பாண்டவ தூதப் பெருமாள் கோயில் வரலாறு
தெரிந்த கதை தெரியாத வரலாறு.
இன்று நாம் காண இருப்பது காஞ்சிபுரத்தில் உள்ள பாண்டவதூதப் பெருமாள் கோயிலின் வரலாறு.
இந்த பாண்டவதூதப் பெருமாள் கோயில் இங்கு எவ்வாறு உண்டானது?? யாரால் உண்டானது?? என்ன என்பதைப் பற்றி சற்று விரிவாக விளக்கமாக பார்ப்போமா.!!
பாண்டவர்கள் ஆட்சியை பறித்துக் கொண்ட துரியோதனன் பன்னிரண்டாண்டுகள் வனவாசமும் ஒரு வருடம் அஞ்ஞாதவாசம் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையை கூறி அனைத்தும் முடிந்த பிறகு தன்னுடைய சொத்துக்களை திருப்பித் தருமாறு கிருஷ்ணரை தூது அனுப்புகிறார் தரமர்.கிருஷ்ணரிடம் அவ்வாறு அவர்கள் ஆட்சியை திருப்பித் தரவில்லை என்றாலும் ஒரு ஐந்து ஊர்களையோ ஐந்து கிராமங்களையோ இறுதியில் ஐந்து வீடுகளாவது தந்தா போதும்! போர் வேண்டாம் என்று கூறி அனுப்புகிறார்.
கிருஷ்ணரும் சரி என்று கூறிவிட்டு துரியோதனனிடம் தூதுவனாக செல்கிறார். ஆனால் துரியோதனன் கிருஷ்ணர் பாண்டவர்களுக்கே பக்கபலமாக உள்ளார்.அவரை அவமானப்படுத்த வேண்டும் என்று முடிவெடுத்தான்.
ஆதலால் கிருஷ்ணர் அமர்வதற்காக போடப்பட்ட ஆசனத்தின் கீழ் ஒரு பெரிய நிலவறையை (சுரங்கம் )உண்டாக்கி அதன் மீது பசுந்தழைகளை போட்டு மறைத்து வைத்தான். மேலும் கிருஷ்ணர் ஆசனத்தில் அமர்ந்ததும் அவனது திட்டப்படி நிலவறை சரிந்து விழுந்து கீழே வந்தவுடன் அங்கே சில மல்லர்களையும் கிருஷ்ணரை கொல்வதற்காக வைத்திருந்தான்.
கிருஷ்ணரும் அவனுடைய திட்டத்தை நன்கு உணர்ந்தும் அவனை திருப்திப் படுத்த வேண்டும் என்பதற்காக சென்று அவன் கூறிய ஆசனத்தில் அமர்ந்தார் .அவனது திட்டப்படி நிலவறை சரிந்து கீழே விழுந்தார். அங்கே அவரைத் தாக்க வந்த மல்லர்களை கணப்பொழுதில் கொன்றுவிட்டு விஸ்வரூபமாக அவதாரம் எடுத்தார்.
கிருஷ்ணர் தூது சென்றபோது நிலவறையில் அமர்ந்த கோலத்தில் எடுத்த விஸ்வரூப தரிசனத்தை தரிசிக்க விருப்பம் கொண்டார் பரீட்சித்தின் மகனாகிய ஜனமேஜயன் மகாராஜா. அதற்கான வழிமுறைகளைக் கூறும்படி வைசம்பாயனரிடம் வேண்டினார். வைசம்பாயனரோ அதற்கு காஞ்சிபுரம் சென்று அஸ்வமேத யாகம் செய்தால் அது நடக்கும் என்று கூறவே காஞ்சிபுரத்திற்கு வந்து அசுவமேத யாகத்திற்கு ஏற்பாடு செய்தார்.
அந்த அசுவமேத யாக ஹோம குண்டத்தில் கிருஷ்ணர் விஸ்வரூப தரிசனத்தை ஜனமேஜயனுக்கு காட்டி அருளினார். அப்பொழுது ஜனமேஜயன் இதே கோலத்தில் தாங்கள் இங்கு கோயில் கொண்டு இருக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். வேண்டுகோளை நிறைவேற்ற காஞ்சிபுரத்தில் பாண்டவ பெருமாள் ஜனமேஜயனுக்கு காட்சி தந்த அமர்ந்த கோலத்தில் விஸ்வரூப தரிசனத்தில் கோயில் கொண்டார்.
இதுவே பாண்டவ தூதப் பெருமாள் கோயில் காஞ்சிபுரத்தில் அமைந்த வரலாறு.
இதுவரை படித்தமைக்கு நன்றி நன்றி நன்றி
நாளை வேறு ஒரு வரலாறுடன் சந்திப்போம்.
Comments
Post a Comment