அன்ன தானத்தின் பலன்மகிமை
தெரிந்த கதை தெரியாத வரலாறு
இன்று நாம் காண இருப்பது உணவே மருந்து மருந்தே உணவு.
அது என்ன உணவே மருந்து .மருந்தே உணவு. அதைப் பற்றி சற்று விரிவாக விளக்கமாக பார்ப்போமா.
மகாபாரதப் போர் முடிந்தவுடன் மன நிம்மதி இல்லாமல் தவித்துக் கொண்டிருந்த தர்மர் கிருஷ்ணரிடம் ஆலோசனை கேட்க பீஷ்மரிடம் சென்று அறிவுரையைப் பெற்றுக் கொள்ளுமாறு கூறினார் .உடனே பஞ்சபாண்டவர்கள் பாஞ்சாலி அனைவரும் பீஷ்மரிடம் சென்றனர் .பீஷ்மரிடம் தர்மன் தனது நிலைமையை விளக்கி அறிவுரை வழங்குமாறு வேண்டினார் .அப்பொழுது பாஞ்சாலி சிரித்தாள். அதைக் கண்டு பீஷ்மர் ஏன் அம்மா சிரிக்கிறாய் என்று வினவினார் .அதற்கு பாஞ்சாலி அனைவரும் நிறைந்த சபையில் துச்சாதனன் என்னைத் துகில் உரியும் பொழுது பார்த்துக்கொண்டிருந்த தாங்கள் எவ்வாறு நல்ல அறிவுரை வழங்குவீர்கள் என்று வினவினாள்.
அதைக் கேட்ட பீஷ்மர் அம்மா நீ கூறுவது முற்றிலும் உண்மை. அப்பொழுது துர்க்குணம் நிறைந்த துரியோதனாதிகளுடன் நான் இருந்தேன் .அவர்கள் வழங்கும் உணவை உண்டு கொண்டு இருந்தேன். அந்த உணவின் தன்மை காரணமாக எனக்கு துர்புத்தி தான் நிறைந்திருந்தது .ஆதலால்தான் சபையில் என்னால் எதுவும் கூற முடியாமல் இருந்தேன். காரணம் செஞ்சோற்றுக்கடன். இப்பொழுது அர்ஜுனனின் அம்புகளால் என் உடலில் உள்ள அசுத்த இரத்தம் அனைத்தும் வெளியேறி விட்ட காரணத்தினால் தற்பொழுது நல்ல புத்தி தோன்றியிருக்கிறது. ஆதலால் அறிவுரை கூற தற்சமயம் நான் மிகுந்த தகுதி உள்ளவனாக இருக்கிறேன் என்று கூறினார். மேலும் துர்க்குணம் நிறைந்த உணவு உண்ணுவதால் நடக்கும் விபரீதங்களைப்பற்றி நான் உனக்கு ஒரு கதையை கூறுகிறேன் என்று கதை சொல்ல ஆரம்பித்தார்.
மகேந்திரபுரி என்ற நாட்டை மகிபாலன் என்றொரு அரசன் ஆண்டு வந்தான் அவனது ஆஸ்தான குருவாக மிகவும் நற்குணம் நிரம்பிய ஞானவான் ஒருவர் இருந்தார் .அவர் மிகுந்த பக்தி ஞானம் அனைத்தும் பெற்றிருந்தார். ஒருநாள் அவர் அரசரைக்கான அரசவை நோக்கி வந்தார் .அவரைக கண்ட மன்னன் எழுந்து வணங்கி அவருக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய்து உணவு உண்ணுமாறு அவரிடம் வேண்டினான். அவரும் சம்மதித்து உணவு உண்ண அமர்ந்தார்.
அவருக்கு தங்கத்தட்டு தங்கத் தாம்பாளம் தங்க சொம்பு தங்க ஸ்பூன் என்று அனைத்தும் தங்கத்திலான பொருட்கள் மூலம் உணவு வழங்கப்பட்டது .அவரும் திருப்தியாக உணவை உண்டு முடித்தார். உணவு உண்டு முடித்தவுடன் அவருக்கு ஒரு சிறிய சபலம் தோன்றியது .யாரும் அறியாவண்ணம் அந்த தங்கச் சொம்பை எடுத்து தனது பைக்குள் வைத்துக் கொண்டார் .உடனே மன்னரிடம் சென்று வருகிறேன் என்று சொல்லி கிளம்பி விட்டார் .மன்னர் இருங்கள் அமருங்கள் ஓய்வெடுங்கள் என்று கூறியும் கேளாமல் தனது குடிலை நோக்கி சென்று விட்டார்.
