விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை

தெரிந்த கதை தெரியாத வரலாறு.

இன்று நாம் காண இருப்பது விட்டுக்கொடுப்பவர் கெட்டுப்போவதில்லை. அது என்ன என்பதைப் பற்றி சற்று விரிவாக விளக்கமாக பார்ப்போமா??!!

ஜைகீஷ்வ்யர் என்ற ஒரு முனிவர் ஆசை பாசம் கோபம் முதலிய அனைத்தையும் முழுமையாக துறந்து இன்ப துன்பம் அனைத்தையும் சமமாக கருதுபவர். தனக்கு கெடுதல் செய்பவர்களையும் சமமாகவே கருதுபவர் .கோபம் என்ற சொல்லையே அவர் அறிந்தது இல்லை .அவர் மன்னிக்கும் குணம் கொண்டவர் .இப்படிப்பட்ட மகா ஞானியை சிவபெருமானுக்கு மிகவும் பிடித்து அவர் தவத்தை மெச்சி அவருக்கு எந்த நேரமும் தன்னை எந்த உருவத்திலும் மாறு வேடத்தில்  வந்து பிறர் கண்ணுக்கு தெரியாமல்  சிவலோகத்தில் தரிசிக்கலாம் என்ற ஒரு வரத்தை அருளினார்.

ஒரு நாள் சிவனும் பார்வதியும் கைலாயத்தில் அமர்ந்து பொருள் என்றால் என்ன என்பது பற்றிப் பேசிக் கொண்டிருந்தனர்.அப்பொழுது சிவன் பார்வதியிடம் இவ்வுலகிலுள்ள எல்லா பொருளும் நானே. அசையும் பொருள் அசையாப் பொருள் கடல் வான் நெருப்பு பூமி மக்கள் எல்லாம் நான்தான் என்று சொன்னதும் பார்வதி தேவி கோபித்துக் கொண்டாள்.

நீங்கள்தான் ஜீவன் என்றால் சக்தியாகிய எனக்கு என்ன வேலை?? நான் இங்கு ஒரு பொருட்டே இல்லையா??தாங்கள் என்னை  பொருட்படுத்துவதே இல்லை என்று பார்வதி தேவி சீற்றத்துடன் வினவினாள். அப்போது சிவபெருமான் தேவி கோபிக்காதே. என்னுள் உள்ளடங்கிய பொருள்களில் நீயும் ஒருத்தி என்றார்.

அப்பொழுது திடீரென்று ஒரு குரல் கேட்டது. சிவன் சொல்வது உண்மை .சக்தி என்பது சிவம் என்னும் பொருளில் அடக்கம் .சிவத்தினாலேயே சக்திக்கு மதிப்பு. உயிரின்றி சக்தி செயல்படாது என்று கேட்டது.

பார்வதி தேவியால் குரலைத்தான் கேட்க முடிந்ததே தவிர யார் என்று அறிந்து கொள்ள முடியவில்லை. உடனே மிகுந்த கோபத்துடன் நம்மில் குறுக்கிட்டவர் யார்.?? என்னை பற்றி விமர்சிக்க அவருக்கு என்ன துணிச்சல் .???மேலும் தங்களுடைய மனைவியை ஒருவர் விமர்சிக்கும் போது நீங்களும் அமைதியாக இருக்கிறீர்களே. ஏன்?? அது யார்?? என்று சொல்லுங்கள் என்று வினவினார்..

அப்பொழுது சிவன் தேவி கோபம் கொள்ளாதே. அவர் எனது சிறந்த பக்தர் .நல்ல தபஸ்வி. அவருக்கு ஆசை என்பதே கிடையாது. என் பக்தன் ஆவதற்குரிய அனைத்து தகுதிகளும் அவரிடம் இருப்பதாலேயே அந்த வரத்தை அவருக்கு அருளினேன். அவர் அடிக்கடி இங்கு வந்து  என்னை தரிசித்து விட்டுச் செல்வார். இப்போது அவர் இங்கு இல்லை. உனக்கு உரிய பதிலை சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார் .அவரை நான் தண்டிக்க இயலாது என்று கூறினார்.

