ஓம் காரேஸ்வரர் மஹாத்மியம்
தெரிந்த கதை தெரியாத வரலாறு .
இன்று நாம் காண இருப்பது ஜோதிர்லிங்கங்களில் ஒன்றான ஓம்காரேஸ்வரர் லிங்கம். நேற்று நாம் கண்டது காலகாலேஸ்வரர். காலகாலேசுவரரில் இருந்து சில கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது நர்மதை நதி. அங்கு இருபுறமும் அமைந்திருக்கிறது ஓங்காரேஸ்வரர் லிங்கம்ஃ, மமலேஸ்வரலிங்கம் அல்லது அமரேஸ்வர லிங்கம். அதைப் பற்றி சற்று விரிவாக விளக்கமாக பார்ப்போமா!!??
நேற்று நான் காலகாலேஸ்வரரைப்பற்றி பதிவிட்டு இருந்த பொழுது ஒரு சிலர் இதற்கு பயணம் மார்க்கத்தையும் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதற்கிணங்க நான் இன்று அதையும் தெரிவிக்கிறேன். சென்னையில் இருந்து விஜயவாடா பம்பாய் நாசிக் வழியாக ரயில்வே மார்க்கத்தில் ஓங்காரேஸ்வரர் ஸ்டேஷனில் இறங்கி எட்டு கிலோமீட்டர் பஸ் ஜீப் காரில் பிரயாணம் செய்து நர்மதாதீரத்தை அடைந்து சுவாமியை தரிசிக்க வேண்டும்.
இனி கோயில் தோன்றிய வரலாறு பற்றி பார்ப்போம்.
ஓங்காரேஸ்வரர் நர்மதா நதியின் ஒரு புறத்தில் ஓம்காரேஸ்வரர் ஆகவும் மறுபுறத்தில் மல்லேஸ்வரர் அல்லது அமரேஸ்வரர் என்றும் இரு பிரிவாக பிரிந்து இரு கோயில் அமைந்துள்ளது. இது இரண்டும் வேறுவேறாக இருந்தாலும் இரண்டிற்கும் அதிக வேற்றுமை ஒன்றுமில்லை. ஓங்காரேஸ்வரர் மலைமேல்அமைந்துள்ளது .மமலேஸ்வரர் பூமியின் மீது நர்மதை நதிக்கரையில் அமைந்துள்ளது.
இதை அமரேஸ்வரர் என்பதைவிட மமலேஸ்வரர் என்று அழைப்பதே சாலச் சிறந்தது. காரணம் மம: =நான் ,ஈஸ்வர்= கடவுள், மமலேஸ்வர் நான் கடவுள் அஹம் பிரம்மாஸ்மி என்ற சொல்லிற்கு பொருத்தமாக மமலேஸ்வரர் என்ற பெயரே பொருந்துகிறது.
ரகு குலத்தில் ஸ்ரீராமனின் குலத்தில் தோன்றிய மாந்தாதா என்பவர் இங்கு தவம் புரிந்ததாகவும் அவரே பரமேஸ்வரனுக்கு ஆலயம் எழுப்பியதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் மாந்தாதா பர்வதத்தின் மேல் பல ஆலயங்கள் ஓம் எனும் பிரணவ மந்திர வடிவில் இருக்க ஓம்காரேஸ்வரர் ஆலயமும் அவற்றின் மேல் பிறைச்சந்திரன் வடிவில் அழகாக பிரகாசித்துக் கொண்டிருக்கிறது.
இனி ஓம்காரேஷ்வரர் தோன்றிய வரலாற்றைக் காணலாம்.
ஒரு சமயம் நாரதர் சிவனை பூஜிப்பதற்காக கோகர்ண ஷேத்திரம் போனார் .பூஜித்து விட்டு திரும்பி வரும் பொழுது விந்திய மலைக்கு அருகில் வந்தார். உடனே விந்திய பர்வதம் நாரதர் முன் சென்று வரவேற்று நான் சகல சம்பத்துக்களும் நிறைந்தவன் .எனக்கு எதற்கும் குறைவில்லை .எனக்கு நிகர் யாருமில்லை, என்று கர்வத்துடன் அகங்காரமாக பேசினான். அவ்வாறு அவன் பேசியது நாரதருக்கு பிடிக்கவில்லை. அவன் அகங்காரத்தை அடக்க வேண்டும் என்று நினைத்து அவன் மீது அனுதாபப்படுவது போல் பரிதாபமாக பார்த்தார்.
