புரந்தரதாசர் வரலாறு

தெரிந்த கதை தெரியாத வரலாறு.

இன்று நாம் காண இருப்பது புரந்தரதாசரின் வரலாறு. புரந்தரதாசர் யார் ??தாய் தந்தையர் யார்!!அவருடைய முந்தைய பிறவி என்ன?? அவர் ஏன் தவ வாழ்க்கை மேற்கொண்டார். எல்லாவற்றையும் சற்று விரிவாக விளக்கமாக பார்ப்போமா!!.

பண்டரிபுரத்தில் வேமன்னபுரி என்ற ஒரு சிறிய கிராமம். இது மிகவும் பசுமை நிறைந்த கிராமம். அவ்வூரில் உள்ள மக்கள் அனைவரும் தெய்வ பக்தியில் சிறந்து விளங்கினர் . அந்த ஊரில் மாதவராவ் ரத்தினா பாய் என்ற மனமொத்த தம்பதியர் வாழ்ந்து வந்தனர் .அவர்களுக்கு வெகு காலம் பிள்ளைப்பேறு ;மக்கட்செல்வம் இல்லாமல் இருந்தது. அவர்கள் பிள்ளை வரம் வேண்டி கோவில் கோவிலாக சென்று இறுதியாக திருப்பதிக்கு வந்து சீனிவாச பெருமானை மனதார உருக்கமாக குழந்தை வரம் வேண்டி வேண்டினார்கள். சீனிவாசன் அவர்கள் மேல் கருணை கொண்டு அவர்களுக்கு ஒரு ஆண்மகனை வரமாக கொடுத்தார்.

ஸ்ரீனிவாச பெருமானின் அருளால் குழந்தை பிறந்த காரணத்தினால் அக்குழந்தைக்கு ஸ்ரீனிவாச நாயக் என்றே பெயரிட்டனர். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக சீனியப்ப  நாயக்கன் வளர்ந்து வந்தான்.

முதலில் சீனிவாசன் நாயக் ன் முந்தைய பிறவியைப் பற்றி சொல்ல வேண்டாமா!? ஒருமுறை வைகுண்டத்தில் மகாவிஷ்ணு நாரதரை அழைத்து நாரதா நீயோ திரிலோக சஞ்சாரி .நீ எல்லா யுகங்களிலும் அவதரித்திருக்கிறாய்.கலியுகத்திலும் பக்தி மார்க்கத்தைப் பரப்ப நீ பூலோகத்தில் பிறந்து பக்தி மார்க்கத்தைப் பரப்ப வேண்டாமா? என்று கேட்டார்.அதற்கு நாரதர் நான் எவ்வாறு பக்தி மார்க்கத்தை பரப்புவது என்று வினவ சமயம் வரும் போது நானே வந்து உனக்கு உபதேசம் பண்ணுகிறேன்.தற்போது  நீ பூலோகத்தில் மானிடனாகப் பிறப்பாய் என்று வரமருளினார்.அவ்வாறே நாரதரும் பூமியில் சீனிவாச நாயக் ஆக அவதரித்தார். ஆதலால் புரந்தரதாசரின் முந்தைய பிறப்பு ஸ்ரீ நாரத மகரிஷி என்பதை இங்கு தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.

சீனியப்ப நாயக் மிகவும் செல்வக்  குடும்பத்தில் பிறந்தார் .அவர் குடும்பத்தில் அவர் தந்தையார் மிகவும் வசதிபடைத்த வைரம் பவளம் மாணிக்கம் முத்து பொன் முதலியவைகளை விற்கும் கடை வைத்திருந்தார். ஆதலால் பிறந்து முதலே அவருக்கு செல்வத்திற்கு ஒன்றும் குறையில்லை. அவருடைய 16 வது வயதில் அவருக்கு லட்சுமிபாய் என்ற ஒரு பெண்ணை திருமணம் செய்து வைத்தார்கள்.

அவருக்கு 20 வயதாகும் பொழுது தாய் தந்தை இருவரும் காலமாகிவிட்ட பின்பு கடையின் முழு பொறுப்பையும் சீனிவாச நாயக்  ஏற்றுக்கொண்டார்.அவர் வாழ்க்கையில் மிகவும் கஞ்சனாக இருந்தார். எச்சக்கையால் காக்கா ஓட்ட மாட்டார் (இந்தப் பழமொழிக்கு என்று ஒரு தனி கதை உள்ளது அதை பின்பு தனி பதிவாக இடுகிறேன்)என்று சொல்வது போல் யாருக்கும் ஒரு பொருளை ஈய மாட்டார்.மனமுவந்து கொடுக்க மாட்டார் .அவருக்கு நவகோடி நாராயணன் என்ற ஒரு பட்டப் பெயரும் அந்த ஊரில் உள்ள மக்கள் வழங்கினார்கள்.

