திருக்குறள் விளக்கம்

தெரிந்த கதை தெரியாத வரலாறு.

இன்று நாம் காண இருப்பது ஒரு திருக்குறளுக்கான விளக்கம் .அது என்ன திருக்குறள் என்ன விளக்கம்? சற்றுப் பார்ப்போமா?.

எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு.

இதன் விளக்கம்.

புற இருளை நீக்குகின்ற சூரியன் சந்திரன் தீபம் போன்ற விளக்குகள் எல்லாம் விளக்குகள் அல்ல. மனத்தகத்து ஏற்றப்படுகின்றன உண்மை என்னும் விளக்கே சான்றோர்க்கு அழகு தருவதாகும்.

இது சான்றோர்களுக்கு எவ்வாறு பொருந்துகிறது என்பதை நாம் ராமகிருஷ்ண பரமஹம்சரின் வாழ்க்கையில் நடைபெற்ற ஒரு சிறு நிகழ்ச்சியை கூறினால் இந்த குரலின் அர்த்தத்தை நாம் நன்கு புரிந்துகொள்ள முடியும்.

ராமகிருஷ்ணர் பிறப்பால் பிராமணர் .அவர் சிறுவனாக இருந்தபோது அவருடைய ஒன்பதாவது வயதில் அவரது குல வழக்கப்படி அவருக்கு பிரம்மோபதேசம் அதாவது பூணல் என்னும் உபநயனச் சடங்கு நடந்தது.

இந்த உபநயனச் சடங்கு, சடங்கின் வழக்கின்படி உபநயனம் முடிந்து சிறுவன் பிரம்மச்சாரி என அழைக்கப் படுவான். பிராமண குல வழக்கப்படி அந்த காலத்தில் பிரம்மச்சாரி என்பவன் வீடுவீடாக சென்று யாசகம் பெற்று பிச்சை எடுத்துதான் உண்ண வேண்டும். ஆதிசங்கரர் பிரம்மச்சாரியாக இருந்த பொழுது பவதி பிக்ஷாம் தேஹி என்று யாசகம் கேட்க போய் ஒரு பெண்மணி நெல்லிக்காயை கொடுக்க இவர் லட்சுமி தேவியை வேண்டி கனகதாரா ஸ்தோத்திரம் பாட அந்த வீடு முழுவதும் தங்க நெல்லிக்கனி விழுந்தது என்பது வரலாறு.

அந்த சடங்கின் படி உபநயனம் நடந்த மண்டபத்தில் ராமகிருஷ்ண பரமஹம்சருக்கு பிச்சை ஏற்கும் கட்டம் வந்ததும் தான் சிறுவயதில் கொடுத்த வாக்கு ஒன்று நினைவுக்கு வந்தது.அதாவது தனது அன்னைக்கு பல வகையிலும் உதவி செய்து அன்னையின் அன்பிற்கு பாத்திரமாக நடந்து வந்தாள் தானே என்னும் கீழ்ஜாதி பெண்மணி. அவளுடைய கணவன் பெயர் கருமான். அவள் தன் மேல் மிகுந்த அன்பு காட்டியதன் விளைவாக உபநயனத்தன்று   என்னிடம் பிச்சை ஏற்பாயா?? என்று கேட்டதற்கு அவசியம் உன்னிடம் பிச்சை ஏற்பேன். அதுமட்டுமல்ல உன்னிடம் தான் முதல் பிச்சையை ஏற்பேன் என்று ராமகிருஷ்ணர் வாக்களித்திருந்தார்.

அந்த வாக்கு அவருக்கு தற்போது நினைவிற்கு வந்தது. அவருடைய அண்ணாவிடம் அதைக் கூறி அவளிடமிருந்து தான் முதல் பிச்சை ஏற்கப் போவதாக கூறினார். ஆனால்  கதாதரின் அண்ணா (கதாதரர் என்பது ராமகிருஷ்ண பரமஹம்சரின் இயற்பெயர் )வெகுண்டு எழுந்தார். அவள் ஒரு தாழ்ந்த குலப் பெண்மணி அவளிடம் பிச்சை ஏற்பது என்பது நமது குலத்திற்கு மரபல்ல. அவளிடம் நீ பிச்சை ஏற்க கூடாது என்று கடுஞ்சொற்களால் கூறினார்.

ஆனால் ராமகிருஷ்ணரோ நான் வாக்குக் கொடுத்திருக்கிறேன் .கொடுத்த வாக்கை நிறைவேற்ற வில்லை என்றால் நான் உண்மை நெறியில் இருந்து தவறியவனாவேன். உண்மை நிலையை நான் கடைப் பிடிக்கவில்லை என்றால் இந்த பூணூல் உபநயனம் முதலியவை அனைத்தும்  பயனற்றதாகிவிடும். ஆதலால் நான் அவளிடம் தான் முதல் பிச்சை ஏற்பேன் என்று கூறி தானியிடம் சென்று அவளிடம் பவதி பிக்ஷாம் தேஹி என்று யாசித்து முதல் பிச்சையை தாழ்ந்த  குலப் பெண்மணியான தானியிடம்  தான் ஏற்றார்.

இதிலிருந்து தெரிவது என்னவென்றால் சான்றோர்களுக்கு கொடுத்த வாக்கு தான் முக்கியம். பொய்யுரைக்க கூடாது .இதைத்தான் திருவள்ளுவர் மேற்கூறிய குரலில் கூறியுள்ளார். அதை ராமகிருஷ்ண பரமஹம்சர் தன் வாழ்க்கையில் கடைப்பிடித்தார்.

இதுவரை படித்தமைக்கு நன்றி நன்றி நன்றி

நாளை வேறு ஒரு வரலாறுடன் சந்திப்போம்.

Comments

Popular posts from this blog

மாசாணி அம்மன் வரலாறு

கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும்

யாயும் ஞாயும் யாராகியரோ