அப்படியா?? அவருக்கு உண்மையிலேயே ஆசை உள்ளதா இல்லையா என்பதை நான் பரிசோதிக்க விரும்புகிறேன் என்று தேவி சிவனிடம் கூறினார் .சரி என்று சிவனும் கூறிவிட்டு இருவரும் ரிஷப வாகனத்தில் அவரது இருப்பிடம் வந்தனர் .அப்போது முனிவர் எளிய ஆடையுடன் இருந்தார்.

இன்னொரு ஆடை மிகவும் கந்தலாய் இருந்தது. அதை தைக்க முனிவர் ஊசியில் நூல் கோர்க்க முயன்றுகொண்டிருந்தார். சிவபெருமான் மட்டும் அவர் முன் காட்சி தந்தார் .அப்போது முனிவரே உங்களுக்கு ஏதாவது வேண்டுமென்றால் கேளுங்கள் நான் மனதார தங்களுக்கு தர விரும்புகிறேன் என்றார் .அதற்கு ஐயனே நான் மிகுந்த திருப்தியுடன் இருக்கிறேன்.என்ன  எல்லாம் எனக்குத் தேவை என்று நினைக்கிறேனோ அதை எல்லாத்தையும் நீர் தந்துவிட்டீர். வேறு எதுவும் தேவையில்லை என்று கூறினார்.

மேலும் சிவபெருமான் தவசியே நீர் வேறு நான் வேறு அல்ல. உன்னுடைய ஆசையை பரிபூரணமாக நான் பூர்த்தி செய்கிறேன் .என்ன வேண்டுமோ கேளுங்கள் என்று அவருடைய ஆசையை தூண்டினார்.ஆனால் அதற்கு ஜைகீஷ்வ்ய முனிவர் மயங்கவில்லை.

சரி சரி வந்ததுதான் வந்து விட்டீர்.இந்த ஊசியில் நூலை கோர்த்து விட்டு செல்லுங்கள் என்று கூறினார்.

அப்பொழுது மறைந்திருந்த பார்வதிதேவி வெளிப்பட்டு முனிவரே தங்களுக்கு எந்தவித ஆசையும் இல்லை என்பதை உணர்ந்து கொண்டேன் உங்களைப் போன்றவர்கள் தெய்வங்களுக்கும் அறிவுரை சொல்ல தகுதியானவர்கள்தான் சிவத்துக்குள் அடங்கிய பொருளே சக்தி என்பதை ஒப்புக்கொள்கிறேன் என்று அவரை வாழ்த்தி விட்டு கிளம்பினார்.

தற்போது நடப்பது மாசி மாதம் .அடுத்து பங்குனி. பங்குனி உத்தரம் என்பது சிவபார்வதியின் திருமண நாளாக கருதப்படுகிறது. கணவனுக்குள் மனைவி அடக்கம் என்பதை பார்வதிதேவி உலகுக்கு உணர்த்தியது போல் தம்பதிகள் அனைவரும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து ஒற்றுமையுடன் வாழவேண்டும் என்று உறுதி எடுக்க வேண்டும்.

இதிலிருந்து தெரிவது என்னவென்றால் விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை .ஆசை அறுமின் ஆசை அறுமின் ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின் என்ற ஆசையை ஒழித்து தம்பதிகள் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழவேண்டும்.

இதுவரை படித்தமைக்கு நன்றி நன்றி நன்றி

நாளை வேறு ஒரு வரலாறுடன் சந்திப்போம்.

Comments

Popular posts from this blog

மாசாணி அம்மன் வரலாறு

யாயும் ஞாயும் யாராகியரோ

முருகனின் அவதாரங்கள்