திரயம்பகேஸ்வரர் மஹாத்மியம்
தெரிந்த கதை தெரியாத வரலாறு .
இன்று நாம் காண இருப்பது 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றான திரியம்பகேஸ்வரர்ஐப் பற்றி. திரையம்பகேஸ்வரர் அங்கு எவ்வாறு தோன்றினார் .!??என்ன காரணம் ??அதற்கு வித்திட்டது யார்!! என்பதைப் பற்றி சற்று விரிவாக விளக்கமாக பார்ப்போமா!!??
இது மகாராஷ்டிரா மாநிலத்தில் நாசிக்கில் உள்ளது. இதன் அருகே பஞ்சவடி உள்ளது. பஞ்சவடியில் தான் லக்ஷ்மணன் சூர்பனகையின் மூக்கை அறுத்த இடமும் சீதையை ராவணன் தூக்கிச் சென்ற இடமும் அருகே உள்ளது.
நாசிக்கில் அருகிலுள்ள பிரம்மகிரி மலையின் அருகில் கோதாவரி உற்பத்தியாகி திரையம்பகேஸ்வரர் ஆலயத்தை சுற்றி ஓடுகிறது .இந்த ஆலயம் இங்கு அமைவதற்கு முக்கிய காரணமான கவுதம முனிவரின் பிரார்த்தனையால் சிவன் திரயம்பகேஸ்வரர் வடிவில் இங்கு வீற்றிருக்கிறார்.திரயம்பம் என்றால் மூன்று லிங்க அடையாளங்கள் உள்ளன. இவற்றை முறையே பிரம்மா விஷ்ணு சிவ பெருமான் என்று குறிப்பிடுவது வழக்கம். இனி இந்த ஆலயம் எவ்வாறு தோன்றியது என்றும் அதனுடைய மகாத்மியத்தையும் பார்ப்போம்.
கௌதம முனிவர் மிகவும் தவ வலிமை பெற்ற மகரிஷி .அவருடைய மனைவி அகல்யாதேவி. இந்த பிரம்மகிரி சிகரத்தின் மேல் அவர்கள் இருவரும் இணைந்து 1000 வருடங்கள் கடும் தவம் செய்தனர். இவ்வாறு தவம் செய்து கொண்டிருக்கும் பொழுது ஒரு தடவை வானம் பொய்த்து நாட்டில் பஞ்சம் தலைவிரித்தாடியது. உண்ண உணவின்றி அருந்த நீரும் இன்றி மக்கள் மிகவும் தவித்துப் போனார்கள். அது மட்டுமல்லாமல் ஊர்வன பறப்பன முதலிய தீனி இன்றி மடிந்தன.மரம் செடி கொடிகள் காய்ந்து போயின .பூமியில் பிளவு உண்டாயிற்று. மொத்தத்தில் உலகமே பாழடைந்தாற்போல் ஆயிற்று.
நாட்டின் நிலைமை கௌதமரை மிகவும் வருத்தமடையச் செய்ய அவர் வருணனை நோக்கி 6 மாதங்கள் தவம் செய்தார். வருணன் அவர் முன் தோன்றி நீங்கள் ஒரு தடாகத்தை தோண்டி கொள்ளுங்கள் .நான் அதை நீரால் நிரப்புகிறேன் .அதிலிருந்து நீர் இறைக்க இறைக்க ஊறிக்கொண்டே இருக்கும். வற்றாத ஜீவ ஊற்றாக இருக்கும் என்று கூறி மறைந்தார்.
அவர் கூறியபடியே கௌதமர் தடாகத்தை தோண்ட அது நீரால் நிறைந்து அதன் மூலம் அவர் பூஜை புனஸ்காரங்களை செய்ய அந்தத் தடாகத்தின் நீரால் சுற்றுவட்டாரத்தில் உள்ள செடி கொடிகள் செழித்து வளர்ந்தன.மிருகங்களும் பட்சிகளும் சுகமாய் வாழ இதைக் கேள்வியுற்ற எங்கிருந்தெல்லாமோ முனிவர்கள் ரிஷிகள் வந்து அந்தத் தலத்தைச் சுற்றி பர்ணசாலை அமைத்து சுகமாய் வாழ்ந்தனர்.
ஆயிரம் ஆண்கள் சேர்ந்து இருக்கலாம். ஒரு பிரச்சனை இல்லை. ஆனால் இரு பெண்கள் சேர்ந்து இருக்க முடியாது என்ற பழமொழிக்கேற்ப ஏனைய ரிஷிமார்களின் பத்தினிகள் கௌதமரின் மனைவியைப் பற்றி அவதூறு கூறி தினமும் அவரிடம் சண்டையிட்டு தங்களுடைய கணவன்மார்களையும் கௌதம ரிஷிக்கும் அவருடைய மனைவிக்கும் எதிராக திருப்பி விட்டனர்.
ஆனால் கவுதம முனிவர் அதைப்பற்றி கவலைகொள்ளாமல் தானுண்டு தன் வேலையுண்டு என்று அமைதியாக இருந்தார். அவருடைய அமைதி அவர்களுக்கு மேலும் ஆத்திரத்தை உண்டாக்க தன் வீட்டில் வளரும் பசுக்களை அவரின் பயிர்களின் மேல் மேய விட்டார்கள். இதைப் பார்த்த கௌதமர் புல்லை எடுத்து பசுக்களை விரட்டினார். புல் பசுவின் மேல் பட்டதும் அது இறந்து விழுந்தது .ஆனால் அவருக்கு அது எதிரிகளின் திட்டம் என்பது தெரியவில்லை.
அதற்காகவே காத்திருந்தது போல் ரிஷிகள் கௌதமரை சுற்றிவளைத்து நீ பசுவதை செய்தாய் .அகங்காரம் உன் கண்களை மறைத்து விட்டது. நீ இப்பொழுதே இவ்விடத்தை விட்டு வெளியேறு என்று கூற மறு வார்த்தை ஒன்றும் பேசாமல் அவருடைய மனைவியும் அவரும் அவ்விடத்தை விட்டு வெளியேறி வேறு இடத்தில் தனியாக ஒரு குடில் அமைத்து தங்கினர்.
ஒரு பழமொழி உண்டு. மூர்க்கனும் முதலையும் கொண்டது விடா என்று. அதுபோல் அங்கு குடியிருக்கும் இந்த ரிஷிகள் அவருடைய குடிலுக்கு சென்று கௌதமரே உன் தலைமேல் பசுஹத்தி தோஷம் தாண்டவமாடுகிறது .உன் முகத்தைப் பார்த்தால் பஞ்ச மகா பாவம் வந்து சேரும். உன்னை கண்டாலே எங்களுக்கு கஷ்டங்களும் பிடிக்கும் .நீ அருகில் இருப்பதால் நாங்கள் செய்யும் யாகங்களுக்கும் தேவதைகள் வருவதில்லை. ஹோமத்தில் இடும் அவுர் பாகங்கள் தேவர்களுக்கோ பித்ரு தேவதைகளுக்கோ சென்று சேர்வதில்லை. ஆகையால் இங்கு இருக்க உனக்கு அருகதை இல்லை .நீ போய் உன் பாவத்திற்கு பிராயச்சித்தம் செய்து கொள் என்று கூச்சலிட்டனர்.
உடனே கௌதமர் அதற்கான பரிகாரத்தை நீங்களே கூறுங்கள் என்று கேட்க உடனே ரிஷிகள் நீ மூன்று முறை பூமியையே பிரதட்சணம் செய்ய வேண்டும். ஒரு மாத காலம் ஆகாரமின்றி தவம் செய்ய வேண்டும். இந்த பிரம்மகிரியை 108 முறை சுற்றி வர வேண்டும். கங்கையை இங்கு கொண்டு வரவேண்டும். அந்நீரால் கோடி சிவ லிங்கங்களுக்கு அபிஷேகம் செய்து பூஜிக்க வேண்டும் .பின்னர் நூறு குடங்கள் நீரால் சிவனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும் .அப்பொழுது தான் உன் பசுஹத்தி தோஷம் நீங்கும் என்று கூறினார்கள்.
கௌதமர் அவர்கள் கூறியதை அப்படியே ஏற்றுக் கொண்டு மனைவியுடன் பரிகாரம் செய்ய ஆரம்பித்தார். பரிகாரத்தின் போது சிவனை பய பக்தியுடன் பூஜை செய்தார். கௌதமரின் பயபக்திக்கும் பொறுமைக்கும் மகிழ்ந்த சிவன் காட்சி தந்து என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். கௌதமரும் பிரபு உன் தரிசனத்தால் என் ஜென்மம் கடைத்தேறியது.இனி எனக்கு எதுவும் வேண்டாம் என்றார். சிவனும் நீ முனிவர்களில் முதன்மையானவன். உன் புகழை சகித்துக் கொள்ள முடியாமல் தான் அவர்கள் உன்னை சித்திரவதை செய்தார்கள். அவர்களை மன்னித்து விடு என்றார்.அதற்கு கௌதமர் சுவாமி அவர்கள் எனக்கு நன்மையே செய்தார்கள் .இல்லாவிட்டால் தங்கள் தரிசனம் கிடைத்திருக்குமா என்றார்.
அவரின் மறுமொழி கேட்டு மகிழ்ந்த சிவன் கௌதமரே இதோ உன் கோரிக்கையை ஏற்று கங்கையை இங்கு அளிக்கிறேன். இக் கங்கை இங்கு கௌதமி என்ற பெயரில் பிரவகிக்கும். நான் திரியம்பகேஸ்வரர் என்ற பெயரில் ஜோதி லிங்க உருவில் கௌதமி தீர்த்தத்தில் இருந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பேன் எனக்கூறி மறைந்தார்.
அனைத்தையும் கேள்வியுற்று ரிஷிகள் கௌதமரின் கால்களில் விழுந்து மன்னிப்புக் கோரினார்கள்..வானில் இருந்து தேவர்களும் மகிழ்ந்தார்கள். அப்போது இருந்து கங்கை கௌதமி என்ற பெயரில் ஓடி பூமியை வளமாக்கி செல்வச்செழிப்புடன் செழிக்கச் செய்கிறது. சிவபெருமானும் திரயம்பகேஸ்வரர் என்ற பெயரில் இந் நதிதீரத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு ஜோதி லிங்க வடிவில் அருள்பாலிக்கிறார்.
இதுவே திரியம்பகேஸ்வரர் ஜோதி லிங்கேஸ்வரராக இல் தலத்தில் தோன்றியதற்கான வரலாறு.
இதுவரை படித்தமைக்கு நன்றி நன்றி நன்றி.
நாளை வேறு ஒரு வரலாறுடன் சந்திப்போம்.
Comments
Post a Comment