அதற்கு விந்திய பர்வதம் நாரதரை நோக்கி என்ன நாரதரே என் உன்னத நிலையை எண்ணிப் பெருமை கொள்ளாமல் அனுதாபமாக பார்க்கிறீரே என்று கேட்டது. உடனே நாரதர் பகீரென்று சிரித்து என்ன இருக்கிறது நீ எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் மேரு மலையை விட குறைந்தவன் தானே. அவன் சிகரங்கள் சொர்க்கம் வரை உயர்ந்துள்ளன. அதனுடன் ஒப்பிட்டால் நீ எங்கே ஒரு தூசுஎன்று சொல்லி நாரதர் சென்றுவிட்டார்.
உடனே விந்தியம் மிகவும் மனம் நொந்து அருகில் உள்ள ஆலயத்திற்குச் சென்று சிவனை நோக்கி ஆறுமாத காலம் கடுந்தவம் செய்தான். அவன் தவத்திற்கு மனமிரங்கிய சிவன் பிரசன்னமாகி என்ன வரம் வேண்டும் என்று கேட்க சொன்னார்.
உடனே விந்தியனும் ஸ்வாமி தங்களை கண்டவுடன் தங்கள் தரிசனம் கிடைத்த உடன் என் ஜென்மம் புனிதமடைந்தது .நான் எப்பவும் மிகுந்த புத்திக்கூர்மையுடன் இருக்க அருள் புரிந்து என் தலைமேல் நீ சதா சர்வகாலமும் வீற்றிருக்கும் வரம் வேண்டும் என்று கேட்டார். சிவபெருமானும் அவன் கேட்ட வரத்தை அளித்தார். அப்போது தேவர்கள் அனைவரும் அங்கு வந்து சிவனை துதித்து வேண்ட சிவன் இங்கேயே நான் ஜோதிர்மயமாக இருப்பேன். உலக நன்மைக்காக பிரணவ வடிவில் ஓம்காரேஸ்வரர் ஆகவும் நதிக்கரைக்கு அக்கறையில் மமலேஸ்வரராகவும் இரு பெயர்களுடன் இங்கு நிலைத்து நின்று பக்தர்களுக்கு எல்லா நன்மைகளையும் அருளுவேன் என்று கூறினார்.
இதுவே நர்மதை நதிக்கரையில் ஓம்காரேஸ்வரர் ஆகவும் மமலேஸ்வரர் ஆகவும் சிவபெருமான் தோன்றிய வரலாறு.
இங்கு மிக முக்கியமான ஒரு விஷயத்தை நான் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். ஓம்காரேஷ்வரர் ஆலயம் செல்பவர்கள் படியில் இறங்கி நர்மதை நதியில் ஸ்நானம் செய்து பரிக்ரமா செய்ய வேண்டும் .அங்கு உள்ள பூஜாரி அவர்களுக்கு பணம் கொடுத்தால் பரிக்ரமா செய்விப்பார்கள் .அவசியம் நர்மதாவில் ஸ்நானம் செய்து பரிக்ரமா செய்ய வேண்டும் என்பதையும் கூறிக்கொள்கிறேன்.(இந்தியில் பரிக்கிரமா என்றால் தமிழில் ஆலயத்தை வலம் வருவது சுற்றுவது என்பது பொருள். நதியில் மூன்று முறை சுற்றி வந்தால் ஆலயத்தை வலம் வந்ததாக அர்த்தம் .அதுவே பரிக்கிரமா என்ற அழைக்கப்படும்).
இதுவரை படித்தமைக்கு நன்றி நன்றி நன்றி.
நாளை வேறு ஒரு வரலாறுடன் சந்திப்போம்.
Comments
Post a Comment