பண்டரிபுரம் மஹாத்மியம்

தெரிந்த கதை தெரியாத வரலாறு.

இன்று நாம் காண இருப்பது பண்டரிபுரம் பாண்டுரங்கன்.

ஒரு நாள் கிருஷ்ணனும் ருக்மணியும் துவாரகையில் ஊஞ்சலில் உற்சாகமாக உட்கார்ந்து இருந்தனர். அப்பொழுது அவர்களைக் காண நாரதர் வந்தார்.உடனே க்ருஷ்ணன் அவரிடம் தேவரிஷி இந்தக் காலத்தில் யாராவது பெற்றவர்களை மதிக்கிறார்களா என்று கேட்டார். அதற்கு நாரதர் என்ன கண்ணா இப்படி கேட்டு விட்டாய் பண்டரிபுரத்தில் புண்டலீகன் என்பவன் இருக்கிறான் என்று கூற வாருங்கள் போய்ப் பார்க்கலாம் என்று கூறினார்.

இனி புண்டலீகன் யார் என்ன எப்படி என்று பார்ப்போமா.

புண்டலீகன்

மகாராஷ்டிரத்தில் பிறந்த புண்டலீகன் என்பவன் தன் மனைவியின் துர்போதனையால் தாய் தந்தையரை மதிக்காமல் கொடுமைப்படுத்தினான்.ஒரு சமயம் புண்டலீகன் தன் குடும்பத்தோடு காசிக்குப் பயணமானான்.அப்போது தாய்தந்தையரை நடக்கவிட்டு தனக்கும் மனைவிக்கும் மட்டும் குதிரை ஏற்பாடு செய்து கொண்டான். அன்று இரவு அவர்கள் குக்குட முனிவரின் ஆசிரமத்தில் தங்கினர். உறக்கம் வராததால் புண்டலீகன் வெளியே வந்து உலாவினான். அப்போது மங்கிய நிலவொளியில் குடிசையின் வாசலை அழகற்ற தோற்றம் கொண்ட மூன்று பெண்கள் சுத்தம் செய்வதைக் கண்டான். சிறிது நேரத்திற்குப் பின் மூன்று தெய்வீக மங்கையர் ஆசிரமத்திலிருந்து வெளியேறினர்.அவர்களைப் பணிந்தான் புண்டலீகன்.

தாய்மார்களே!நீங்கள் யார்?சற்று முன் குரூபிகளாக ஆசிரமத்தின் உள்ளே சென்றது யார்?வெளியே வந்துள்ள நீங்கள் யாரென்று கூறுங்கள் அம்மா என்றான். அதற்கு அவர்கள் மகனே, நாங்கள் மூவரும் கங்கை,யமுனை,சரஸ்வதி என்கிற நதிகள் நாங்கள். மக்கள் தங்கள் பாவங்கள் நீங்க எங்கள் நீரில்  தினமும் மூழ்குகிறார்கள். அவர்களின் பாவங்களிலிருந்து விடுபட நாங்கள் தினமும் இங்கு வந்து சேவை செய்கிறோம் என்று கூறினார்கள். புண்ணிய நதிகளான உங்கள் பாவங்களையே போக்கும் சக்தி இந்த முனிவருக்கு எப்படி வந்தது?என்று சந்தேகத்துடன் கேட்டான் புண்டலீகன்.புண்டலீகா இவர் தன் பெற்றோர்களை தெய்வத்திற்கும் மேலாகப் பேணிப் பூஜித்துப் பணிவிடை செய்து வருவது தான். இது ஒன்றே இவருக்கு இத்தகைய சக்தியை அளித்துள்ளது என்றனர் உடனே புண்டலீகன் தாயே கங்காதேவி!நான் வயதான என் தாய் தந்தையை மதிக்காமல் துன்புறுத்திவிட்டேன்.என் பாவம் நீங்குவதற்கு நீங்கள்தான் வழிகாட்ட வேண்டும் என்று வேணடினான்.மகனே நீ இனியாவது உன் பெற்றோருக்குச் சேவை செய்து அவர்களை மகிழ்ச்சியாக வைத்திரு. இறைவன் உன்னிடம் கருணை காட்டுவார் என்றாள் கங்கா. நீண்ட நேரம் பிரார்த்தனை செய்த பிறகு தன் பெற்றோரின் பாதங்களில் வீழ்ந்து மன்னிப்பு வேண்டினான் புண்டலீகன்.

அவர்களும் அவனை மன்னித்தார்கள்.புண்டலீகன் தன் தாய்,தந்தையை அழைத்து வந்து பீமா நதியின் கரையில் ஆசிரமம் அமைத்து அவர்களுக்கு அன்புடன் சேவை செய்தான்.அவன் மனைவியும் மனம் திருந்தினாள்.புண்டலீகன் தன் பெற்றோருக்குச் செய்யும் சேவை பற்றி அறிந்து ருக்மிணியுடன் ஸ்ரீகிருஷ்ணர் அவனிடம் வந்தார்.புண்டலீகா! புண்டலீகா!என்று அன்புடன் அழைத்தார் கிருஷ்ணர்.ஓ கண்ணனா,வா, வா,இதோ,என் பெற்றோருக்குச் சேவை முடித்துவிட்டு வருகிறேன். அதுவரை இந்தக் கல்லின் மீது அமர்ந்து சற்று இளைப்பாறு என்று புண்டலீகன் கூறி ஒரு செங்கல்லை எடுத்துப் போட்டான்.

கிருஷ்ணர் உட்காராமல் கல்லின் மேல் இடுப்பில் கை வைத்தபடி நின்றார். அன்றிலிருந்து இன்றுவரை அவ்வாறு நின்று கொண்டே இருக்கிறார்.