இறைவன் அவரை தடுத்தாட் கொள்ள வேண்டும் என்று நினைத்தார். ஆகவே அவர் ஒரு நாள் ஒரு ஏழை பிராமணர் ரூபத்தில் வந்து நேராக நாயக்கிடம் சென்று என் என் பையனுக்கு பூணூல் திருமணம் செய்ய வேண்டும் ஆகையால் அதற்கு தாங்கள் பண உதவி செய்ய வேண்டும் என்று கேட்டார் .இவர் உலோபி ஒன்றுமில்லை போய் வா என்று அனுப்பி விட்டார். அந்த பிராமணரும் சளைக்காமல் பலமுறை சென்று கேட்டும்சீனியப்ப நாயக் மனமிரங்கவில்லை .இறுதியாக ஒரு நாள் மிகவும் கெஞ்சி வற்புறுத்திய போது ஏதாவது உன்னிடம் பொருள் இருந்தால் கொண்டு வந்து கொடு. அதற்கு நான் பணம் தருகிறேன் என்று கூறினார். அதைக் கேட்ட பிராமணரும் உடனே  அவ்விடம் விட்டு அகன்றார்.

அந்த பிராமணர் நேராக அவரின் வீட்டிற்கு லட்சுமிபாய் இருந்த இடத்திற்கு வந்து யாசகம் கேட்டார் .மிகவும் வயதான ஒரு பிராமணர் வந்திருக்கிறார் என்ற காரணத்தில் லட்சுமிபாய்  அவரை நமஸ்கரித்தாள்.என்ன வேண்டும் என்று வினவ என் பையனுடைய பூணூல் கல்யாணத்திற்கு பண உதவி வேண்டும் என்று கூற என்னிடம் தற்சமயம் பணம் ஒன்றும் இல்லை .ஆனால் ஒரு வைர மூக்குத்தி இருக்கிறது. இதை வைத்து தாங்கள் தங்களுடைய பையனின் பூணூலை  நடத்துங்கள் என்று கூறி அந்த மூக்குத்தியை அவரிடம் கொடுத்தாள்.

அவர் நேராக அதை சீனியப்ப  நாயக் இடம் கொண்டுவந்து கொடுத்து இதை வைத்துக் கொண்டு எனக்கு பணம் தாருங்கள் என்று கேட்டார் .அந்த மூக்குத்தியை பார்த்தவுடனே சீனியப்பருக்கு  உடல் நடுக்கம் கண்டது. இதற்கான விலையை நிர்ணயித்து வீட்டில் இருந்து பணம் எடுத்து வருகிறேன் என்று கூறி நேராக வீட்டிற்கு சென்றார். ஒன்றும் கூறாமல் மனைவியிடம் நான் உனக்கு திருமணத்திற்காக கொடுத்த மூக்குத்தியை கொண்டு வா என்று கூறினார் .மனைவிக்கு வெலவெலத்து போய்விட்டது .என்ன பதில் கூறுவது என்று தெரியவில்லை .இருந்தும் பகவானே என்னைக் காப்பாற்று என்று வேண்டி நகைப் பெட்டியை அப்படியே கொண்டு வந்து அவரிடம் கொடுத்தார் .அதைத் திறந்து பார்த்த நாயக் அதிர்ச்சியில் உறைந்து விட்டார். காரணம் இவர் கொடுத்த மூக்குத்தி போல் அதே மூக்குத்தி அங்கும் இருந்தது.

உடனே மனைவியிடம் என்ன நடந்தது என்று வினவ மனைவி தான் பிராமணருக்கு மூக்குத்தியை கொடுத்த கதையை கூறினார். அவர் நேராக கடைக்கு சென்று அந்த பிராமணரின் கால்களில் விழுந்து தாங்கள் யாரென்று வினவ பிராமணர் உடனே மறைந்து விட்டார் .அவருக்கு உடனே பொறி தட்டியது. இந்த சொந்தம் பந்தம் பொன் மாளிகை மாட்சி மனை அனைத்தும் வெறும் கனவு என்று ஒரு நிமிடத்தில் தோன்றி அனைத்தையும் உதறி பக்தி மார்க்கமே சிறந்தது இறைவனே கதி இறைவன் திருவடிகளே சரணமென்று கூறி அக்கணமே சன்னியாசத்தை ஏற்றார்..(ஒரு சிலருக்கு தோன்றலாம் ஒரு நிமிடத்தில் எவ்வாறு அவர் சந்நியாசியாய் ஆகலாம் என்று. அதற்கான விவரத்தையும் காரணத்தையும் நான் வரிசையாக கீழே கொடுத்திருக்கிறேன்)

