தீபாவளி சுமையே

#மத்யமர்_பார்வையில்_பண்டிகைகள் celebrating Diwali

நான் தீபாவளிப் பண்டிகை சுமையே என்று கூற விரும்புகிறேன்.

காரணம் எங்கள் குடும்பத்தில் நாங்கள் மொத்தம் 10 பேர் .5 அண்ணன் தம்பி 5 அக்கா தங்கை .நான் இவ்வாறு கூற காரணம் சிறுவயதில் நடந்த சில மறக்க முடியாத நிகழ்வு காரணமாக நான் சுமை என்று கூறுகிறேன்.

அது என்ன என்று சற்று விரிவாக பார்ப்போமா.

ஒரு இரண்டு தீபாவளி நிகழ்வுகளை மட்டும் இங்கு கூறிவிட்டு பிறகு நான் மற்ற பதிவுக்கு வருகிறேன்.

எனக்கு ஏழு அல்லது எட்டு வயது இருக்கலாம் என்று நினைக்கிறேன் நாங்கள் பழனியில் இருக்கிறோம் .என் தந்தை பழனி மடப்பள்ளியில் நிர்வாகியாக இருக்கிறார் ஒரு தீபாவளிக்கு பத்து பேருக்கும் துணி எடுப்பதற்கு வசதி இல்லை .ஆனால் புதுத்துணி போட வேண்டுமே என்ற எண்ணம் தாய் தந்தையருக்கு மேலோங்கி நிற்கிறது.

அந்தக் காலத்தில் எல்லாம் இந்தக் காலம் போல் ரெடிமேட்  டிரஸ்ஸோ இல்லை  விரும்பியதை எடுத்து வைப்பதோ கிடையாது .ஒரு குடும்பத்துக்கு என்றால் மொத்தமாக எடுத்துட்டு வந்து தைப்பது தான் .அந்த வருட தீபாவளிக்கு வழியில்லாமல் என் தந்தையார் 15 மீட்டர் காடாதுணி எடுத்துட்டு வந்து அண்ணன்-தம்பி அக்கா-தங்கை அனைவருக்கும் ஒன்றாக தைப்பதற்கு டெய்லரிடம் ஆர்டர் கொடுத்தார்.

ஆனால் டெய்லர் போங்க சாமி வேற வேலை இல்ல நான் தைக்க  மாட்டேன் என்று கூறினார்.பிறகு அவரை தாஜா செய்து தைக்க கூறினார். அவன் சரி சரி என்று அப்படியே வைத்துவிட்டார். நாங்களும் இரண்டு நாளைக்கு முந்தி கொடுத்ததால் நாளை கிடைக்கும் என்று காத்திருந்தோம். நாளையும் முடிந்தது மறுநாள் விடிந்தால் தீபாவளி இரவு உறக்கம் வரவில்லை.பட்டாசு வெடிச் சத்தம் வயதோ சிறுவயது ஆசை அதிகம் எனக்கு .உறக்கம் வரவில்லை .பட்டாசு சத்தம் காதில் கேட்க நான் என் தாயாரிடம் குளிக்கலாமா நேரமாச்சு என்று  சும்மா சொல்லி கொண்டே இருக்கிறேன்.

ஒரு ஸ்டேஜில் என்  தாயார் சும்மா இருடா  எனக்கு எல்லாம் தெரியும் . சரியான நேரத்துல எழுப்புவேன் என்று கூறிவிட்டார். பிறகு பொழுதும் விடிந்தது. நாங்கள் எழுந்து ஸ்நானம் எல்லாம் செய்துவிட்டு என் தந்தையார் தீபாவளிக்கு மறக்காமல் வெள்ளை அப்பம் செய்வார். அதேபோல் அன்றும் வெள்ளை அப்பமும் குலோப் ஜாமுனும்செய்திருந்தார்கள். அதெல்லாம் தின்றுவிட்டு துணி வரும் என்று நாங்கள் அனைவரும் வாசலில் காத்து நிற்கிறோம். டெய்லரிடம் சென்று கேட்டால் (காலை ஐந்தரை மணி) இருங்க பட்டன் வச்சுட்டு இருக்கேன் வைக்கிறேன் அப்படி இப்படின்னு 6 மணியாகும் போது தான் அந்த துணியை எடுத்து கொடுத்தான்.அது வந்து நாங்கள் போட்டுக்கொண்டது எங்களுக்கு மிகுந்த ஆனந்தமாக இருந்தது. இப்பொழுது புரிகிறதா ஏன் சுமை என்று சொன்னேன் என்று .