இந்தக் கல்லுக்கு ஒரு வரலாறு உண்டு.சுக்கிரன் மகன் வாஷ்டன் இந்திரனைக் கொன்று அந்தப் பதவியை அடைய விரும்பினான்.அதனால் விருத்தாசுரனிடம் அவன் உதவி வேண்டினான். அப்போது அவன் கர்வமாக...இதென்ன பிரமாதம்!இந்திரனை நான் ஒரு நொடியில் விழுங்கி விடுவேன் என்று கூறி விருத்தாசுரன் சொன்னபடி செய்துவிட்டான்.

சிறிது நேரத்தில் தேவர்கள் ஜுரும்பிகாஸ்திரத்தை ஏவ அதனால் தாக்குண்ட அசுரன் கொட்டாவிவிட்டான்.அப்போது இந்திரன் சிறு உருவாய் வெளிவந்து தப்பித்தான்.நாளடைவில் இந்திரனும் விருத்தாசுரனும் சமரசமானார்கள்.ஆனால் இந்திரனுக்குப் பகைமை உணர்ச்சி ஒழியவில்லை.இவனை ஈரப் பொருளாலோ,உலர்ந்தப் பொருளாலோ கொல்ல முடியாது.ஆதலால் அம்பிகையை வேண்டி வரம் பெறுவோம் என்று வேண்டினார். அம்பிகையும் மனம்  மகிழ்ந்து இந்திரன் வேண்டுதலால் கடலில் மலையளவு நுரை போன்ற விஷப் பொருள் ஏற்பட்டது.அதை வஜ்ராயுதத்தில் பூசி அசுரனைக் கொன்றான். உடனே விருத்தாச்சரன் இந்திரா துரோகி! நீ என்னை வஞ்சித்து விட்டாய். கல்மனம் கொண்ட நீ ஒரு கல்ப காலம் கல்லாகிக் கிடப்பாய் என அசுரன் சாபமிட்டான். உடனே இந்திரன் ப்ரஹஸ்பதியிடம் (வியாழன் பகவான்)சாப விமோசனம் கேட்டான் அதற்கு பிரஹஸ்பதி என்று பகவான் ஸ்ரீகிருஷ்ணர் உன் மேல் நிற்கிறாரோ அன்று உனக்கு சாப  விமோசனம் என்று கூறினார்.

அந்தக்கல்  தான்  புண்டலீகனின் ஆசிரமம் முன் பல வருடங்களாக கிடந்தது. அந்தக் கல்லின் மீதுதான் புண்டலீகன் ஸ்ரீகிருஷ்ணரை நிற்கச் சொன்னார்.இப்போது ஸ்ரீகிருஷ்ணரின் கால் பட்டதால் சாபவிமோசனம் பெற்ற இந்திரன் கல்லிலிருந்து வெளிப்பட்டான்.

பிரபோ நமஸ்கரிக்கிறேன் தங்கள் திருவடி பட்டதால் சாபவிமோசனம் பெற்றேன் என்று இந்திரன் கூறி கிருஷ்ணனை  நமஸ்கரித்து பின் இந்திரலோகம் சென்றான்.

நீண்ட நேரம் கழித்து பெற்றோர் சேவை முடித்து வந்து புண்டலீகன் ஸ்ரீகிருஷ்ணரை வணங்கினான்.மன்னிப்பு வேண்டினான். மாதா,பிதாவுக்குச் சேவை செய்வதற்காக என்னையே காக்க வைத்த உன்னை மெச்சுகிறேன்.வேண்டும் வரம் கேள் என்றார். பிரபோ  என் தாய் தந்தையர் தினமும்  குளிப்பதற்கு நீண்ட தூரம் போகவேண்டி உள்ளது ஆதலால் தாங்கள் ஏதாவதுசெய்ய வேண்டும் என்றான்.  உடனே க்ருஷ்ணர் தன் ஆட்காட்டி விரலால் அர்த்தம சந்திர பிம்பம் போல் திருப்பினார் . உடனே பீமா நதி புண்டலீகன் வீட்டின்  கொல்லைப்புற வழியாக ஓடியது. மேலும் அன்றிலிருந்து பீமா நதி என்ற பெயர் மாறி சந்திரபாகா நதி என்று அழைக்கப்படுகிறது.

  க்ருஷ்ணன் மேலும் என்ன வேண்டும் என்று கேட்க தாங்கள் இங்கு விட்டலன் என்ற  நாமத்துடன்  இங்கே எழுந்தருளி பக்தர்களுக்கு அனுக்கிரகம் செய்ய வேண்டும் என்று வேண்டிக் கொண்டான். மேலும் இந்தப் புனித இடம் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்குப் பக்தியையூட்ட வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டான்.

அன்றிலிருந்து
அத்திருத்தலம் புண்டலீகபுரம் என அழைக்கப்பட்டு பிறகு பண்டரிபுரமானது.

விட்டல். என்றால் மராத்தியில் செங்கல் என்று பெயர்.செங்கல் மேல் நின்றதால்  க்ருஷ்ணன் அன்றிலிருந்து விட்டலன் என்று அழைக்கப்படுகிறார்.

இதுவே பண்டரிபுர மஹாத்மியம்.

இது வரை படித்தமைக்கு நன்றி நன்றி நன்றி
நாளை வேறொரு வரலாறுடன் சந்திப்போம்.

Comments

Popular posts from this blog

மாசாணி அம்மன் வரலாறு

யாயும் ஞாயும் யாராகியரோ

கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும்