கும்பகோணம் திருவிடைமருதூர் மஹாலிங்கசாமி வரலாறு
தெரிந்த கதை தெரியாத வரலாறு.
இன்று நாம் காண இருப்பது கும்பகோணம் அருகிலுள்ள திருவிடைமருதூரில் உறையும் சிவபெருமான் மகாலிங்க சுவாமி என்ற திருநாமத்துடன் கோவில் கொண்டிருக்கின்றார். இக்கோயிலில் உள்ள ஒரு விசேஷம் என்னவென்றால் இக்கோவிலில் பகவானை தரிசிக்க நுழைந்த வழியில் பக்தர்கள் திரும்பாமல் வேறு சிறப்பு தரிசன வழியைப் பின்பற்றியே வெளியில் வருகிறார்கள் என்பது இங்கு முக்கியமாக குறிப்பிட வேண்டிய ஒன்று. ஏன் அவ்வாறு திரும்புகிறார்கள் .என்ன காரணம்??? என்பதை சற்று விரிவாக விளக்கமாக பார்ப்போமா!!!!??
திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவில் பக்தர்களால் மத்யார்ஜுனம் என்று வழங்கப்படுகிறது .ஏன் அவ்வாறு பெயர் பெற்றது என்பதையும் சற்று பார்ப்போமா.!!??
அர்ஜுனம் என்றால் மருதமரம். மருத மரத்தை தலவிருட்சமாகக் கொண்ட தலங்கள் அர்ஜுன தலங்கள் என்று அழைக்கப்படும். வடக்கிலுள்ள ஸ்ரீசைலத்தை மல்லிகார்ஜுனம் என்றும் தெற்கில் உள்ள திருநெல்வேலி அருகிலுள்ள திருப்புடைமருதூரை ஜுடார்ஜுனம் என்றும் இவ்விரு தலங்களுக்கு மத்தியில் அமைந்ததால் இத்தலம் மத்தியார்ஜுனம் என்றும் வழங்கப்படுகிறது. இதுவே இச்சன்னதி மத்யார்ஜுனம் என்று வழங்கப்படுவதற்கான பெயர்க் காரணம்.
இக்கோயிலில் உள்ள லிங்கம் நட்சத்திர வடிவ லிங்கமாக காணப்படும் .இதற்குக் காரணம் சந்திரன் தனது குருவான பிரகஸ்பதியின் மனைவி மீது ஆசை கொண்டதால் அவனுக்கு தோஷம் உண்டானது .அந்த தோஷத்தை நீக்க இத்தலத்தில் சிவனை வேண்டி தவமிருந்து அவனுடைய தவத்திற்கு மெச்சிய சிவன் அவனுக்கு காட்சி தந்து சாபவிமோசனம் அளித்தார். அதன் காரணமாக சந்திரனின் மனைவிகளான 27 நட்சத்திரங்களும் இச்சன்னதியில் உள்ள லிங்கங்களில் ஐக்கியமானது. இதன் காரணமாக இந்த லிங்கம் நட்சத்திர வடிவம் பெற்றது.
இத்தலத்தில் மக்கள் அறியாமல் செய்த பாவம் நீங்குவதற்காக உப்பு மிளகை சார்த்தி வழிபடுகின்றனர். இதற்குக் காரணம் மதுரையை ஆண்ட வரகுண பாண்டிய மன்னன் பிரம்மஹத்தி தோஷத்தினால் பீடிக்கப்பட்டு இத்தலத்திற்கு வந்து சிவனை வழிபட சிவன் அவனை அந்த தோஷத்தில் இருந்து விடுவிக்க தான் அறியாமல் செய்த பாவத்தை போக்கியதால் அதற்கு பரிகாரமாக உப்பு மிளகால் அபிஷேகம் செய்தான். அன்றிலிருந்து மக்கள் அறியாமல் செய்த பிழையை போக்க இத்தலத்திற்கு உப்பு மிளகை பகவானுக்கு சார்த்தி செய்த பாவங்களிலிருந்து விடுபட வேண்டும் என்று வேண்டிக்கொள்கின்றனர்.
இத்தலத்தில் உள்ள அம்மனுக்கு பெருநல முலையம்மை என்று பெயர் வழங்கப்படுகிறது. பிரகாரத்தில் உள்ள அம்மனுக்கு அன்பிற்பிரியாள் என்று பெயர் வழங்கப்படுகிறது.இவ்வாறு பெயர் வழங்குவதற்குக் காரணம் ஒருமுறை திருஞானசம்பந்தர் இங்கு வந்த பொழுது வழியெல்லாம் சிவலிங்கமாக இருந்தது. எனவே மண்ணில் கால் பதிக்க அஞ்சி என்ன செய்வது என்று தவித்துக் கொண்டிருக்கும் போது அம்பிகை சம்பந்தரை இடுப்பில் தூக்கிக் கொண்டு அழைத்து வந்தாள்.அதன் காரணமாக இந்த அம்மனுக்கு அன்பிற் பிரியாள் என்ற பெயர் ஏற்பட்டது.(இதற்கு முன்பு நான் எழுதிய முருகன் அவதாரத்தில் திருஞானசம்பந்தர் முருகனின் ஒரு அவதாரம் என்று குறிப்பிட்டு இருப்பேன். ஆதலால் அம்மா தன் மகனை இடுப்பில் சுமந்து செல்கிறார் என்றும் இங்கு நாம் எடுத்துக் கொள்ளலாம்)
மேலும் பட்டினத்தாருக்கு இத்தலத்திலுள்ள சிவனே மருதவாணன் என்ற மகனாகப் பிறந்து வளர்ந்து அவருக்கு ஞானத்தை உரைத்து முக்தியை அளித்தார் .அவருடைய சீடரான பத்திரகிரியாருக்கும் இக்கோவிலில் சன்னதி உண்டு.
இந்தக் கோவிலில் எந்த கோபுர வாசல் வழியாக நுழைந்தோமோ அதே வழியில் திரும்பக்கூடாது என்ற சாஸ்திரம் உண்டு. காரணம். வரகுண பாண்டியனை ப்ரம்மஹத்தி துரத்தி வந்தது. கோயிலில் நுழைந்த பாண்டிய மன்னன் திரும்பி வரும் போது பிடித்துக் கொள்ளலாம் என்று கோயில் வாயிலிலேயே காத்துக் கொண்டிருக்கிறது.
எனவே பாண்டிய மன்னன் வேறு வாயில் வழியாக வெளியேறி விடுகிறான்.
இதைப் பின்பற்றியே பக்தர்களும் அவ்வாறு செய்கின்றனர்.சிவன் சன்னதிக்கு எதிரில் உள்ள கோபுரம் வழியாக நுழைந்து படித்துறை விநாயகரை வணங்கி சிவன் அம்மன் சன்னதிக்கு சென்று மூகாம்பிகை சன்னதியுடன் தரிசனத்தை முடித்து வேறு வாசல் வழியாக வெளியேற வேண்டும். இதற்கான காரணம் நம்மிடம் ஏதேனும் பீடைகள் இருந்தால் அது நுழைவு வாசலில் நின்று கொள்ளும் என்றும் அது நம்மை தொடர்ந்து வராது என்றும் அதே வழியாக வந்தால் மீண்டும் அது நம்மைப் பற்றிக் கொள்ளும் என்றும் அந்த வழியை விட்டுவிட்டு வேறு வாசல் வழியாக நாம் வெளியேறினால் அது நம்மை தொடராது என்றும் கர்மவினைகள் தீர்வதற்காக இந்த நடைமுறை கோயிலில் பின்பற்றப்படுகிறது என்றும் கூறுவர். இங்குள்ள தீர்த்தத்திற்கு காருண்ய தீர்த்தம் எனப்பெயர் ஆகும்.
இதுவே திருவிடைமருதூரில் உள்ள சிவ மகாலிங்கம் சாமி கோவில் வரலாறு.
இதுவரை படித்தமைக்கு நன்றி நன்றி நன்றி
நாளை வேறு ஒரு வரலாறுடன் சந்திப்போம்.
Comments
Post a Comment