பொள்ளாச்சி சுப்பிரமணிய சுவாமி கோயில் வரலாறு
தெரிந்த கதை தெரியாத வரலாறு.
இன்று நாம் காண இருப்பது. பொள்ளாச்சி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்.
(நம்ம ஊருங்கோ நான் வசிக்கும் இடமுங்கோ)
மஹாபாரதத்தில் யஷப் பிரசன்னம் என்ற ஒரு பகுதி உண்டு. மிகவும் முக்கியமான ஒன்று அவசியம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று. அதில் தருமதேவன் யஷனாக வந்து விஷப் பொய்கை நீரை அனைவரும் அருந்தி மயக்கமுற்ற நிலையில் இறுதியாக தர்மர் வருவார்.அவரிடம் யஷன் கேட்கும் கேள்வி.
பல கேள்விகள் கேட்பார் அதில் ஒன்று.
உலகத்திலேயே சிறந்தது மிகவும் உன்னதமானது போற்றிப் பாராட்ட வேண்டியது எது என்பார்.
அதற்கு தர்மர் எவன் ஒருவன் தன் சுய தேவைக்காக/பொழப்புக்காக ஊர் விட்டு ஊர் வந்து தனது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளாமல் தனது சொந்த ஊரிலேயே இருந்து கொண்டு தனது தேவைகளை பூர்த்தி செய்து கொள்கிறானோ அவனே பாக்யவான் என்பார்.
நான் 16 வயதில் ஊரை விட்டு சென்று இந்தியாவில் இந்திய விமானப்படையில் அகில இந்தியாவையும் சுற்றி பின் பொழப்பிற்கு பல இடங்களையும் சுற்றி இறுதியில் ரிட்டயர்ட் ஆகி பொள்ளாச்சியில் செட்டில் ஆகி விட்டேன் (நான் இதை தெளிவாக கூற காரணம் யார் மனமும் புண் படக் கூடாது என்ற அக்கறை யில் தான் மேலும் யாரும் தவறாக நினைக்க கூடாது என்ற காரணத்தினால்)
இனி பொள்ளாச்சி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் பற்றி பார்ப்போம்.
பொள்ளாச்சியில் 1000 ஆண்டு பழமையான சுப்ரமணிய சுவாமி திருக்கோவில்
மிகவும் பழமையான திருக்கோவில்களில் பொள்ளாச்சியில் உள்ள அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் மிகவும் சக்தி வாய்ந்த, கம்பீரமான தோற்றத்துடன் உள்ள, மற்றும் அழகான முருகபெருமானை நாம் இங்கு காணலாம்.
ஒரு சில கோவில்களில் மட்டுமே நாம் உள்ளே நுழைந்தவுடன் ஒரு சிலிர்ப்பு ஏற்படும். நம்மை அறியாமலேயே ஒரு தெய்வீக ஈர்ப்பு ஏற்படும். அதை நாம் இங்கு உணரமுடிகிறது.புனிதமான இந்த தமிழ்நாட்டில் ஆயிரமாயிரம் கோவில்கள் உள்ளன. ஒவ்வொரு கோவிலும் தனி சிறப்பு கொண்டது. பல கோவில்கள் பரிகார தலமாக உள்ளது. அனைத்தையும் நாம் நேரில் சென்று தரிசிப்பது என்பது ஒரு சில புண்ணியாத்மாக்களுக்கு மட்டுமே சாத்தியப்பட்டது. நேரில் செல்ல இயலாதவர்களுக்கு இந்த கோவில்கள் பற்றி நமது பத்திரிக்கையில் வருவதை பக்தர்கள் படித்து மனதார வேண்டினாலே நல்ல பலன் கிட்டும்.
