இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று
தெரிந்த கதை தெரியாத வரலாறு
இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று.
யாருக்கு யார் என்று இறைவன் சிறுவயதிலேயே முடிச்சு போட்டு விடுவான். அந்த முடிச்சை யாரும் யாராலும் மாற்ற முடியாது.
எனது தாயார் சிறுவயதில் அடிக்கடி இந்த கதையை கூறுவார்கள் .வருடங்கள் பல ஆனாலும் இந்தக் கதை மறக்காமல் இருப்பதற்கு காரணம் அதில் உள்ள உண்மையின் தத்துவம் தான். அதை அப்படியே தங்களுக்கு பகிர விரும்புகிறேன்.
அழகிய சிறிய கிராமம். அந்த கிராமத்தில் ஒரு குடிசை வீட்டின் முன்னால் வயதான ஒரு பெரிய தத்துவ ஞானி சந்நியாசி உட்கார்ந்திருப்பார். அவர் எப்பொழுதும் கையில் நூல்கண்டை வைத்து ஒரு முடிச்சு போட்டு இன்னொரு முடிச்சைத் தேடி கொண்டிருப்பார் .ஒருநாள் ஒருவர் அவரிடம் சென்று ஐயா என்ன தாங்கள் எப்பொழுது பார்த்தாலும் நூலை சுற்றி கொண்டு முடிச்சு போட்டுக் கொண்டிருக்கிறீர்கள் .என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டார். அதற்கு அவர் சொன்னார் .நான் கால்கட்டு போடுகிறேன் என்று. ஐயா புரியவில்லையே என்று கேட்டதற்கு எந்தப் பெண்ணுக்கு எந்த ஆண் எந்த ஆணுக்கு எந்த பெண் என்று முடிச்சு போடுகிறேன் .ஆணின் கால் கட்டைவிரலில் முடிச்சு போட்டு விட்டு இரவு இந்த கிராமம் முழுதும் சுற்றி வருவேன் .அவ்வாறு சுற்றிவரும் பொழுது அவனுக்கு என்று உண்டான பெண்ணின் காலில் முடிச்சு போட்டு விட்டு வந்து விடுவேன். அவர்கள் வயதான பின் இருவருக்கும் திருமணம் நடக்கும். இதற்காகத்தான் என்னை இறைவன் அனுப்பினார் என்று கூறினார்.
இவ்வாறு இருக்கும்போது அந்த ஊரிலேயே மிகப்பெரிய செல்வாக்குள்ள பிராமண குடும்பம் ஒன்று இருந்தது. மிகவும் பணக்கார வசதிபடைத்த குடும்பம் .வசதி என்றால் சாதாரண வசதி அல்ல. காரணம் ஒரு முறை அந்தக் காலத்தில் காது தோட்டில் எண்ணெய் இறங்கியிருக்கும் .அதை சுத்தம் செய்வதற்கு வீடுதோறும் ஆட்கள் வந்து காது தோட்டில் உள்ள எண்ணெய்யை சுத்தம் செய்வோம் என்று கூறுவார்கள் .அவ்வாறு ஒருவன் இவர் வீட்டின் முன் வந்து அம்மா உங்களது காது தோட்டில் எண்ணெய் இறங்கியிருக்கிறது .எடுத்து தரவா என்று கேட்டான். உடனே இந்த பெண்மணிக்கு மிகவும் கோபம் வந்துவிட்டது .அடேய் நாங்கள் பரம்பரை பணக்காரர்கள்.எண்ணெய் இறங்கி இருக்கிறது என்று சொல்லாதே .நெய் இறங்கி இருக்கிறது என்று சொல் என்று கூறுவார். அவ்வளவு வசதி படைத்த கணவன் மனைவி இருவருக்கும் ஒரே பெண் .சொத்துக்கும் செல்வத்துக்கும் அவள் தான் வாரிசு .அவளுக்கு வயது ஐந்து .அந்த வீட்டில் மிகவும் தரித்திரமும் ஏழ்மையும் நிறைந்த ஒரு ஏழு வயது பையன் எடுபிடி வேலை செய்து அவர்கள் அனைவரையும் கவனித்துக் கொண்டிருந்தான்.