பட்டினத்தார் பொன் பொருள்  மாட  மாளிகை கூட கோபுரம்  அனைத்து வசதிகளையும் கொண்டு நகரத்து செல்வந்த செட்டியார் என்று பெயர் பெற்றார். அவருடைய மகன் அயல்நாட்டில் இருந்து திரும்பிய உடன் எங்கே உன் மாணிக்கம் வைரம் என்று வினவ காதற்ற ஊசியும் வாராதுகாண் கடைவழிக்கே என்ற  ஒரு வரி கேட்டு அக்கணமே அனைத்தையும் துறந்து சன்னியாசி ஆனார்.

சிற்றின்பமே கதியென்று கிடநத துளசிதாசர் மனைவியைக் காண இருட்டையும்  மழையையும் பொருட்படுத்தாது  அவளிடம் சென்றவுடன் இந்த உடலுக்கா ஆசைப்பட்டாய் . நாளை இது மூப்பெய்தினால் சீண்டுவார் யாருமில்லை.இறைவனை சரணடைவதை விட்டு விட்டு இது தேவையா என்று வினவ அவர் அக்கணமே இல்லறத்தை துறந்து ராமநாமமே கதி என்று தோன்றி துளசி ராமாயணத்தை இயற்றினார்.

உலகத்தில் சிறந்தது உடல் இன்பம் தான். பெண்களை பார்ப்பதை தவிர்த்து வேறு இல்லை என்று பெண்களை போகப் பொருளாக கருதி பெண்களுக்காகவே வாழ்ந்து வந்தவர் அருணகிரிநாதர். அவர் உடல்  நிலைமையைக் கண்டு உடல் நலிவடைந்தவுடன் ஒரு பெண்ணும் அவருடன் வராமல் போகவே நானும் ஒரு பெண்தான் என்னை தமக்கை என்பதை ஒரு நிமிடம் மறந்து விட்டு என்னை பெண்ணாக நினைத்து என்னை நீ அனுபவி என்று அவருடைய தமக்கை கூறியதைக் கேட்ட அருணகிரிநாதர்  அக்கணமே தவறு என்று  உணர்ந்து  ஞானம் பெற்று திருப்புகழ் இயற்றினார்.

எட்டு வயதிலேயே சந்நியாசத்தை மேற்கொள்ள வேண்டுமென்று விரும்பி தாயார் மறுத்ததால் கடலில் முதலையிடம் அகப்பட்டுக்கொள்வது போல் நடித்து தாயாரை சந்நியாசத்திற்கு அனுமதி வழங்குமாறு வேண்டி தாயாரும் மகன் உயிருடன் இருந்தால் போதும் என்று அனுமதி வழங்கி அக்கணமே சந்நியாசத்தை மேற்கொண்டார் ஆதிசங்கரர்.

ஏன் இவைகளை எல்லாம் நான் கூறினேன் என்றால் மனிதனின் மனம் நொடிப்பொழுதில் மாறக்கூடியது .விரும்பிய பொருள் அனைத்தையும் தூசு என்று நினைத்து தூக்கி எறியும் மனப்பக்குவத்தை அடைந்து விட்டால் மனிதனுக்கு அனைத்தும் இன்பமே என்பதை உணர வேண்டும் என்பதற்காகத்தான் அனைத்தையும் கூறினேன் .அந்தப் பிராமணன் வாயிலாக சீனியப்ப  நாயக் அக்கணமே உணர்ந்து சன்னியாசத்தை மேற்கொண்டார்..மேலும் அவர் நாடு நகரமெல்லாம் சுற்றிவரும் பொழுது புரந்தரி என்ற ஒரு தாசியின் வீட்டில் இருந்து அந்த தாசிக்கு பகவான் காட்சி தந்து அவள் மூலமாக ஞானத்தைப் பெறு என்று  சீனியப்ப நாயக் இடம்சொன்ன காரணத்தினால்  புரந்தரியின் சீடர் (தாசர்)ஆன காரணத்தினால் அவருக்கு  புரந்தரதாஸர் என்ற பட்டம் வழங்கலாயிற்று.(இதுவே மிகவும் நீண்டு விட்டதால் ஒற்றை வரியில் முடித்து விட்டேன்)

இதுவே புரந்தரதாசரின் வரலாறு

இதுவரை படித்தமைக்கு நன்றி நன்றி நன்றி

நாளை வேறு ஒரு வரலாறுடன் சந்திப்போம்.

Comments

Popular posts from this blog

மாசாணி அம்மன் வரலாறு

கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும்

யாயும் ஞாயும் யாராகியரோ