இந்த கோயில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, சோழர்கள் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது. இதை கொங்கு சுந்தரபாண்டியன், கொங்கு திருபுவன் சக்ரவர்த்தி, விக்ரம சோழன் ஆகியோரால் கட்டப்பட்டதை இங்குள்ள கல்வெட்டுக்கள் மூலம் அறியலாம். மேலும் கொச்சியை ஆண்ட மன்னரின் கல்வெட்டும் உள்ளது. அதில் இந்த தலத்தின் பெயர், திருவகதீஸ்வர் முடையார் கோவில் என்று குறிப்பிடப்பட்டுள்ளதால், இந்த திருத்தலம் சிவதலமாக இருந்திருக்கலாம் என்கின்றனர். இந்த திருத்தலத்தில் உள்ள சிற்பங்களை நாம் காணும்பொழுது, நமது தமிழர்களின் சிற்பக்கலை நுணுக்கமும் தேர்ச்சியும் தெரியவருகிறது. அநேகமாக ஒவ்வொரு இடத்திலும் நுட்பத்தை காணமுடிகிறது.
கோவிலுக்கு எதிரே உள்ள மேல் விதானத்தில் உள்ள தாமரை போன்ற அமைப்பில் பன்னிரெண்டு ராசி சிற்பங்கள், ஒரே கல்லில் செதுக்கப்பட்ட யாழியின் உருவச்சிலை, அதன் வாயில் தொங்குகின்ற 3 வளையங்கள், இந்த மூன்று வளையங்களும் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்து இருப்பது நம்மை அதிசயிக்க வைக்கிறது. முருகன் சன்னதிக்கு தென்பகுதியில் அமைந்துள்ள, சுந்தரேஸ்வரர்-மீனாட்சி சன்னதிகளுக்கு முன்பு 24 தூண்கள் கொண்ட திருமண மண்டபம் இருக்கிறது. இந்த மண்டபத்தில் உள்ள சிற்ப வேலைப்பாடு பார்ப்பவர்களை பிரமிக்க வைக்கிறது. அந்த சிற்பங்களில் உள்ள சில சிலைகளில் நகம், முடி, கண், கன்னத்தில் குழி விழுந்த பெண், இவைகளைக்காணும்பொழுது, நம் முன்னோர்களின் அறிவுத்திறன் , தொழில் நுட்பத்தின் மேன்மை புரிகிறது.
மேலும் அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருநாவு க்கரசர்,கண்ணப்ப நாயனார், பார்வதி கல்யாணம், மார்க்கண்டேயர், முருகன், தசாவதார சிற்பங்கள், சிவன் சன்னதி முன்பு, துல்லியமாக செதுக்கப்பட்டு உள்ளது. எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தது போன்று, லிங்கத்தின் மீது பால் சொரியும் பசு நேரில் உண்மையான பசுவைப்போலவே காட்சி தருகிறது. அம்மன் சன்னதி முன்பு, சரஸ்வதி, லட்சுமி, காமாட்சி அம்மன், காளி, மாரியம்மன், அர்த்தநாரீஸ்வரர், ராமர், சீதை, அனுமன், கண்ணன் காளிங்க நர்த்தனம், கோவர்த்தன கிரிதாரி ஆகிய அழகிய சிற்பங்களும் கவருவதாக உள்ளது.
பொள்ளாச்சி விவசாயம் செழிக்கும் பூமி. இங்கு முக்கிய தொழில் விவசாயம். தமிழக வார சந்தைகளிலேயே மிகவும் பெரிய சந்தை இங்குதான் உள்ளது. இதன் சுற்று வட்டாரத்தில் உள்ள அனைத்து பொருட்களும் இங்குள்ள வாரச்சந்தைக்கு வரும். பொருள் வாங்குவோரும், விற்பவர்களும் கூடும் இடம் இதுவாகும். இப்படி பல பொருட்களும் ஆட்சி செய்த இடம் என்பதால் பொருள் ஆட்சி என்று அழைக்கப்பட்டு பின்பு பொள்ளாச்சி என்று மருவியதாகக் கூறுகின்றனர்.
