சாலிவாகன சகாப்தம்

தெரிந்த கதை தெரியாத வரலாறு .

இன்று நாம் காண இருப்பது சாலிவாகனன்  கதை.சாலிவாகனன் யார்?? எவ்வாறு தோன்றினார்?? ஏன் தோன்றினார் ??சாலிவாகன ஆண்டு என்று ஏன் குறிப்பிடப்படுகிறது !!அதன் காரணம் என்ன என்பதைப் பற்றி சற்று விரிவாக விளக்கமாக பார்ப்போமா??.

உஜ்ஜயினியில் ஆட்சி செய்து 2000 வருஷம் ஆட்சிக் கட்டிலில் இருந்த விக்கிரமாதித்தனுக்கு சாலிவாகனனால் தான் மரணம் என்று சாபம் உள்ளது. அப்பேர்ப்பட்ட சாலிவாகனன் எவ்வாறு தோன்றினான் என்று பார்ப்போம்.

சாலிவாகனன் தோன்றியதைப் பற்றி இருவேறு கருத்துக்கள் உள்ளன. நமது கதையின் கருத்தை பின்னால் கூறுகிறேன். முன்னாள் ஒரு சிறுகுறிப்பு மட்டும் தருகிறேன். ஒரு நாள் ஒரு அந்தணர் தன் மனைவியை விட்டு வெகுதூரம் சென்று ஒரு நதியைக் கடந்து பணி நிமித்தமாக சென்றார். அவர் திரும்பி வரும் பொழுது நாள் நட்சத்திரத்தை கணக்கில் கொண்டு இந்த நேரத்தில் ஒரு பெண் கருவுற்றால் மிகுந்த பலசாலியான ஒருவனை பெறுவாள் என்று ஆராய்ந்து நதியை கடக்க வேகமாக தன் வீடு நோக்கி வந்துகொண்டிருக்கிறார் .ஆனால் நதியில் வெள்ளப்பெருக்கு உண்டான காரணத்தினால் அவர் நினைத்த உடன் அவருடைய வீட்டை அடைய முடியவில்லை. அந்த நேரம் அங்கு வந்த ஒரு பெண் என்னவென்று வினவ இவர் கூற நான் ஒத்துழைக்கிறேன்  என்று கூற வேறுவழியில்லாமல் நேரம் கடந்து விடக்கூடாது என்ற காரணத்தினால் அவளுடன் உறவு கொண்டு குழந்தையை பெற்றெடுத்தார். அதுதான் சாலிவாகனன் என்ற ஒரு கருத்து உண்டு. ஆனால் நமது கதைப்படி வேறு விதத்தில் சாலிவாகனன் தோன்றினான். அதையும் சற்று பார்ப்போம்.

வைணவ புரியில் சுலோசனன் என்னும் அந்தணர் இருந்தார் .அவர் மனைவியை இழந்தவர் .அவருக்கு சுமத்திரை என்ற ஒரு மகள் உண்டு. அவளை பிரியமாக வளர்த்து வந்தார் .சுமத்திரை நாட்டியம் ஆடுவதில் வல்லவர். மிகவும் அழகாய் இருப்பாள். இவளுடைய அழகைக் கேள்விப்பட்டு ஆதிசேஷன்  ஆகிய நாகராஜா,  நாகங்களின் தலைவர் அவள் மீது காதல் கொண்டான் .அதன் பயனாக சுமத்திரை கருவுற்றாள்.

அவ்வாறு கருவுற்ற விஷயம் ஊர் மக்களுக்கு தெரிய வந்த காரணத்தினால் மன்னரிடம் முறையிட்டனர். மன்னரும் சுலோசனனையும்  சுமத்திரையும் ஊரை விட்டு விலக்கி வைக்க உத்தரவிட்டான். தந்தையும் மகளும் செய்வதறியாது திகைத்தனர். அப்பொழுது சுமித்திரை தன் நிலைக்கு காரணமான ஆதிசேஷனை நினைத்து வணங்கினாள். ஆதிசேஷன் அவள் முன் தோன்றி பெண்ணே உன் வயிற்றில் இருக்கும் குழந்தை சாதாரண குழந்தை அல்ல. தெய்வீகக்  குழந்தை. விக்கிரமாதித்தனை அழிக்க பிறந்த குழந்தை .அப்பிள்ளை அறிவிலும் ஆற்றலிலும் சிறந்து விளங்குவான். அவன்  இந்த நாட்டை ஆளப் பிறந்தவன். அவன் பெரும்புலவன் என்னும் புகழ் பெறுவான் . ஆதலால் நீ தற்பொழுது அரசனின் ஆணையை ஏற்று வெளியூருக்குச் செல் .எல்லாம்  நன்றாக நடக்கும் என்று ஆசி கூறி மறைந்தான்.

உடனே தந்தை சுமித்திரையை அழைத்துக்கொண்டு சுந்தரபுரம் என்னும் ஊருக்குச் சென்று அங்கு ஒரு குயவர் வீட்டில் தங்கினார். அங்கு சுமத்திரை ஒரு அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தாள். அக்குழந்தைக்கு சாலிவாகனன் என்று பெயர் வைத்தாள். பிள்ளையிடம் அவன் தந்தை ஆதிசேஷன் என்றும் தெரிவித்து நல்ல முறையில் அவனை வளர்த்து வந்தாள் .குழந்தை சிறுவயதிலிருந்தே நல்ல மண் பொம்மை யானை குதிரை முதலியவை செய்ய நன்கு கற்றுக்கொண்டான்.மேலும் தன்னை ஒரு அரசனாகவும் மற்ற பொம்மைகளை சேனாதிபதி அமைச்சராகவும் கற்பனை செய்து விளையாடி மகிழ்ந்தான். கல்வி கேள்விகளிலும் சிறந்து விளங்கினான்.

ஒருமுறை அந்த ஊரில் வசித்த தனஞ்சயன் என்னும் வணிகன் தன் நான்கு பிள்ளைகளுக்கும் ஆளுக்கு ஒரு பொட்டலத்தை கொடுத்து விட்டு இறந்து விட்டார் .பொட்டலங்களில் முதல் பிள்ளைக்கு மண்ணும் இரண்டாமவனுக்கு உமியும் மூன்றாமவனுக்கு பொன்னும்  நான்காம் பிள்ளைக்கு சாணமும் இருந்தது .அதை பிரித்துப் பார்த்த அவர்கள் தந்தையார் ஏன் இவ்வாறு செய்தார் என்று புரிந்து கொள்ள முடியாமல் பலரிடம் கேட்டும் விடை கண்டுபிடிக்க முடியாத காரணத்தினால் இறுதியாக சாலிவாகனனின்  திறமையை கேட்டு அறிந்து அவனிடம் வந்து விஷயத்தைக் கூறினர் .அதைக் கேட்ட சாலிவாகனன் சற்றும் யோசிக்காமல்  விடை அளித்தான்.

அதாவது மண்ணை பெற்ற பிள்ளை நிலத்தையும் உமியை பெற்றவன் தானியத்தையும் பொன்னைப் பெற்றவன் ஆபரணங்களையும் சாணத்தை பெற்றவன் ஆடுமாடுகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று விளக்கம் தந்தான். சாலிவாகனன் விளக்கம் கேட்டு சகோதரர்கள் மிகவும் மகிழ்ந்தனர் .ஒரு சமயம் சாலிவாகனன் மண்குடம் ஒன்றை பொன்குடமாக  மாற்றினான். நாளுக்கு நாள் இவனுடைய பெயரும் புகழும் கீர்த்தியும் எங்கும் பரவலாயிற்று.

இதைக் கேள்வியுற்ற மன்னன் விக்கிரமாதித்தன் அவனை அரண்மனைக்கு வரச் சொன்னான். ஆனால் விக்கிரமாதித்தனின் கட்டளையை இவன் ஏற்க மறுத்து விட்டான். அதைக் கேட்டு வெகுண்ட விக்கிரமாதித்தன் தன் கட்டளையை மீறிய காரணத்தினால் நேரில் அவனுடன் போர் புரிந்து அவனைக் கொல்ல வந்தான். ஆனால் சாலிவாகனன் தன் தந்தை ஆதிசேஷனை மனதால் நினைத்து வணங்கி விக்கிரமாதித்தனுடன் சண்டையிட்டு அவனை வென்று அவனை நர்மதையின் வடபகுதிக்கு ஓட்டிவிட்டான் இதன்பிறகு நர்மதை நதியின் தெற்கில் இவன் சாம்ராஜியத்தை  நிறுவினான்.

இதன் காரணமாகத்தான் நர்மதை நதியின் தெற்கே உள்ளவர்கள் சாலிவாகன சகாப்தத்தையும் வடக்கே உள்ளவர்கள் விக்கிரமாதித்த சகாப்தத்தையும் பின்பற்றினார்கள். சாலிவாகன சகாப்தம் என்பது கிபி 78 தொடங்கியது .பஞ்சாங்கங்களில் இன்றும் சாலிவாகன ஆண்டு என்று குறிப்பிடப்படுகிறது.

இதன் பிறகு விக்கிரமாதித்தனுடைய காலமும் நேரமும் முடிவடையும் நேரத்தில் மீண்டும் ஒரு முறை போருக்கு வந்து சாலிவாகனனால் கொல்லப்பட்டு காளி தேவியின் அருளால் மோட்சத்தை எய்தினான்.

இதுவே சாலிவாகன சகாப்தம் தோன்றிய விதமும்  சாலிவாகன னுடைய வரலாறும் விக்கிரமாதித்தனின் இறுதி முடிவும் ஆகும்

இதுவரை படித்தமைக்கு நன்றி நன்றி நன்றி.

நாளை வேறு ஒரு வரலாறுடன் சந்திப்போம்.

Comments

Popular posts from this blog

மாசாணி அம்மன் வரலாறு

கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும்

யாயும் ஞாயும் யாராகியரோ