ஆளவந்தாரின் வரலாறு
தெரிந்த கதை தெரியாத வரலாறு.
இன்று நாம் காண இருப்பது ஆளவந்தாரின் சரித்திரம் .ஆளவந்தார் யார் ??அவருடைய உண்மை பெயர் என்ன?? அவருக்கு ஆளவந்தார் என்ற பட்டம் எவ்வாறு கிடைத்தது!! என்ற விவரங்களை சற்று விரிவாக விளக்கமாக பார்ப்போமா??
ஆழ்வார்களின் வேதமான நாலாயிர திவ்ய பிரபந்தத்தை தொகுத்தவர் நாதமுனிகள்.அவருடைய பேரன் யமுனைத்துறைவன்.12 வயது சிறுவனாக இருந்தபோது மகாபாஷ்ய பட்டரிடம் வேதம் கற்று வந்தார். அந்த ஊரில் கோலாகலர் என்ற புலவர் செருக்கு தலைக்கணம் பிடித்து அனைத்து பண்டிதர்களையும் அடிமையாக எண்ணி கப்பம் வசூலித்து வந்தார்.
ஒருநாள் மஹா பாஷ்ய பட்டர் வெளியூர் சென்ற காரணத்தினால் வீட்டில் யமுனைத்துறைவன் மட்டும் இருந்தான்.
கோலாகலரின் வேலையாட்கள் வந்து கப்பம் கேட்டனர். அது கண்டு வெகுண்டு அவர்களை யமுனைத்துறைவன் விரட்டி அடித்து விட்டான் .உடனே அவனை அரண்மனைக்கு இழுத்து வரும்படி கூறினர். அதுகேட்ட யமுனைத்துறைவன் கோலாகலரிடம் உமக்கு தைரியம் இருந்தால் நேருக்கு நேர் போட்டியிடும்.நீர் வென்று விட்டால் நான் கப்பம் கட்டுகிறேன் என்று சவால் விட்டான். கோலாகலரும் போட்டிக்கு ஒத்துக்கொண்டார்.. நாள் குறித்து போட்டியும் அரண்மனையில் வைத்து நடத்த ஏற்பாடானது.
யமுனைத்துறைவனின் களை பொருந்திய முகத்தை கண்ட ராணி யமுனைத்துறைவன் தான் போட்டியில் வெல்வான் என்று அரசரிடம் பந்தயம் கட்டினார் .மன்னனும் அதை ஆமோதித்து உண்மை அவ்வாறு அவன் ஜெயிக்கும் பட்சத்தில் நாட்டையே நான் அவனுக்கு பரிசாக கொடுப்பேன் என்று கூறினார்.
வாதம் தொடங்கியது .கோலாகலர் கேட்ட கேள்விக்கெல்லாம் யமுனைத்துறைவன் பதில் அளித்தான். இறுதியில் கோலாகலர் தன் தோல்வியை ஒப்புக் கொண்டார் .ராணி உடனே அவனைக் கட்டியணைத்து பாராட்டு தெரிவித்து பின் மன்னனும் அவனை மன்னனாக அறிவித்து ஆளவந்தாரே என்று கூறி ஆளவந்தாரை கட்டி அணைத்து அவனை அரச பீடத்தில் அமர்த்தி மன்னனாக்கினார்.
மன்னன் யமுனைத் துறைவனை ஆட்சியை ஆள வந்தவரே என்ற பொருளில் ஆளவந்தாரே என்றழைக்க அந்தப் பெயரே அவருக்கு அன்றிலிருந்து நிலைத்து நின்றுவிட்டது. அன்றிலிருந்து மக்கள் அவரை ஆளவந்தார் என்று அழைக்கலாயினர்.அவரும் ஆளவந்தார் ஆக ஆட்சியில் செவ்வனே ஆட்சி செய்து கொண்டிருந்தார் .ஆனால் அவருடைய தாத்தா நாதமுனிகள் தன்னுடைய சீடரான மணக்கால் நம்பியை அழைத்து என் பேரனுக்கு உரிய பக்குவம் வந்தவுடன் ஆன்மீக வழிக்கு திருப்பிவிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
ஒருநாள் மணக்கால் நம்பி யமுனைத்துறைவனைக் காண அதாவது ஆளவந்தாரை காண அரண்மனைக்குப் புறப்பட்டார். அவரிடம் சென்று அரசே உங்கள் பாட்டனார் நாதமுனிகள் பெரிய மகான். அவர் உயிர் பிரியும் வேளையில் என்னிடம் என்றும் அழியாத பொக்கிஷம் ஒன்றை உங்களுக்காக கொடுத்துச் சென்றார் .தாத்தா சொத்து பேரனுக்கு என்ற காரணத்தினால் தாங்கள் அந்த பொக்கிஷத்தை வாங்கிக்கொள்ள வேண்டும் என்று கூறினார்..
ஆளவந்தாரும் அப்படியானால் அந்த பொக்கிஷத்தை என்னிடம் கொடுங்கள் என்று கேட்க அது என்னால் தர இயலாது தாங்களே நேரில் வந்து எடுத்துக்கொள்ளவேண்டும் என்று கூற அவருடைய பேச்சு ஆளவந்தாருக்கு வியப்பாக இருந்தாலும் தாத்தா கொடுத்த பொக்கிஷத்தை காண வேண்டும் என்ற ஆர்வ மிகுதியால் நம்பியுடன் புறப்பட்டு வந்தார். இருவருமாக ரங்கநாதர் கோயிலுக்கு வந்தனர். ஒன்றும் கூறாமல் ஆளவந்தாரை அழைத்துக்கொண்டு ரங்கநாதரின் கோவிலுக்குள் நுழைந்தார்.
மணக்கால் நம்பி ரங்கநாதரின் முன் நின்று இரு கைகளையும் நீட்டி இதோ உங்கள் பாட்டனார் தந்த பொக்கிஷம் இது தான் .என்றென்றும் நிலையானது .என்றும் அழியாதது என்று கூறினார். அதைக்கண்ட ஆளவந்தார் ரங்கநாதரிடம் மனதை பறிகொடுத்து ஆட்சி அரியணை அனைத்தையும் மறந்து ரங்கநாதரை உயிர்மூச்சாக கொண்டார்.
உடனே மணக்கால் நம்பி அன்றே கோயில் நிர்வாகத்தையும் வைணவ பீடத்தையும் ஆளவந்தார் வசம் ஒப்படைத்தார். அவருக்கு பதினாறு சீடர்கள் இருந்தனர் .அதில் முக்கியமானவர்களில் ராமானுஜரும் ஒருவர். ஆளவந்தாரின் சீடராக சிஷ்யராக ராமானுஜரும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவே யமுனைத்துறைவன் ஆளவந்தார் ஆக மாறி மீண்டும் ரங்கநாதர் வசம் மனதை பறிகொடுத்து ஆன்மீகத்திற்கு திரும்பிய வரலாறு.
இதுவரை படித்தமைக்கு நன்றி நன்றி நன்றி
நாளை வேறு ஒரு வரலாறுடன் சந்திப்போம்.
Comments
Post a Comment