ஊழியர் தவறுக்கு எஜமானனே பொறுப்பு என்று ராமன் நிரூபித்து காட்டினார்

தெரிந்த கதை தெரியாத வரலாறு.

ஒரு தவறு செய்தால் அதைத் தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன். இது எம்ஜிஆர் அன்று பாடிய பாட்டு.

இந்தப் பாடல் ராமாயணத்திற்கும் பொருந்தும். எப்படி? என்று சற்று விளக்கமாக பார்ப்போமா?.

ஒரு ஊழியன்  ஒரு தவறு செய்தால் அதற்கு எஜமானனே பொறுப்பு என்ற தத்துவத்தை இராமன் அனைவருக்கும் விளக்கிக்காட்டினார் ராமாயணத்தில். எங்கு ?எப்பொழுது? விரிவாகப் பார்ப்போம்.

இலங்கைக்கு அதிபதியாக விபீஷணனை முடிசூட்டிவிட்டு அயோத்திக்கு ராமர் வந்து பட்டாபிஷேகம் நிகழ்ந்து செவ்வனே ஆட்சி செய்து கொண்டிருந்தார்.இலங்கையிலிருந்து விபீஷணன் அவ்வப்பொழுது அயோத்தி வந்து அவரைக் கண்டு தொழுது வணங்கி அறிவுரைகள் பெற்றுச் செல்வது வழக்கம்.

அவ்வாறு ஒருமுறை அயோத்திக்கு இராமரை காண விபீஷணன் வந்து கொண்டிருந்தான்.அயோத்தி முழுவதும் ஆரண்யம் காடாக இருந்தது அந்த காட்டில் அந்தணர்கள் யாகம் ஹோமம் முதலியன செய்து கொண்டு தவத்தில் தியானத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தார்கள் .அவர்கள் அடிக்கடி மௌன விரதம் இருப்பார்கள்.

அவ்வாறு இருக்கும் வேளையில் அனைத்து அந்தணர்களும் யாகம் செய்வதற்கு தர்ப்பை தீர்ந்துவிட்டதால் ஒரு குறிப்பிட்ட அந்தணரை  அழைத்து தர்ப்பை பறித்து  வருமாறு கூறினர்.அவ்வாறு தர்ப்பை பறிக்கச் சென்ற அந்த அந்தணர் அன்றைய தினம் மௌன விரதத்தை கடைப்பிடிப்பவர்.

அப்பொழுது அந்த வழியாக வந்து கொண்டிருந்த விபீஷணன் காட்டில் தனியாக தர்ப்பை பறித்துக் கொண்டிருந்த அந்தணரைப்  பார்த்து இங்கு தாங்கள் தனியாக என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று வினவினான். அந்தணரோ மவுனவிரதம் ஆதலால் ஒன்றும் பேசவில்லை .மீண்டும் அவன் தன்னை அவமதிப்பதாக நினைத்துக் கொண்டு என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? என்று கோபமாக கேட்டான் .அப்போது அந்த அந்தணர் வாயில் விரல் வைத்து நான்பேசமாட்டேன் இன்று மௌனவிரதம் என்று சைகையால் உணர்த்தினார் .ஆனால் இவன் பிறவியில் அரக்கன் என்பதால் அதை தவறாக புரிந்து கொண்டு நான் இலங்கை மன்னன் நானும் பிறப்பில் பிராமணன்தான் என்னை இவர் வாயை மூடிக் கொண்டு போ!!என்று கூறுகிறாரே என்று கோபம் மேலிட அவரை எட்டி உதைத்தான். அந்த உதையில்  அவர் சுருண்டு விழுந்து இறந்து போனார்.

தர்ப்பை பறிக்க சென்று வெகு நேரமாகியும் திரும்பி வராத அந்தணரைக் காண  மற்ற அனைத்து அந்தணர்களும் வந்து பார்த்தபோது அவர் இறந்து கிடந்ததை கண்டு அதற்குக் காரணமானவன் அருகில் நிற்பதைக் கண்டு அவன் விபீஷணன் என்று அறியாமல் அவனை கட்டி இழுத்து வந்து பெரிய பள்ளம் தோண்டி அதனுள் அவனைத் தள்ளி கற்களையும் பாறைகளையும் போட்டு மூட ஆரம்பித்தனர்.

அச்சமயம் ராமபிரான் அவ்வழியாக வரும் பொழுது என்ன நடக்கிறது என்று சற்று குனிந்து பார்த்தால் விபீஷணன் பள்ளத்தில் இருந்ததைக் கண்டு அந்தணர்களிடம் அவன் என் ஊழியன் அவன் செய்த தவறுக்கு நானே பொறுப்பு. அவனுக்கான தண்டனையை எனக்கு கொடுங்கள் என்று மண்டியிட்டு வேண்டினார். அதுமட்டுமல்ல அவன் எனது சேவகன் விபீஷணன். ஒரு குறிப்பிட்ட காலம் வரை இலங்கையை ஆளவும் அதுவரை ஆயுள் பலமும் அவனுக்கு அருளி இருக்கிறேன் .மேலும் அவனது எஜமானன் நானே. ஊழியன் செய்யும் தவறுக்கு எஜமானனே பொறுப்பு என்ற காரணத்தால் அவன் செய்த தவறுக்கான தண்டனையை எனக்கு அருளுங்கள் என்று வேண்டிக் கேட்டுக் கொண்டார்.

அந்தணர்கள் ராமனின் பரிவையும் கடமை உணர்வையும் கண்டு மிகவும் மகிழ்ந்து அந்தணரைக் கொன்ற பாவத்திற்கான சில பரிகாரங்கள் மட்டும் செய்தால் போதும் என்று கூற ராமனே பரிகாரத்தை செய்து பிரம்மஹத்தி தோஷத்தை நீக்கி பிராமணர்களிடம் மன்னிப்புக் கோரி விபீஷணனை விடுவித்தார். தான் செய்த தவறுக்காக மிகவும் வருந்தி விபீஷணனும் அனைவரிடமும் மன்னிப்பு கோரினான்.

இதிலிருந்து தெரிவது என்னவென்றால் ஊழியன் செய்த தவறுக்கு எஜமானனே பொறுப்பு என்பதை அனைவரும் உணர வேண்டும் என்று ராமர் தானே ஒரு எடுத்துக்காட்டாக இருந்தார்.

ஒரு தவறு செய்தால் அதைத் தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன் என்று அந்தக் காலத்தில் இந்தக் கருத்தை ஒட்டியே பாடல் பாடப்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன்.

இதுவரை படித்தமைக்கு நன்றி நன்றி நன்றி

நாளை வேறு ஒரு வரலாறுடன் சந்திப்போம்.

Comments

Popular posts from this blog

மாசாணி அம்மன் வரலாறு

யாயும் ஞாயும் யாராகியரோ

கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும்