கோகுலாஷ்டமி யும் கோவிந்தராஜனும்
கோகுலாஷ்டமியும் கோவிந்தராஜனும்.
கோகுலாஷ்டமி வந்தாச்சு. அய்யரோ அய்யங்காரோ கோகுலாஷ்டமி எல்லாரும் கொண்டாடறா. ரோகிணி நாளில் அஷ்டமி திதியில் அவதரித்த க்ருஷ்ணுக்கு ரெண்டு நாள் பிறந்த நாளா கொண்டாடறதுல தப்பேயில்லை. நமக்கு முக்கியம் அன்னைக்கு செய்யக்கூடிய பட்சணங்கள் தான். என்னதான் கஷ்டமா இருந்தாலும் ஆத்துல செய்யற பட்சணத்தோட ருசியே ஜாஸ்திதான். அதுவும் அம்மாவோ ஆத்துக்காரியோ அன்பைப் பிசைந்து உருட்டின சீடையோட ருசி கடைல கிடைக்குமா? அதிலும் கோகுலாஷ்டமி கொஞ்சம் வித்யாசம். வெரைட்டி பட்சணங்கள் ஒரே நாள்ல பண்ணுவா. (தீபாவளி ஒரே ஸ்வீட் மயம்) எல்லாமே ஒருவாரம் வரை வச்சு சாப்பிடக்கூடிய ஐட்டம்ங்கறதனால ஒரு வாரம் டி.வி. பார்க்கும்போது கொறிக்கறதுக்கு ஸ்நாக்ஸுக்கு பஞ்சமில்லை. சின்னக்குழந்தையா இருக்கறப்போ இந்த பட்சணங்களுக்கு நடுவில சின்னதா ஆத்துல கடஞ்ச வெண்ணை உருண்டை வச்சிருப்பா. நாமதான் கிருஷ்ணர். அதை நக்கி திங்கற சுகமே அலாதிதான். சுக்கு சர்க்கரை என்ற பெயரில் செமிக்கறதுக்கு ஒரு ஐட்டம். சும்மா சொல்லக்கூடாது நம்மவாளை. திங்கறதுக்கு ஐட்டமும் பண்ணி அதைத் தின்னுட்டு கஷ்டப்படாம இருக்கறதுக்கு மருந்தும் தயார் பண்ற அறிவை எப்படி சிலாகிக்கறதுன்னு தெரியல. (தீபாவளிக்கு லேகியம்)
நிறைய பேர் எழுதறா. எதுக்காக இப்படி கஷ்டப்படணும் பேசாம க்ருஷ்ணா ஸ்வீட்ஸ்ல போய் வாங்கிண்டு வந்திரவேண்டியது தானேன்னு. உண்மையச் சொல்லுங்கோ எல்லாக்கடையிலும் முறுக்கு, தேங்குழல், தட்டை எல்லாமே ஒரே டேஸ்டாதான் இருக்கு. எல்லாத்துலயும் வெண்ணய போட்டு பிசைஞ்சு வச்சிருக்கான். இந்தப் பட்சணங்கள் ஆத்துல பண்றதுல நிறைய சங்கடங்கள் இருந்தாக்கூட அதுல நிறைய அனுபவங்களும் அன்பும் இருக்கும்.
இப்படித்தான் கல்யாணமாகி முதன் முறையா வேட்டாத்துல கோகுலாஷ்டமி. மாமனார் க்ருஷ்ணன் கோவில் பார்த்துண்டிருந்தார் அதனால ஆத்துக்காரி அடம் பிடித்து முந்தின நாளே தென்காசி போய்ச் சேர்ந்தோம். க்ருஷ்ணர் வீதி உலா, எல்லாராத்து வாசல்லயும் அர்ச்சனை என்று தெருவே அமர்க்களப்படும். ஆத்தில நைவேத்யம் எல்லாம் முடிஞ்சப்பறம் ஆத்து மாப்பிள்ளைக்கு ஒரு ப்ளேட் நிறைய பட்சணம் எடுத்துண்டு வந்து தந்தா ? ஆஹா மூத்த மாப்பிள்ளை இருந்தாக் கூட புது மாப்பிள்ளையான நமக்கு முதல் மரியாதை தராளே என்ற கர்வத்துடன் தட்டைப் பார்த்தேன். தூக்கி வாரிப் போட்டது. காரணம் குழந்தைகள் விளையாடற பந்து ஒன்று தட்டுல இருந்தது.
"என்னடி இது பந்தெல்லாம் திங்கறதுக்கு தரே?”
"கிண்டல் பண்ணாதீங்கோன்னா அது சீடை. “
உண்மையிலேயே அப்பதான் எனக்கு தெரிந்தது அது சீடைன்னு தெரிந்தது. டென்னிஸ் பால் சைஸுக்கு கொஞ்சம் சின்னதா வெல்லச்சீடையும், தேங்காய்சீடையும். இதை எப்படி திங்கப் போறோம்னு கவலை வந்திருத்து. என்னடா இது மதுரைக்கு வந்த சோதனைன்னு நினைச்சுண்டு தேங்காய்ச் சீடைய மெல்ல தரைல தட்டி தட்டிப் பார்த்தேன் சத்தம்தான் கேட்கறேதே தவிர சீடை அப்படியே இருந்தது. சுற்று முற்றும் பார்த்தேன். ஆத்து மூத்த மாப்பிள்ளையான ஷட்டகர் நமுட்டு சிரிப்பு சிரிச்சுண்டு இருக்கார். எல்லாரும் (சுமார் ஏழெட்டு பேர் ) என்னையே குறு குறுன்னு பார்த்துண்டு இருக்கா ?