குரு சென்ற சிறிது நேரத்திற்கு பிறகு சமையல் அறைத் தலைவர் அரசரிடம் வந்து அரசே குருவுக்கு வழங்கப்பட்ட தங்கச் சொம்பை காணவில்லை என்று தகவல் தெரிவித்தார். அதைக் கேள்விப்பட்டு அரசர் ஒன்றும் சொல்லவில்லை .அவர் மிகுந்த ஞானகுரு அவரைப் பற்றி நாம் தவறாக நினைப்பது தவறு என்று நினைத்து பேசாமல் இருங்கள் என்று கூறிவிட்டார். அதேசமயம் சொம்புடன் தன் குடிலுக்கு வந்த குருவிற்கு மனம் உறுத்திக்கொண்டே இருந்தது .இரவு தூங்க முயற்சித்தும் சரியான தூக்கம் வரவில்லை எப்படியோ பொழுது விடிந்தது. காலைக் கடனை கழித்து விட்ட பிறகு (உண்ட உணவில் உள்ள சத்துக்கள் அனைத்தும் வெளியேறி விட்ட பிறகு)குருவிற்கு திடீரென்று தாம் செய்த தவறு புலப்பட்டது. மாபெரும் தவறு செய்துவிட்டோம். இதற்கு பரிகாரமாக மன்னரிடம் சென்று உண்மையை ஒத்துக் கொண்டு தகுந்த தண்டனையை ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று விரும்பி அரசவை நோக்கிச் சென்றார் . பின் அரசரைக் கண்டு அரசே என்னை மன்னித்து விடுங்கள் நேற்று உணவு அருந்திய போது நான் தான் தங்களது தங்கச் சொம்பை எடுத்துக் கொண்டு சென்று விட்டேன் . இதற்கு என்ன தண்டனையோ அதை எனக்கு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
ராஜா ஒன்றும் கூறவில்லை அவருக்கு ஞான குருவைப்பற்றி தெரியும் .மேலும் மந்திரியை அருகில் அழைத்து அவரது செவியில் சில சங்கதிகளை கூறினார். உடனே மந்திரி அரசவையை விட்டு சென்று நேராக சமையலறைக்கு சென்று அங்கு சில பலரிடம் விசாரணை மேற்கொண்டு இறுதியாக சமையலறை தலைவனிடம் சில கேள்விகள் கேட்டார் .அதற்கு அவன் இரு தினங்களுக்கு முன்பு நமது பெட்டகத்தில் இருந்து 10 கிலோ அரிசியை சில கள்வர்கள் திருடிக் கொண்டு சென்று விட்டனர். நமது காவலாளிகள் மிகுந்த பிரயாசைப்பட்டு அந்த கள்வர்களைப் பிடித்து அந்த அரிசியை மீட்டுக் கொண்டு வந்தனர் .அந்த அரிசியிலிருந்து தான் நேற்று உணவு சமைக்கப்பட்டு குருவிற்கு வழங்கப்பட்டது என்று தெரிவித்தார்.உடனே மந்திரி விரைந்து வந்து அரசரிடம் தகவலைத் தெரிவித்தார்.
உடனே அரசர் நிலைமையைப் புரிந்துகொண்டு குருவே தங்கள் மேல் தவறில்லை உணவு பரிமாறுவது சமைப்பது அந்த உணவின் தன்மையை பொறுத்தது .நல்ல அரிசியிலிருந்து சமைத்து இருந்தால் தங்களுக்கு அந்த துர்க்குணம் தோன்றியிருக்காது .ஆனால் கவர்ந்து செல்லப்பட்ட அரிசியிலிருந்து தங்களுக்கு உணவு சமைத்து வழங்கியதால் அந்த குணம் அரிசி மூலம் தங்களுக்கும் சற்றே வந்த காரணத்தினால் தான் தாங்கள் அந்த சொம்பை திருடிச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது .இதற்கு காரணம் நான் தானே தவிர தாங்கள் அல்ல. ஆதலால் தாங்கள் தான் என்னை மன்னித்தருள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார் .குருவும் ஒன்றும் சொல்லாமல் அரசரை வணங்கி தன் குடிலுக்கு சென்றுவிட்டார்.
இந்தக் கதையை பாஞ்சாலிக்கு கூறிய பீஷ்மர் அம்மா சத்குரு .நல்ல குணம் வாய்ந்த குருவே திருடிய அரிசியில் இருந்து வந்த உணவை உண்டதால் துர்க்குணம் ஏற்பட்டது என்றால் காலகாலமாக நான் துரியோதனின் உணவை உண்டு கொண்டு இருந்தேன் .எனக்கு சில துர்குணங்கள் தோன்றியது என்றால் அதில் தவறு ஏதும் இல்லை அல்லவா என்று கூறி. மேலும் ஒரு உணவை சமைப்பதற்கு முன்பு அதை சமைப்பவர்கள் பக்தி மேலிட சில ஸ்லோகங்களையும் இதிகாச புராண கதைகளையும் மனதில் நினைத்து பகவானை நினைத்து கொண்டு பக்தியை நினைத்துக்கொண்டே சமைத்தால் அதை சாப்பிடுபவர்களுக்கும் சிறந்த நல்ல குணங்கள் உண்டாகும். சில கெட்ட குணங்களை நினைத்துக் கொண்டோ திட்டிக்கொண்டோ சமைத்தால் அந்த குணம் அது சமைப்பவரின் குணம் சமையலிலும் ஒட்டிக்கொண்டு அதை சாப்பிடுபவர்க்கும் ஒட்டிக்கொள்ளும் .ஆதலால் என்றும் உணவு சமைப்பவர்கள் நல்ல சிந்தனையோடு பயபக்தியோடு உணவை சமைக்க வேண்டும். அவ்வாறு சமைத்தால் அந்த குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் நற்குணம் ஏற்படும்என்று கூறி இனி நான் விஷ்ணு சஹஸ்ரநாமத்தை கூறுகிறேன் என்று கூறி பீஷ்மர் கதையை முடித்தார்.
இதுவே உணவே மருந்து மருந்தே உணவு .நல்ல குணத்தோடு நல்ல சிந்தனையோடு நல்ல செயல்களோடு சாத்வீகமான உணவைச் சமைத்து அந்த உணவை நாம் உண்டால் உடலில் எந்தவிதமான நோயும் வராது என்று கூறி இதுவரை படித்தமைக்கு நன்றி நன்றி என்று கூறி நாளை வேறு ஒரு வரலாறுடன் சந்திப்போம் என்று கூறி விடைபெறுகிறேன் நன்றி வணக்கம்.
Comments
Post a Comment