யாருக்கு என்ன வோ அதே வாய்க்கும்

தெரிந்த கதை தெரியாத வரலாறு

இன்று நாம் காணவிருப்பது எந்த அரிசியில யார் பேர் எழுதியிருக்கோஅவர்களுக்குத்தான் அது கிடைக்கும். ஆம்பூர் பிரியாணி அருப்புக்கோட்டையில் இருக்கிறவனுக்கு தான் கிடைக்கனும்னா அதை மாற்ற யாராலும் முடியாது. இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று .இந்த பொருள் இவனுக்குத்தான் கிடைக்கும்னு இருந்தால் அதில் எந்தவித மாற்றமும் இல்லை .அது என்ன அதைப் பற்றி சற்று விரிவாக விளக்கமாக பார்ப்போமா.

(இந்தக் கதை நடக்கும் ஆண்டு கிட்டத்தட்ட 50 வருடங்களுக்கு முன்பு இன்று போல் மொபைல் whatsapp எதுவும் கிடையாது என்பதை தயவுசெய்து ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்)

மயிலாப்பூரில் குளத்துக்கு அருகில் உள்ள வீடுகளில் ஒரு வீட்டில் சுப்பையா என்பவர் வசித்து வந்தார். அவருடைய வயது 80 அவர் தினமும் மாலை நேரம் தடி ஊன்றி தனது நண்பர்களுடன் நடைபயிற்சி மேற்கொள்வார். அவ்வாறு நடைப்பயிற்சி மேற்கொள்ளும் போது ஒருநாள் நண்பர்களுக்குள் ஒரு சம்பாஷனை வந்தது. நீங்கள் எல்லோரும் திருநெல்வேலி அல்வா சாப்பிட்டு இருக்கிறீர்களா என்று பொத்தம் பொதுவாக ஒருவர் கேட்டார் .நமது நண்பர் சுப்பையாவை தவிர அனைவரும் சாப்பிட்டு இருக்கோம் என்று கூறினார்கள் .நான் சாப்பிடவில்லை என்று கூறியவுடன் நீர் வாழ்ந்து பிரயோஜனமில்லை திருநெல்வேலி அல்வா சாப்பிடாதவன் உயிரோடு இருப்பதில் அர்த்தமில்லை என்ன தவறு செய்துவிட்டாய் அதை சாப்பிட்டால் தான்  நாம் வாழ்கிறோம் என்பதற்கே பிரயோஜனம் என்று அவரை மிகவும் சூடு ஏற்றி விட்டார்கள் நண்பர்கள்.

அன்று முதல் எப் பொழுதும் அவர் திருநெல்வேலி அல்வா திருநெல்வேலி அல்வா என்றே மனப்பாடம் செய்து கொண்டிருந்தார். அவர் குடியிருக்கும் வீட்டில் இருந்து மூன்றாவது வீட்டில் பக்திப் பரவசம்  மிக்க ஒரு வாலிப பையன் 20  வயதே நிரம்பிய அவன் தனது தந்தையிடம் சொல்லி கொண்டிருக்கின்றான். அப்பா நான் கன்னியாகுமரி சென்று தவம் தியானம் முதலியவைகளை  விவேகானந்தர் பாறையில் மேற்கொள்ளப் போகிறேன் என்று. உடனே நமது சுப்பையாவிற்கு பொறி தட்டியது கன்னியாகுமரி செல்ல வேண்டுமென்றால் திருநெல்வேலியைத் தாண்டித்தானே போகவேண்டும் என்று நினைத்து உடனே அந்த பையனிடம் சென்று தம்பி நீ திருநெல்வேலி தாண்டித்தானே கன்னியாகுமரி செல்ல வேண்டும்.அப்படி என்றால் எனக்கு மறக்காம திருநெல்வேலியில்  இறங்கி இருட்டுக் கடையில் இருந்து ஒரு கிலோ அல்வா வாங்கி வா என்று சொல்லி பணத்தை கொடுத்தார் .அவன் சற்று ஒருகணம் அவரைத் திரும்பிப் பார்த்தான் 20 வயதில் எனக்கு ஞானம் 80 வயதில் அவருக்கு அஞ்ஞானம் .என்ன செய்வது இது இறைவன் விதி என்று சொல்லிக்கொண்டு சரி அய்யா வாங்கி வருகிறேன் என்று பணத்தை வாங்கிக் கொண்டு அவன் சென்று விட்டான்.

கன்னியாகுமரி சென்று தியானம் தவத்தை முடித்து திரும்பி ஊர் செல்லலாம் என்று நினைக்கும் பொழுது பெரியவருடைய முகம் ஞாபகத்துக்கு வந்தது. உடனே திருநெல்வேலியில்  இருட்டு கடைக்கு சென்று ஒரு கிலோ அல்வா வாங்கி கொண்டு  உடனே சென்னை நோக்கிப் பயணித்தான். இரவோடு இரவாக சென்னை வந்து அவருடைய வீட்டின் கதவைத் தட்டி ஐயா நீங்கள் கேட்ட திருநெல்வேலி அல்வா இந்தாருங்கள் என்று கொடுத்தான். (அவன் வழி எங்கும் நினைத்துக் கொண்டு வந்தான். பெரியவர் திருநெல்வேலி அல்வா கண்டவுடன் மிகவும் மகிழ்ந்து விடுவார் என்ன ஒரு ஆனந்தம் அடைவார் என்று கற்பனை செய்து கொண்டு வந்து கொண்டிருந்தான்) ஆனால் ம்ம்ம்ம்ம்ம் அங்கே வை என்று ஒரு அசால்டாக பதில் சொன்னார். என்னடா இது நாள்தோறும் திருநெல்வேலி அல்வா தான் வேண்டும் என்று தவித்துக் கொண்டிருந்தவர் இன்று கையில் கிடைத்தவுடன் இவ்வளவு அசால்டாக பதில் சொல்கிறாரேஎன்று அந்த பையனுக்கு வருத்தம் .இருந்தபோதிலும் சரி என்று கொடுத்துவிட்டு சென்றுவிட்டார்.

சரி . நேற்றுவரை திருநெல்வேலி அல்வா என்று பிராணனை விட்டு கொண்டிருந்தவர் திடீரென்று வெறுப்புறக் காரணம் என்ன .சற்று ரீப்ளே செய்து பார்ப்போமா.ஒரு இரண்டு நாள் முன்பு என்ன நடந்தது என்பதை நாம் பார்ப்போம்.

பெரியவருக்கு ஒரே பையன் .மகன் மேல் மிகுந்த அன்பு தந்தைக்கு. மகனுக்கும் தந்தை மேல் அன்பு .வெளிநாட்டிலிருந்து தந்தையை காண வந்திருக்கிறான்  மகன்.தந்தையின் நடவடிக்கைகளை ப் பார்த்து அவனுக்கு ஒரு சிறு சந்தேகம் தோன்ற தந்தையே நாளை நாம் முழு உடல் பரிசோதனை மருத்துவரிடம் சென்று செய்வோம் என்று கூறினான். தந்தையை அழைத்துக் கொண்டு மருத்துவரிடம் சென்று அனைத்து சோதனைகளையும் முடித்தபின் மருத்துவர் கூறுகிறார் .அய்யா நீங்கள் ஒரு நடமாடும் சர்க்கரை ஆலை என்று.இனிப்பு என்பதை நீங்கள் தொடவே கூடாது என்று கூறுகிறார் .சரி ரீப்ளேஐ முடித்துவிட்டு நடப்புக்கு வருவோம் .இதுதான் அவர்  அல்வாவை வெறுப்பதற்கான காரணம்.

