மஹா காளேஸ்வரர் ஆலய வரலாறு

தெரிந்த கதை தெரியாத வரலாறு.

இன்று நாம் காண இருப்பது 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றான மஹாகாளேஸ்வரர் லிங்கம். இது எவ்வாறு உண்டானது. இதன் சரித்திரம் என்ன என்பதை பற்றி சற்று விரிவாக விளக்கமாக பார்ப்போமா??

இது உஜ்ஜையினி நகரில் ஷீப்ரா நதிக்கரையில் அமைந்துள்ளது .இந்நகரை அவந்திகா என்றும் அழைப்பர் .ஏழு புண்ணிய நகரங்களில் இதுவும் ஒன்று .அந்த ஏழு புண்ணிய நகரங்கள் யாவன என்றால்
அயோத்தியா மதுரா மாயா காசி காஞ்சி அவந்திகா பூரி த்வாரவதீ சைவ ஸப்தைதே மோஷதாயகாம்
என புராணத்தில் சொல்லப் படுகிறது.

மேலும் இச் ஜோதிர்லிங்கத்தைப் பற்றி புராணங்களில் மிகப் பெருமையாக சொல்லப்பட்டிருக்கிறது. கந்தபுராணத்தில் அவந்தி காண்டம் சிவபுராணத்திலும் மகாபாரதத்திலும் இந்நகரின் பெருமை விவரிக்கப்பட்டிருக்கிறது. இங்குள்ள நதியில் நீராடியவர்களுக்கு சர்வ பாவமும் விலகும் என்றும் அஷ்ட தரித்திரம் விலகும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. ஸ்ரீகிருஷ்ணர் கல்விகற்ற சாந்தீபினி ஆசிரமமும் இங்கே உள்ளது .மேலும் விக்ரமாதித்தனின் தலைநகராகவும் காளிதாசனின் பிறப்பிடமாகவும் இந் நகர் திகழ்கிறது.

இனி ஜோதிர்லிங்கம் எவ்வாறு உண்டானது என்பதை பற்றி சற்று பார்ப்போம்.

முன்னொரு காலத்தில் அவந்தி நகரில் வேதங்களில் சிறந்து விளங்கிய வேத பிரியன் என்ற ஒரு பிராமணன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு தேவப்பிரியன்  ப்ரியமேதன் சுக்ருதன் சுப்ரதன்  என நான்கு குமாரர்கள் இருந்தார்கள். அனைவரும் சிவபக்தியில் சிறந்து விளங்கினார்கள். அந்நகருக்கு அருகில் உள்ள ரத்னமாலா எனும் மலை மீது தூஷணன் எனும் ஒரு ராட்சசன் வாழ்ந்து வந்தான். அவன் வேத பிரியனின் கீர்த்தியை கேட்டு தன் படைகளுடன் வந்து அவந்திகா மீது படை எடுத்தான்.

ராட்சசனின் படையெடுப்பை கேள்வியுற்ற மக்கள் அனைவரும் பயத்தால் கூக்குரலிட ஆரம்பித்தார்கள் .ஆனால் சிவ பக்தியில் சிறந்தவனான வேத பிரியனோ எள்ளளவும் பயம் இல்லாமல் சிவ தியானத்தில் ஆழ்ந்திருந்தான். அப்பொழுது அந்த ராட்சசன் அவனை வெட்டுங்கள் கொல்லுங்கள் என்று ஆணையிட்டு கொண்டிருந்தான்.

அப்போது யாரும் எதிர்பாராத விதமாக சிவபெருமான் மஹாகாள  ரூபத்தில் தோன்றி பிரளய முழக்கத்துடன் ராட்சசனை எரித்து சாம்பலாக்கினார். பின் மிகுந்த கருணையுடன் வேதபிரியனிடம் உனக்கு வேண்டும் வரம் கேள் என்றார். அவன் அவரை நமஸ்கரித்து தேவதேவா என் போன்ற தீனமான பக்தர்களை அகால மரணத்தினின்று சதா சர்வ காலமும் காத்து தாங்கள் இங்கேயே குடி கொள்ள வேண்டும் என்று பிரார்த்தித்தான்.

அவனின் பிரார்த்தனையை செவிமடுத்த சிவபெருமான் அவன் கோரிக்கையை ஏற்று மஹா காளேஸ்வரர் என்ற பெயருடன் ஜோதிர்லிங்கமாய் அவ்விடத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு முக்தி அளித்து வருகிறார்.

மேலும் மகாகாளேஸ்வர லிங்கத்தைப் பற்றி புராணங்களில் மிகவும் உயர்வாக கூறப்படுகிறது.
அதாவது
ஆகாசே தாயகம்  லிங்கம் பாதாலே ஹட கேஸ்வரம் மர்த்யலோகே மஹா காலம் லிங்கத்ரய  நமோஸ்துதே.என்று கூறப்பட்டுள்ளது.

இப்பாடலில் இருந்து ஜோதிர்லிங்கத்தின் மகிமையை அறிந்து கொள்ளலாம் .அது மட்டுமல்லாமல் ஜோதிர் லிங்கத்தின் அருகில் ஹரிசித்தி தேவி ஆலயம் சிந்தாமணி கணபதி ஆலயம் ,ஆலய வளாகத்தில் உள்ள சதநதி சங்கமம் ஆகும் தடாகம் முதலியவை பார்க்க வேண்டிய இடங்களாகும்.

இதுவே உஜ்ஜயினியில் மகாகாளேஸ்வரர் கோயில் ,ஜோதிர்லிங்கம் தோன்றிய வரலாறு.

இதுவரை படித்தமைக்கு நன்றி நன்றி நன்றி.

நாளை வேறு ஒரு வரலாறுடன் சந்திப்போம்.

Comments

Popular posts from this blog

மாசாணி அம்மன் வரலாறு

கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும்

யாயும் ஞாயும் யாராகியரோ