"சும்மா அப்படியே வாயில போட்டுக்குங்கோ" ங்கறா மாமியார். நானென்ன க்ருஷ்ணரா உலக உருண்டைய வாயில போட்டுண்டு எல்லாருக்கும் காமிக்கறதுக்கு. சரி வந்தது வரட்டும்னு சீடையை எடுத்து பலமா தரையில அடிச்சேன்.
உடைஞ்சுடுத்து ...............................
..................................................
............................................
உடைஞ்சது தரை (பழைய செங்கல் தரை). சீடை அப்படியே இருந்தது. ஆத்துக்காரி என்ன ஒரு மாதிரி பார்க்கிறா.
ஆனாலும் நீங்க ரொம்ப மோசம் இப்படியா தரைய உடைப்பா. இத்துனூன்டு சீடைக்கு இந்த ஆர்ப்பாட்டமா?
இத்துனூன்டா ...... மலைத்தேன். ஆனால் ஒன்று பிஸிக்ஸ் படித்திருந்ததால் ஒன்று புரிந்தது சைஸ் என்பது ரிலேட்டிவ் கான்செப்ட். மாமியார் சைஸுக்கு டென்னிஸ் பால் சீடை சைஸ் கரெக்ட்தான். அப்புறம் வேற வழியில்லாம அம்மில எல்லாத்தையும் பொடிச்சுண்டு வந்து தின்னேன். அப்பறம் தான் தெரிஞ்சது அந்த வருஷம் நான்தான் டெஸ்ட் டோஸ் என்று.
மாமியார குத்தம் சொன்னது போதும். இதுக்கு மேல சொன்னா மாமி ஆவியா வந்து பயமுறுத்திருவா. கதையோட மெயின் ட்ராக்குக்கு வருவோம். எங்காத்து நண்பர் ஒருவர் ஒண்ணுவிட்ட மாமா என்பார். (எனக்கு இந்த ஒண்ணுவிட்ட கணக்கு புரிவதில்லை). க்ருஷ்ண ஜெயந்தின்னா கண்டிப்பா ஆஜராயிருவார். ரொம்ப நாளா எனக்குப் புரியலை. என்னடா இது. இந்த மனிதர் மற்ற எந்த விசேஷத்துக்கும் தலையைக் காட்றதே இல்லையே கோகுலாஷ்டமின்னா மட்டும் கரெக்டா என்ட்ரி கொடுக்கறாரேன்னு தலையைப் பிச்சுண்டு யோசித்தேன். ஒரு வேளை நம்மள க்ருஷ்ணாவதாரமா நினைச்சு பார்க்கறதுக்கு வராரோ. அந்தளவுக்கு நம்ம லீலைகள் வெளில வரலையே. இந்த வருஷம் வரட்டும் மனுஷன நேரா கேட்டுற வேண்டியதுதான்னு தீர்மானம் பண்ணிண்டுட்டேன்.
"குழந்தே சௌக்யமா ?”.... கோவிந்த ராஜன் ஆஜர்.
"வாங்கோ மாமா.... சௌக்யமா இருக்கேளா...." ஆத்துக்காரி பட்சணத்தட்டை அவர் முன்னால் பரப்பினாள்.
பொறுக்க முடியாமல் அந்த சந்தேகத்தை அவரிடம் கேட்டு விட்டேன்.
"ஏன் மாமா ... நீங்க கரெக்ட்டா கோகுலாஷ்டமி அன்னைக்கு மட்டும் வரேள்...பாக்கி நாள்ல கூப்பிட்டாக்கூட வரமாட்டேங்கறேள்... என்ன ரகஸ்யம்னு சொல்லுங்கோ"
வாயில முறுக்கோட என்னைப்பார்த்து கண் ஜாடை செய்தார்.. ஆத்துக்காரி உள்ள போகட்டும் சொல்றேன்.. எனக்கு திக்கென்றது ... எனக்கு தெரியாமலே என்னுடைய க்ருஷ்ண லீலை இவருக்கு தெரிந்து விட்டதா ?
"அது ஒண்ணுமில்லடா.. நான் பல ஆத்துல பட்சணம் சாப்பிட்டிருக்கேன். எனக்கு பல்லில்லை பாரு அதனால கடிக்க முடியாது. அதுக்காக அவாள்ட்ட வேகாத பட்சணம் செய்யச் சொல்ல முடியுமா ? ஆனா உன் ஆத்துக்காரி அப்படியில்லை. எல்லா பட்சணமுமே நாக்காலே கடிக்கறமாதிரி பதமா பண்றா. பல்லுக்கு வேலையே இல்லை ... அதான் ... ஹி...ஹி"
அட பொக்க வாயா ? வேகாத பட்சணம் மட்டுமே பண்ணத் தெரிந்த எங்காத்துக்காரிக்கும் இப்படி ஒரு அடிமையா. ஒண்ணோ ரெண்டோ முறுக்கு வேகாம தின்னா நன்னா இருக்கும் எல்லாமே வேகாம திங்க முடியுமா ?
சர்வம் க்ருஷ்ணார்ப்பணம்
பின்குறிப்பு. இந்தக் கதையில் வரும் நான் நானல்ல. இப்போது ஆத்துக்காரியும் பேஸ்புக் பார்ப்பதால் இந்த குறிப்பு அவசியமாகிறது.
Comments
Post a Comment