அப்போதெல்லாம் நான் பாடும் ஒரே பாடல்

உன்னைக் கண்டு நான் வாட என்னை கண்டு நீ வாட கண்ணீரும் கதை சொல்லும் தீபாவளி ஊரெங்கும் மணக்க உல்லாசம் நமக்கும் காணாத கோலம் அடா.

நெஞ்சமும் கனலாகி நீராகும் போது நிம்மதி நம் வாழ்வில் இனியேது என்ற பாடலைத்தான் அடிக்கடி பாடிக்கொண்டிருப்பேன்.

மற்றொரு காரணம்.

இனி  ஓராண்டு கழித்து அடுத்த தீபாவளி வந்தது. அந்த தீபாவளிக்கு துணி தயாராகிவிட்டது .பட்ஷணங்கள் வீட்டில் ரெடியாகி விட்டது. ஆனால் பத்து பேருக்கும் பட்டாசு வாங்க வேண்டும். பட்டாசு வாங்க வீட்டில் யாரிடமும் பணம் இல்லை .தாய் தந்தையர் வாய்விட்டு சொல்லவும் இல்லை .என்னடா செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தார்கள்.

எனக்கு 7 வயதில்  தெரியாது பிற்பாடு எனக்கு இந்த கதை தெரியவந்தது .அதாவது சாண்டோ சின்னப்ப தேவர் அவர்கள் ஒருமுறை கையில் காசில்லாமல் மருதமலை முருகனை நினைத்து முருகா  நீதான் அடுத்த வேளை சோத்துக்கு வழி காட்ட வேண்டும் என்று நினைத்து ஒரு தீப்பெட்டியை காலால் தட்டி கொண்டே சென்றாராம் .ஒரு கிலோ மீட்டர் தூரம் போனதுக்கு அப்புறம் என்னமோ தோன்றியது. அந்த தீப்பெட்டியை எடுத்து திறந்து பார்த்தால் அதனுள் பத்து ரூபாய் நோட்டு  ஒன்று இருந்தது.1960ல் பத்து ரூபாய் என்பது பெரிய விஷயம் அல்லவா. அன்றிலிருந்துதான் அவர் மருதமலை முருகன் பக்தனாக ஆனார் என்று நான் கேள்விப்பட்டேன்.

அதுபோல அந்த தீபாவளிக்கு நானும் எதோ ரோட்டில் அப்படியே நடந்து கொண்டிருக்கும் பொழுது திடீரென்று ஒரு கலர் பேப்பர் பார்த்தேன் .என்னடா என்று ஆசையாக ஓடிச்சென்று எடுத்தால் 5 ரூபாய் நோட்டு மிகுந்த பரவசம் அடைந்த அதை எடுத்துக் கொண்டுவந்து என் தாய் தந்தையரிடம் கொடுக்க அவர்களுக்கு மட்டில்லா மகிழ்ச்சி .பின் அந்த பணத்தை கொண்டு சென்று பட்டாசு வாங்கி அந்த தீபாவளியை மிகச் சிறப்பாகக் கொண்டாடினோம்.1960 61 ல் 5 ‌ரூபாய்க்கு பை நிறைய கிடைக்கும்.

இத்தனை துன்பங்கள் அனுபவித்த காரணத்தினால் எனக்கு தீபாவளி என்றாலே ஒரு வெறுப்பு வர ஆரம்பித்தது .மேலும் நான் வெறுப்பதற்குக் காரணம் 1971-ம் வருடம் அக்டோபர் மாதம் தீபாவளி முடிந்து இரண்டு நாட்களில் என் தந்தையார் மரணமடைந்தார். அன்றிலிருந்து தீபாவளி என்றாலே எனக்கு வெறுப்பு. விமானப் படையில் சேர்ந்து பணம் வசதி எல்லாம் இருந்தும் எனக்கு தீபாவளி கொண்டாட விருப்பம் இல்லை.

பிறகு திருமணமானது குழந்தைக்காக வேண்டி குழந்தையின் திருப்திக்காக நான் அவனுக்கு துணிமணி எடுத்துக் கொடுத்து பட்டாசு வாங்கி செலவு செய்தாலும் அன்றிலிருந்து இன்றுவரை நான் எனக்கென்று தீபாவளிக்கு துணி வாங்குவதில்லை என்று முடிவு செய்து இன்று வரை நானும் வாங்காமலே இருக்கின்றேன். மேலும் தீபாவளி என்றால் எனக்கு வெறுப்பு   வருவதற்கு காரணம் இளவயதில் நடந்துதான் காரணமே ஒழிய வேறு ஒன்றும் இல்லை.

இன்று என்னைப் பார்ப்பவர்கள் சார் தீபாவளி வருது உங்களுக்கெல்லாம் என்ன சார் நீங்க கலக்கிடுவீங்க. உங்களுக்கு என்ன பணத்திற்கு குறைச்சலா.எல்லா பேங்கிளிலும் அக்கவுண்ட் இருக்கு.   எந்தப் பேங்க் போனாலும் உங்களுக்கு பணம் தர தயாரா இருக்காங்க. நீங்க கார் எடுத்துட்டு ஜாலியா போறீங்க நினைத்த இடத்துக்கு என்று கூறும் அளவிற்கு இன்று ஆண்டவன் செயலில் நான் இவ்வளவு முன்னேறி இருக்கிறேன் என்று நினைத்தால் மிகவும் மகிழ்ச்சி யாக உள்ளது. ஒரு லட்ச ரூபாய் கூட செலவு செய்து தீபாவளி கொண்டாட முடியும். ஆனால் இன்று மனம் சிறிய வயதில் நடந்ததை நினைத்து அந்த நாட்டத்தில் போக மனம் மறுக்கிறது .இதன் காரணமாகத்தான் தீபாவளியை சுமை என்று கூறினேன்.

இன்று நான் நினைத்தால் அதே பாடலின் முதல் அடியை பாடமுடியும்.

உன்னைக் கண்டு நானாட என்னைக் கண்டு நீயாட சந்தோசம் பொங்கும் இன்ப தீபாவளி ஊரெங்கும் மணக்க உல்லாசம் நமக்கும் காணுகின்ற கோலமடா.

ஆனால் மனம் ஒப்பவில்லை ஆதலால் தான் கீழே காரணம் கொடுத்திருக்கிறேன்.

இன்று மகன் மருமகள் பேரன் பேத்தி அனைவருக்கும் புது துணி எடுத்து சம்பந்திக்கும்  துணி எடுத்து கொடுத்து அவர்கள் சில சமயம் என்னை கிண்டல் செய்வார்கள் .நீங்கள் என்ன புதுசு போடறதில்லை. நாங்க எடுத்துத் தருவோம் என்று  எடுத்துக் கொண்டு வந்து கொடுப்பார்கள். வேறு வழியில்லாமல்  என் குடும்பத்தாரின் விருப்பத்திற்கிணங்க அதை உடுத்திக் கொண்டு  தீபாவளியை நான் கொண்டாடிக் கொண்டிருக்கிறேன். ஆனால் என்மனம் விரும்பி செய்வதில்லை மேலும் இன்றைய காலகட்டத்தில் அதை சுகமாக ஆக்கிக் கொள்ளலாம் என்ற போதிலும்  இளவயதில் பட்ட துன்பம் கஷ்டம் மனதை விட்டு அகலாத காரணத்தினால் தீபாவளியை சுமை என்றே கூறுகிறேன். நன்றி நன்றி நன்றி.

Comments

Popular posts from this blog

மாசாணி அம்மன் வரலாறு

கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும்

யாயும் ஞாயும் யாராகியரோ