தானத்தின் பெருமை
தெரிந்த கதை தெரியாத வரலாறு
இன்று கொடையின்( தானத்தின்) அருமை பெருமைகளை பற்றி பார்ப்போம்.
கொடையில் சிறந்தவர்கள் கடை ஏழு வள்ளல்கள். கொடையில் சிறந்தவன் கர்ணன். இன்னும் யார் யாரைப் பற்றி எல்லாமோ கூறுவார்கள் .ஆனால் கொடையில் சிறந்த காளத்தி முதலியாரைப் பற்றி தெரியுமா???? அவரைப் பற்றி சற்று இன்று விரிவாக விளக்கமாக பார்ப்போமா????.
பல்லவர்கள் காஞ்சிபுரத்தை ஆண்டு கொண்டிருந்த நேரம் சென்னையை அடுத்த திருநின்றவூரில் காளத்தி முதலியார் என்று ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் பெரும் கொடை வள்ளல். யார் எதை கேட்டாலும் இல்லை என்று சொல்லாது வாரி வழங்குவார்.
அவருடைய புகழ் நாளுக்கு நாள் உயர்ந்து வருவதை கேள்வியுற்ற மன்னன் தனது மந்திரி பிரதானிகளையும் படை வீரர்களையும் அனுப்பி அவருடைய சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்து வருமாறு கூறினான், அவர்களும் அவருடைய அனைத்து சொத்துக்களையும் பறிமுதல் செய்து காளத்தி முதலியாரையும் அவருடைய மனைவியையும் நட்டநடு வீதியில் விட்டுவிட்டு சென்றுவிட்டனர்.
வாழ வழியின்றி காளத்தி முதலியார் அந்த நாடு விட்டு வேறு நாட்டிற்குச் சென்று பிழைப்பை தொடங்கலாம் என்று வந்துகொண்டிருந்தார். வழியில் இரவானாதால் ஒரு சத்திரத்தில் தங்கினார் .அப்பொழுது அந்தச் சத்திரத்தில் கிழிந்த ஆடையுடன் மிகவும் வறுமையுடனும் பசியுடனும் ஒரு புலவர் உறக்கம் வராமல் கவிதை புனைந்து கொண்டிருந்தார் .அவர் அப்பொழுது வயிற்றைப் பார்த்து கூறுகிறார் . ஏ வயிரே இன்று நீ பசிக்கிறாய் உணவில்லை என்று ஆட்டம் போடுகிறாய்.பாடாய்ப் படுத்துகிறாய்.நாளை நான் திருநின்றவூர் சென்று காளத்திமுதலியாரை கண்டு பெரும் பணம் பெற்று வருவேன். அப்பொழுது உனக்கு வேண்டிய அளவு உணவு உண்ண கொடுப்பேன். நீ வேண்டாம் வேண்டாம் என்று தடுப்பதை நான் நாளை பார்ப்பேன் என்று வயிற்றிடம்அவர் பேரம் பேசினார்.
இதைக் கேள்வியுற்ற காளத்தி முதலியார்மிகவும் மனம் வருந்தி அந்தப் புலவர் இன்னும் என்னை பெரும் பணக்காரன் என்றே நினைத்துக் கொண்டிருக்கிறார்.அவன் நாளை நம்மை தேடி வந்து வெறுங்கையுடன் இல்லை என்று திரும்பினால் மிகவும் அவமானமாக இருக்குமே என்று நினைத்து மனைவியை அழைத்துக் கொண்டு இரவோடு இரவாக தனது வீட்டிற்கு வந்தார்.
பொழுது விடிந்ததும் புலவர் காளத்தி முதலியாரிடம் வந்து பொருள் கேட்டார். அவரை வரவேற்று உபசரித்து இருங்கள் என்று சொல்லிவிட்டு புழக்கடைப் பக்கம் சென்று இல்லை என்று சொல்வதைக் காட்டிலும் உயிர்வாழாமல் இருப்பது சிறந்தது என்று நினைத்து அருகில் உள்ள பாம்பு புற்றுக்குள் கையை விட்டார் முதலியார்.அந்த பாம்பிற்கு மனிதாபிமானம் இருந்தது போலிருக்கிறது. இவர் சிறந்த கொடை வள்ளல் இவரை நாம் கொத்த கூடாது என்று நினைத்து தனது நாகரத்தினத்தை அவர் கையில் ஈந்தது.
மிகவும் மகிழ்ச்சியுற்ற காளத்தி முதலியார் அதைக் கொண்டுவந்து புலவரிடம் கொடுத்தார். பெரிய பொருளாக தருவார் என்று நினைத்துக் கொண்டு இருந்த புலவர் மாணிக்கத்தை தந்தவுடன் மிகவும் மகிழ்ச்சியுடன் இதைக்கொண்டு நான் பெரும் பணம் ஈட்டுவேன் என்று சொல்லி ஊரில் உள்ள அனைவரிடமும் அதற்கு விலை பேசினார். அதற்கு ஈடாக தங்களிடம் பணம் இல்லை என்று அனைவரும் திருப்பி அனுப்பிவிட்டனர்.நேராக மன்னனிடம் சென்று நான் காளத்தி முதலியாரிடமிருந்து யாசகம் பெற்று வருகிறேன். இந்த மாணிக்கக் கல்லை வைத்துக்கொண்டு எனக்கு இதற்கு ஈடான பணத்தை கொடுங்கள் என்று கேட்டார் .அது கேட்ட மன்னன் தனது மந்திரிமார்களை அழைத்து ஏன் இது போன்ற மாணிக்கக் கற்களை தாங்கள் பறிமுதல் செய்யவில்லை என்று கேட்டு அனைத்தையும் பறிமுதல் செய்து வாருங்கள் என்று கூறி தாமும் உடன் வருவதாகக் கூறி காளத்தி முதலியார் வீட்டிற்கு சென்றான்.
மன்னன் வருகையை அறிந்து காளத்தி முதலியார் நடந்ததைக் கூற மன்னன் நம்பாமல் அந்த பாம்பு உண்மையாக உங்களுக்கு நாகரத்தினக்கல்லை கொடுத்து இருந்தால் அது ஜீவ ரத்தினத்தையும் வைத்திருக்கும். ஜீவரத்தினம் வேண்டும் என்ற கோரி கையை விடுங்கள் என்று கூற விதி வலியது எல்லாம் ஈசன் செயல் என்று கூறி முதலியார் புற்றில் கைவிட அது மிகவும் நல்ல பாம்பு ஆகையால் அது ஜீவரத்தினத்தை முதலியார் கையில் உமிழ்ந்து விட்டு புற்றில் இருந்து வெளியில் வந்து உயிரைத் துறந்தது.
உடனே மன்னன் முதலியாரின் பெருமையை எண்ணியும் பாம்பிற்கு உள்ள ஈர குணம் கூட தன்னிடம் இல்லையே என்று நினைத்து தன்னைப்பற்றி வெட்கப்பட்டு முதலியாரிடம் இருந்து பறிமுதல் செய்த அனைத்து சொத்துக்களையும் முதலியாரிடம் கொடுத்து தன்னை மன்னிக்கும்படி வேண்டி மன்னிப்பு கோரினான். பெருந்தன்மையுடன் முதலியாரும் அவனை மன்னித்து விட்டார்.
இதுவே தானத்தின் பெருமை கொடையின் அருமை.
இதுவரை படித்தமைக்கு நன்றி நன்றி நன்றி
நாளை வேறு ஒரு வரலாறுடன் சந்திப்போம்
Comments
Post a Comment