தாயுமானவர் மாத்ருபூதேஸ்வரர் என்ற பெயர் எவ்வாறு ஏற்பட்டது

தெரிந்த கதை தெரியாத வரலாறு.

இன்று நாம் காண இருப்பது திருச்சி பெயர்க்காரணம் .தாயுமான சுவாமிக்கு எவ்வாறு அந்தப் பெயர் வந்தது என்பதைப் பற்றி சற்று விரிவாக விளக்கமாக பார்ப்போமா???

தாயிற் சிறந்த கோயில் இல்லை. இதனை மெய்ப்பிக்கும் வகையில் சிவபெருமானே தாயாக அருள்புரிந்த தலம் தான் தாயுமானவர் திருக்கோயில்.

ஒருமுறை ரத்னாவதி என்ற பெண்ணும் அவருடைய தாயாரும் காவிரியின் ஒரு கரையில் வசித்து வந்தார்கள்.தாயார் தினமும் மலைக் கோட்டைக்கு வந்து ஈஸ்வரனை வணங்கிச் செல்வது வழக்கம். அவருடைய மகள் ரத்னாவதி கர்ப்பமாக இருந்தார் .தாய் விதவை .வேறு யாரும் கவனிப்பதற்கு இல்லை என்ற காரணத்தினால் கர்ப்பிணி பெண்ணை கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொண்டிருந்தார்.

பேறு காலம் நெருங்கிக் கொண்டிருந்தது. வழக்கம்போல் ஈசனை வேண்டி கொள்வதற்காக மலைக்கோட்டை சென்று ஈசனிடம் மனமுருக வேண்டி எனது மகளுக்கு சுகப்பிரசவம் ஏற்பட வேண்டும். தாங்கள் அருள் புரிய வேண்டும் என்று வேண்டிக் கொண்டு பிறகு தனது வீட்டிற்கு புறப்பட்டு வந்து கொண்டிருந்தார் .வரும் வழியில் காவிரியில் வெள்ளம் அதிகமாகி அவரால் மறு கரைக்கு செல்லமுடியாத சூழ்நிலை ஏற்பட்டது .மகளுக்கு பேறுகாலம் வீட்டிற்கு செல்ல முடியவில்லை. தாயார் மிகவும் மனம் வருந்தி மனம் புழுங்கி ஈசனே என் மகளை காப்பாற்று என்று மனமுருகி வேண்டினார்.

ஒரு நாள் அல்ல இரண்டு நாட்கள் வெள்ளம் வடியாததால் வேறுவழியின்றி கரையிலேயே தங்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. வெள்ளம் வடிந்த பிறகு வீட்டிற்குச் சென்றால் அங்கு தனது மகளுக்கு சுகப் பிரசவம் ஆகி இருப்பதை பார்த்து என்னம்மா எப்பொழுது குழந்தை பிறந்தது என்று கேட்டார். அதற்கு மகள் என்னம்மா விளையாடுறியா !!நீதானே அம்மா கூட இருந்து பிரசவம் பார்த்தாய் என்று கூறினார் .அதைக் கேட்ட தாய்க்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. நானா பிரசவம் பார்த்தேனா  நான் வெள்ளத்தில் ரெண்டு நாளா சிக்கி கொண்டு இருந்தேன் என்று கூறினார் .மகள் அதை நம்பவில்லை.

உடனே தான் வணங்கும் ஈசனை நோக்கி கையெடுத்து கும்பிட்டு ஈசனே இது என்ன திருவிளையாடல் என்று வினவினார் .தாயின் ரூபத்தில் எந்த தாய் பிரசவம் பார்த்தாளோ அதே தாயின் ரூபத்தில் அவருக்கு காட்சி தந்து நான்தான் உன் மகளுக்கு பிரசவம் பார்த்தேன் என்று கூறினார். அது கேட்ட தாய் ""மாத்ருபூதேஸ்வரா"" என்று கூறி நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினார். ""மாத்ருபூதேஸ்வரர் ""என்றால் தமிழில் தாயுமானவர் என்ற அர்த்தம் .அன்றிலிருந்து திருச்சி மலைக்கோட்டை சுவாமிக்கு  தாயுமானவர்  சமஸ்கிருதத்தில் "மாத்ரு பூதேஸ்வரர்''என்ற பெயர் வழங்கலாயிற்று.

இனி அவ்வூருக்கு திருச்சி என்ற பெயர் எவ்வாறு ஏற்பட்டது என்பதைப் பார்ப்போமா??

ஒருமுறை திரிசரன் என்னும் அசுரன் இங்குள்ள சிவனை வழிபட்டதால் திரிசிரபுரம் என்று ஆனது. ஸ்ரீரங்க பெருமாள் பள்ளி கொள்ள தேர்ந்தெடுத்த இடம் என்பதால் சிராப்பள்ளி என்று பெயர் ஏற்பட்டது .காலப்போக்கில் சிராப்பள்ளி  மருவி திருச்சிராப்பள்ளி என்று அழைக்க அதுவும் சுருங்கி தற்போது வழக்கத்தில் உள்ள திருச்சி என்று ஆனது.

இதுவே அந்நகருக்கு திருச்சி  என்ற பெயர் ஏற்பட காரணமும் ஈஸ்வரனுக்கு தாயுமானவர் ""மாத்ருபூதேஸ்வரர் "என்ற பெயர் ஏற்படவும் காரணமாயிற்று.

இதுவரை படித்தமைக்கு நன்றி நன்றி நன்றி

நாளை வேறு ஒரு வரலாறுடன் சந்திப்போம்.

Comments

Popular posts from this blog

மாசாணி அம்மன் வரலாறு

யாயும் ஞாயும் யாராகியரோ

முருகனின் அவதாரங்கள்