மூலவராக இருக்கும் முருகபெருமான், திருவாச்சி, மற்றும் மயில் ஆகியவை ஒரே கல்லில் வடிக்கப்பட்டுள்ளது, இந்த தலத்தின் சிறப்பு என்கின்றனர். கோவில் கிழக்கு நோக்கி, ஒருசுற்றுப்பிரகாரத்துடன் அமைந்துள்ளது. சிவன் சன்னதி முன்பு ராஜகோபுரம் உள்ளது. முருகன் கோவில் முன்பு ஒரு முகப்பு உள்ளது. கருவறையில் முருகபெருமான், வள்ளி தெய்வானையுடன் அழகாக மயில் மீது அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். நான்கு கரங்கள் உள்ளன. சுகாசனத்தில் அமர்ந்தபடி,பின்கையில் சக்தி ஆயுதமும், வச்சிரமும் உள்ளது. முன்கையை, அபய முத்திரை காட்டி, அருள் பாலிக்கிறார். அவர் அமர்ந்துள்ள மயிலின் கழுத்துப்பகுதியும் தலைப்பகுதியும் இடப்புறமாக இருப்பதால் இதை தேவமயில் என்கின்றனர். வள்ளி, தெய்வானையின் கரங்களில் மலர் உள்ளது. மற்றொரு கைகளில்,கை கத்ய வலம்பித முத்திரை காட்டி இருக்கின்றனர். கருவறையில் புடைப்பு சிற்பமாக இத்திருக்கோவிலைக்கட்டிய, சுந்தரபாண்டிய மன்னரும், அவரது துணைவியாரும் உள்ளனர். மஹாமண்டபத்தில், நடராஜ பெருமானும் சிவகாமி அம்மையும் ஐம்பொன்சிலையில் காட்சி தருகின்றனர்.
முருகனின் சன்னதிக்கு தென்புறம் சுந்தரேஸ்வரர், மீனாட்சி சன்னதிகள் அமைந்துள்ளன. முருகபெருமானுக்கு, பால் குடம் எடுத்து அலகு குத்தி நேர்த்தி கடன் செலுத்தினால் குடும்பம் சுபிட்சம் அடையும், விவசாயம் செழிக்கும் என்பது நம்பிக்கை. அடுத்து, இங்குள்ள துர்க்கைக்கு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ராகு கால பூஜை செய்ய, கல்யாணத்தடை நீங்கும், பிரிந்த குடும்பம் சேரும், குடும்பத்தில் ஏற்பட்டுள்ள மனவேற்றுமை மறையும் என்கின்றனர். ராமர்,சீதை திரு உருவச்சிலைகளுக்கு, வைகுண்ட ஏகாதசி, ராம நவமி அன்று, தங்க கவசம் சாத்தி சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. இந்த பூஜையில் கலந்து கொள்பவர்கள் நினைத்த காரியம் நடைபெறும். உத்தியோக உயர்வு, மனக்குழப்பங்கள் மறையும் என்பது ஐதீகம். சிவ சன்னதியின் சுற்றில், விநாயகர், பைரவர், தஷிணாமூர்த்தி, லிங்கோத்பவர் ஆகியோர் உள்ளனர்.
பொள்ளாச்சி முருகன் மும்மணிக்கோவை, கந்தன் பிள்ளைத்தமிழ், பொள்ளாச்சி சுப்ரமணியன் இரட்டை மணிமாலை ஆகிய நூல்கள் இத்தல முருகனின் புகழ் பாடும் பாடல்களைக் கொண்டவை. இங்கு மிகவும் விசேஷமாக, கந்தசஷ்டி விழா, சூரசம்ஹாரம், பிரதோஷம், வைகுண்ட ஏகாதசி, ராமநவமி, சிவராத்திரி, தமிழ்-ஆங்கில வருடப்பிறப்பு, தைப்பொங்கல், தீபாவளி, பங்குனி உத்திரம், கார்த்திகை தீபம் ஆகியவை கொண்டாடப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. தினமும் காலை 7 மணி முதல் பகல் 10 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கோவில் திறந்து இருக்கும்.
----- மேலும் தகவல்களுக்கு visit http://nammacoimbatore.in/ அல்லது "நம்ம கோயம்புத்தூர்" Android App - ஐ playstore - ல் nammacbe என search செய்து Download செய்யுங்கள்.
https://play.google.com/store/apps/details?id=com.bysoft.nammacbe&hl=en
இது வரை படித்தமைக்கு நன்றி நன்றி நன்றி
நாளை வேறொரு வரலாறுடன் சந்திப்போம்
Comments
Post a Comment