ஒருநாள் இந்த முதியவர் அவர்களின் வீட்டிற்கு சென்றார். அந்தப் பெண்மணி இவரை நன்கு வரவேற்று ஆசனம் முதலியன கொடுத்து உபசரித்தார் .அப்பொழுது அந்த சிறு பெண்ணையும் பையனையும் பார்த்த இவர்ஆஹா அருமை அருமை அற்புதம் தங்கள் வீட்டிலேயே மாப்பிள்ளையை வைத்து வளர்க்கிறீர்கள் போலிருக்கிறதே என்று கூறினார். அதைக் கேட்ட அந்தப் பெண்மணி என்ன கூறுகிறீர்கள் என்று கேட்டார். அதற்கு அந்த பெரியவர் உங்கள் பெண்ணுக்கு இதோ இந்த பையன் தான் மாப்பிள்ளை. இவர் காலில் தான் முடிச்சு போட்டு இருக்கிறேன் என்று கூறினார். அது கேட்டு மிகுந்த கோபம் அடைந்த அந்த பெண்மணி கையில் வைத்திருந்த தாளிப்புக் கரண்டியால் அந்த பையனின் மண்டையில் ஓங்கி ஒரு போடு போட்டார். மண்டை பிளவுபட்டு ரத்தம் கொட்ட ஆரம்பித்தது. உள் மண்டை சற்று உள்வாங்கி பெரிய பள்ளம் போல் உண்டாகி ரத்தம் கொட்ட ஆரம்பித்தது. அந்தப்பெண் சமாதானமாகவில்லை .உடனே இங்கிருந்து போகச் சொல்லுங்கள். இல்லையென்றால் அவனைக் கொன்றுவிடுவேன் என்று கூறினார். அங்கிருந்தவர்கள் அந்தப் பையனை கட்டுப் போட்டு அழைத்து ஆஸ்பத்திரியில் சேர்த்து காயங்களுக்கு மருந்து தடவி குணமாக்கினார்கள். அதற்குப் பிறகு அந்தப் பையன் எங்கு சென்றான் என்ற ஒரு விவரமும் இல்லை.
காலமும் நேரமும் யாருக்கும் காத்திருப்பதில்லை என்பதுபோல் வருடங்கள் பல ஓடின .இந்த பணக்காரப் பெண்ணிற்கு திருமணமும் நடந்தது.தலை தீபாவளியும் வந்தது. பிராமணர்கள் வீட்டில் தலை தீபாவளியன்று மாப்பிள்ளையை பலகையில் உட்கார வைத்து மாமியார் எண்ணெய் தடவுவது வழக்கம். அவ்வாறு இந்த மாப்பிள்ளையை உட்கார வைத்து எண்ணெய் தடவும் போது தலையில் உள்ள வடுவையும் பள்ளத்தையும பார்த்து மாமியார் மாப்பிள்ளை என்ன இது தலையில் பள்ளமாக இருக்கிறது என்று கேட்டார்.
அதற்கு உடனே அந்த மாப்பிள்ளை வெகுகாலத்திற்கு முன்பு நான் ஒரு வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த போது அந்த வீட்டின் சொந்தக்காரர் என்னைத் தலையில் ஓங்கி தாளிப்பு கரண்டியால் அடித்துவிட்டார். அதில் ஏற்பட்ட வடு தான் பள்ளம் தான் இது என்று கூறினார் .அப்பொழுதுதான் அந்த மாமிக்கு சுரீர் என்று உரைத்தது.ஆஹா அந்தப் பெரியவர் அன்றே கூறினார். இவர் தான் மாப்பிள்ளை என்று. இத்தனை வருடங்கள் கழித்து இவரே மாப்பிள்ளையாக வந்துவிட்டாரே என்று மனமுருகி என்னை மன்னித்துக்கொள்ளுங்கள் அன்று நான் தான் தவறு செய்துவிட்டேன் என்று மன்னிப்பு கோரினார் .அதற்கு உடனே மாப்பிள்ளையும் எனக்கு தெரியும் ஆனால் நான் சொன்னால் மீண்டும் தங்கள் கோபப்படுவீர்கள் என்றுதான் நான் கோபத்தை உண்டாக்காமல் அடக்கிக்கொண்டு இருந்தேன் என்று கூறினார்.
இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் ஆண்டவன் போட்ட முடிச்சு யாராலும் அழிக்க முடியாது இயலாது .இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று.
இதுவரை படித்தமைக்கு நன்றி நன்றி நன்றி
நாளை வேறு ஒரு வரலாறுடன் சந்திப்போம்
Comments
Post a Comment