்தால் என் மாமனார் எனக்காக மாங்காய் பறித்து நறுக்கி உப்பு மிளகாய்ப் பொடியுடன் வைத்திருப்பார்.

நான் என்ன என்று கேட்டதற்கு நீங்கள் மாமரத்தில் ஏறி மாங்காய் பறித்ததை விரும்பிச் சாப்பிடுவதைக்  கண்டேன். ஆதலால் தான் நானே பறித்து நறுக்கி வைத்துள்ளேன் என்று கூறினார்.நான எங்கே  போனாலும் கொடைக்கானல் போனாலும் ஆழியார் போனாலும் மாங்காய் இருந்தது என்றால் முதலில் மாங்காய் மிளகாய்பொடியுடன் வாங்கி சாப்பிடுவது எனது பழக்கம். எனக்கு இத்தனை வருடங்கள் ஆகியும் இன்றும் இந்தப் பழக்கம் தொடர்கிறது. இன்று காலை எங்கள் வீட்டுக்கு அருகில் இருந்த மா  மரத்தில் இருந்து பறித்த மாங்காயை உப்பு மிளகாய் பொடியுடன் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன் என்று கூறுவதற்காகத்தான் இந்தப் பதிவு.

மேலும் எனக்கு தயிர் சாதத்திற்கு மாங்காய் ஊறுகாயோ  வடுமாங்காயோ
இருந்தால் போதும். தேவாமிர்தமாக உள்ளே இறங்கும் .அவ்வளவு அருமையாக சாப்பிடுவேன் .ஒரு பழமொழியே உண்டு.மா  ஊட்டாத சோறை மாங்காய் ஊட்டும் என்று கூறுவார்கள் .அதாவது அன்புடன் ஆசையுடன் அம்மா ஊட்டினால் இறங்காத அன்னம்  கூட மாங்காயை தொட்டுக் கொண்டால் இறங்கும் என்று அர்த்தம்.

வெய்யில் காலம் சூடு என்றெல்லாம் பார்க்காதீர்கள். சந்தர்ப்பம் நழுவ விட்டால் மீண்டும் வராது. ஆகையால் கிடைக்கும் பொருளை கிடைத்த இடத்தில் விரும்பிய பொருளை சாப்பிட்டு பாருங்கள் என்று கூறி விடை பெறுகிறேன் நன்றி நன்றி நன்றி

Comments

Popular posts from this blog

மாசாணி அம்மன் வரலாறு

கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும்

யாயும் ஞாயும் யாராகியரோ