நேற்றுவரை மிகுந்த பற்று கொண்டிருந்த அல்வா மீது இன்று வெறுப்பு வந்தவுடன் அதை தின்பதற்கு மனம் தோன்றவில்லை .தூக்கி எறியவும் விருப்பமில்லை என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த போது அவருடைய பக்கத்து வீட்டில் அவருடைய சொந்தத் தம்பி வசித்துக் கொண்டிருந்தார். உடனே தம்பியை அழைத்து தம்பி உனக்காக நான் திருநெல்வேலியில் இருந்து அல்வா வாங்கி வந்தேன் இந்தா என்று கொடுத்தார். தம்பிக்கு ஒரே ஆச்சர்யம். எச்சைக் கையில் காக்கா ஓட்டாத அண்ணன் அல்வா கொடுக்கிறாரே என்று.

இருந்தும் ஒன்றும் சொல்லாமல் அண்ணா மிக்க மகிழ்ச்சி என்று அந்த அல்வாவை வாங்கிக்கொண்டார். இரவு நேரம் பொழுது விடிந்து பூஜை முதலியன செய்து பின் புசிக்கலாம் என்று வாங்கி வைத்துக்கொண்டார். பொழுதும் புலர்ந்தது .இவர ஸ்நானப் பிராப்தி களை முடித்துக்கொண்டு அல்வாவை திங்கலாம் என்று அதை எடுக்கும் பொழுது ஐயா தந்தி என்றொரு குரல்( 50 ஆண்டுகள் முன்பு என்பதனால் அந்த காலத்தில் தந்தி தான் பிரதான தகவல் தொடர்பு அதை கருத்தில் கொள்ள வேண்டும்)

என்ன என்று தந்தியை வாங்கிப்பார்த்தால் ஆசையுடன் வளர்த்த அன்பு மகள் மரணம் என்று ஒரு செய்தி வந்திருக்கிறது .இந்த நேரத்தில் அல்வாவை தின்பது  என்பது சாத்தியமா.அல்வாவை பார்க்கிறார் தந்தியை பார்க்கிறார் மாறி மாறி பார்த்துக் கொண்டு என்னடா இது சோதனை என்று நினைத்துக்கொண்டு இருக்கும்பொழுது அம்மா தாயே பசி சோறு போடுங்கள் என்று ஒரு பிச்சைக்காரன் வாசலில் சென்று கொண்டிருக்கிறான்.

இவர் உடனே அந்த அல்வாவை எடுத்து அவனுடைய பிச்சைப் பாத்திரத்தில் போட்டு விட்டார். அவனுக்கோ ஒரே ஆச்சரியம். பழைய சோறு கிடைக்குமா என்று நினைத்த இடத்தில் திருநெல்வேலி அல்வாவேகிடைத்திருக்கிறது என்று அவன் மிகவும் மகிழ்ந்து போனான். அதாவது அந்த வாலிப பையன் திருநெல்வேலி இருட்டுக் கடையில் அல்வா வாங்கும் பொழுது இது சென்னை மயிலாப்பூரிலுள்ள ஒரு பிச்சைக்காரனுக்கு தான் கிடைக்க வேண்டும் என்று அதில் பெயர் எழுதி இருக்கிறது என்பதை யாராவது அறிவோமா.

இதுதான் ஆண்டவனின் செயல் .விதி. இது இது இவனுக்குத்தான் என்று எழுதியிருந்தால் அதை மாற்ற முடியுமா. திருக்குறளில் கூறியதுபோல் யார்யார்வாய்க்கு ஏற்ப  என்று சொல்வார்களே அது போல் இன்னாருக்கு இன்னது தான் என்று போட்டு வைத்தால் அது இறைவன் அருளால் என்றும் மாறாமல் நடக்கும் என்று கூறி இதுவரை படித்தமைக்கு நன்றி நன்றி என்று கூறி நாளை வேறொரு வரலாறுடன் சந்திப்போம் என்று கூறி விடைபெறுகிறேன் நன்றி வணக்கம்.

Comments

Popular posts from this blog

மாசாணி அம்மன் வரலாறு

யாயும் ஞாயும் யாராகியரோ

முருகனின் அவதாரங்கள்