மாரியம்மன் உருவான வரலாறு
தெரிந்த கதை தெரியாத வரலாறு
இன்று நாம் காணவிருப்பது மாரியம்மன் தோன்றிய வரலாறு.
தமிழ்நாட்டில் மாரியம்மன் காளியம்மன் பத்திரகாளியம்மன் பிடாரியம்மன் ரேணுகா தேவி அம்மன் வெக்காளியம்மன் என்று மாரியம்மனை பல பெயர்களில் அழைக்கிறார்கள் ..புன்னைநல்லூர் மாரியம்மன் சமயபுரம் மாரியம்மன் இன்னும் பற்பல பெயர்களில் அழைக்கிறார்கள். இதற்கு மூலகாரணமாக மாரியம்மன் எவ்வாறு தோன்றினார் என்பதை சற்று விளக்கமாக விரிவாக பார்ப்போமா.?????
தவம் தியானம் பக்தி முதலியவற்றில் சிறந்தவர் ஜமதக்னி முனிவர் (ராமாயணம் உருவாவதற்கு மூல காரணம் ஜமதக்னி முனிவர் .அதைப் பற்றி வேறு ஒரு வரலாறுடன் பின் விவரமாகக் காண்போம்).
ஜமதக்னி முனிவரின் மனைவி ரேணுகாதேவி. அம்பிகையின் அம்சம் இவள் .இவருடைய தந்தையின் பெயர் ரைவதன் .இவர்களுக்கு நான்கு பிள்ளைகள். முறையே தன்னுவன் அனுவன். விச்வாவசு பரசுராமன். பரசுராமர் மஹா விஷ்ணுவின் அவதாரம்.
ரேணுகாதேவி மகா பதிவிரதை கற்புக்கரசி .தன் பதிவிரதா தன்மை காரணமாக தினமும் ஆற்றங்கரையில் இருந்து நீர் எடுத்துச் செல்வார்.அதாவது மணலில் குடம் உண்டாக்கி நீர் கொண்டு வருவார். அவ்வாறு மணல் குடத்தில் நீர் கொண்டு வருவதை வைத்தே ஜமதக்னி முனிவர் யாகம் ஹோமம் முதலிய புனித செயல்களை ஆற்றுவார் .ஒரு முறை அவ்வாறு அவர் நீர் எடுக்க ஆற்றுக்கு சென்ற பொழுது வானத்தில் பறந்து கொண்டிருந்த ஒரு கந்தர்வனின் நிழல் நீரில் விழ இத்தனை அழகு வாய்ந்த ஆடவர்களும் உலகில் இருக்கிறார்களா???!!! என்று கணநேரம் மனதில் நினைத்தாள்.அதனால் அவள் பதிவிரதத் தன்மை போயிற்று.அவள் மண்ணால் குடம் செய்யும் தன்மையை இழந்தார்.
இதை ஞான திருஷ்டி மூலம் உணர்ந்த ஜமதக்னி முனிவர் தன் மகன்களை அழைத்து அவருடைய தலையைக் கொய்யும் படி கூற மற்ற மூவரும் மறுக்க பரசுராமர் தனது ஆயுதத்தால் தன் தாயின் தலையை ஒரே வெட்டில் வெட்டினார்.இதனால் மகிழ்ச்சியுற்ற ஜமதக்கினி முனிவர் மகனிடம் உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்க என் தாயை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும் என்று கூற அவ்வாறே கமண்டலத்தில் இருந்து நீர் தெளித்து மந்திரம் ஓதி மீண்டும் ரேணுகாதேவியை உயிர்ப்பித்தார்.
அந்தக் காலத்தில் அந்த நாட்டை கார்த்தவீர்யார்ஜுனன் என்னும் மன்னன் ஆண்டு வந்தான் .அவன் அவ்வப்பொழுது ஜமதக்னி முனிவரிடம் வாதத்தில் ஈடுபட்டு ரேணுகா தேவியிடம் பல முறை தவறாக நடக்க முயற்சித்தான் .இவ்வாறு இருக்கும்போது ஒரு முறை ஜமதக்னி முனிவரை கார்த்தவீர்யார்ஜுனன் கொன்றுவிட்டான்.
உடனே ரேணுகாதேவி கணவர் இறந்த துயரம் தாளாமல் உடன்கட்டை ஏற தானும் தீயில் விழுந்தாள் .ஆனால் அவ்வாறு தீயில் விழுந்தது இயற்கைக்கே பிடிக்கவில்லையோ என்னமோ விடாமல் அடை மழை பெய்தது. அதன் காரணமாக உயிர் துறக்காமல் தீக்காயங்களுடன் ரேணுகாதேவி மழையில் இழுத்து செல்லப் பட்டாள் .அவ்வாறு மழை வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட ரேணுகாதேவி ஒரு வேப்பமரத்தின் அடியில் தங்கினார். வேப்ப மர இலைகளை பறித்து உடலில் சூடிக்கொண்டாள். அதாவது ஆடையாக அணிந்து கொண்டாள். மேலும் தீக்காயத்தின் வெப்பத்தின் காரணமாக சந்தனத்தை உடலைக் குளிர்விப்பதற்காக எடுத்து பூசிக் கொண்டாள். உடல் மீண்டும் குளிர்ச்சி அடைவதற்காக கூழை உண்டாக்கி அதை பருகினாள் (இதன் காரணமாகத்தான் மாரியம்மன் கோயில்களில் கூழ் ஊற்றி வேப்பிலையை ஆடையாக உடுத்தி சந்தனத்தை பூசும் பழக்கம் இன்றுவரை இருக்கிறது).
உடல் முழுவதும் வெப்பத்தின் காரணமாக உயிர் பிரியாத நிலையில் பார்வதி தேவியை நோக்கி தவம் செய்ய ஆரம்பித்தாள். அவருடைய தவத்தை மெச்சி பார்வதி தேவி காட்சி தந்து தன்னுடைய அம்சத்தை அவளுக்கு வணங்கி அருள் புரிந்தாள். சந்தனம் பூசிய உடம்பை கொண்டவள் என்பதாலும் மழையால் அடித்துச் செல்லப்பட்டவள் என்பதாலும் மாரி என்ற பெயரால் அழைக்கப் பட்டாள் .மாரி என்றால் மழை என்று அர்த்தம். நாளடைவில் இவளே மாரியம்மனாக வழங்கப் பெற்றாள். ( மாரியம்மனுக்கு ஆடை வேப்பிலை உடலில் பூசுவதற்கு சந்தனம் உணவு கூழ்.)
இந்த மாரியம்மனை வணங்குபவர்களுக்கு வெப்ப நோய்களான அம்மை வயிற்றுவலி போன்றவற்றில் இருந்து பக்தர்களை காத்து ரட்சித்து மாரியம்மன் இன்று வரை நாடு முழுவதும் பெயர் பெற்று அனைத்து பக்தர்களையும் அன்றிலிருந்து இன்று வரை காத்து ரட்சித்து கொண்டிருக்கிறாள்.
ரேணுகாதேவியே மாரியம்மனாக அவதாரம் எடுத்து பார்வதியின் அருளால் உலகைக் காத்து ரட்சித்து கொண்டிருக்கின்றாள்.
இதுவே மாரியம்மன் தோன்றிய வரலாறு
இதுவரை படித்தமைக்கு நன்றி நன்றி நன்றி
நாளை வேறு ஒரு வரலாறுடன் சந்திப்போம்
Comments
Post a Comment