அன்னதானத்தின் மகிமை
தெரிந்த கதை தெரியாத வரலாறு
இன்று நாம் காண இருப்பது அன்னதானப் பலன் அன்னதானத்தின் மகிமை.
அது என்ன அன்னதானப் பலன். அன்னதானத்தின் மகிமை.அதைப்பற்றி சற்று விரிவாக விளக்கமாக பார்ப்போமா.
(எனக்கு எட்டு ஒன்பது பத்து வயசு இருக்கும். என் தகப்பனார் இந்த கதையை அடிக்கடி கூறுவார். அது மனதில் அப்படியே பதிந்து விட்டது. இத்தனை வருடம் கழித்தும் அதை ஞாபகம் வைத்திருந்து சற்றும் சிதைக்காமல் சிந்தாமல் தருவதற்கு முயற்சி செய்கிறேன். பிழை இருந்தால் பொறுத்தருள்க).
ஒரு குருகுலத்தில் குரு பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார். மாணவர்கள் சிரத்தையாக கேட்டுக்கொண்டிருக்கிறார்கள் .அப்பொழுது ஒரு மாணவன் குருவிடம் குருவே அன்னதானப் பலன் என்றால் என்ன அதன் மகிமை என்ன என்று கேட்கிறான் .அதற்கு குரு இதற்கு விளக்கம் என்னால் தர இயலாது .நீ தவம் தியானம் மேற்கொண்டு இறைவனை கண்டு அவரிடம் இதற்கான விளக்கம் கேள் என்று கூறுகிறார் .அவன் உடனே சரி என்று கூறி குருவை வணங்கி விட்டு தவம் செய்வதற்கு கானகத்தை நோக்கிச் செல்கிறான்.
அவன் காடுமேடெல்லாம் கடந்து சென்று கொண்டிருக்கும் பொழுது இருட்டிவிட்டது. தூரத்தில் ஒரு வேடுவனும் அவன் மனைவியும் ஒரு பரணில் தங்கி இருப்பது தெரிந்து அவர்களிடம் சென்றான். அப்பொழுது வேடுவன் இறங்கி வந்து அவனை மனமார வரவேற்று அவனுக்கு வேண்டிய உபசரிப்புகள் செய்து அவனுக்கு போஜனம் இடுகிறான்.அதாவது அவனுக்கு அன்னம் இடுகிறான். அப்பொழுது வேடுவச்சி நான் சமைத்ததே கொஞ்சூண்டு என் பங்கு போக உங்களுக்கு கொடுத்துட்டேன் ஒழுங்கா அத நீ சாப்பிடு.அவனுக்கு கொடுத்துவிட்டாய் என்றால் உனக்கு ஒன்னும் இருக்காது.மேலும் என் பங்கிலிருந்து நான் உனக்கு தரமாட்டேன் சொல்லிப்புட்டேன் என்று கூறினாள்.
அவன் தனக்கு வைத்திருந்த உணவை அவனுக்கு அளித்து தான் பட்டினியுடன் கிடந்தான் .அதற்கு அவன் மனைவி அவனை மிகவும் திட்டினாள். பிறகு அவன் தனக்கு அருகிலேயே பரணில் அவனுக்கு வேண்டிய செகரியங்களை செய்து கொடுத்தான். இவர்கள் இருவரும் ஒரு ஓரமாக படுத்துக் கொண்டனர். இரவு இருட்டில் அவன் பரணிலிருந்து தடுக்கி கீழே விழ ஒரு கரடி அவனை இழுத்துச் சென்று சாப்பிட்டது .அது கண்டு அவன் மனைவிஅவள் ஐயோ என்று அலறி அவளும் நிலைகுலைந்து கீழே விழ அவளையும் ஒரு புலி இழுத்துச் சென்று சாப்பிட்டது.
இந்த மாணவனும் மிகவும் பயந்து இறங்கவும் முடியாமல் விழித்துக்கொண்டே இருந்து பரணில் இருந்தபடியேஇருட்டைக் கழித்தான். பொழுது புலர்ந்தது .அவன் தவம் செய்ய கானகம் நோக்கி சென்று கொண்டிருக்கும் பொழுது வழியில் மிக நீளமான ஒரு நல்ல பாம்பு அவனிடம் வினவியது நீ எங்கு செல்கிறாய் என்று .அதற்கு அவன் இறைவனிடம் அன்னதானப்பலனைஅறிய விரும்புகிறேன். அதற்காக சென்று கொண்டிருக்கிறேன் என்று கூறினான்.
உடனே நல்ல பாம்பு நான் எல்லாருக்கும் தொந்தரவு தருகிறேன் என்று சொல்லி என்னை அனைவரும் ஒதுக்கி வைத்துவிட்டார்கள். இப்பொழுது என் பசிக்கு சரிவர ஆகாரம் கிடைப்பதில்லை அதற்கு என்ன காரணம் என்று இறைவனிடம் கேட்டு வா என்று கூறியது. அவனும் சரி என்று கூறி விட்டு மேலே சென்றான்.
அவன் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் பொழுது ஒரு மரத்தினடியில் இளைப்பாறுவதற்காக தங்கினான்.அப்பொழுது அந்த மரம் அவனிடம் பேசியது .நீ எங்கு செல்கிறாய் என்று .அதற்கு அவன் நான் இறைவனை காணச் செல்கிறேன் என்று கூறினான். அதற்கு அந்த மரம் என்னில் நிறைய கனிகள் பூத்து குலுங்குகின்றன. ஆனால் யாருமே உண்பது இல்லை அதற்கு என்ன காரணம் என்று இறைவனை கேட்டு வா என்று கூறியது. அவனும் சரி என்று கூறி விட்டு மேலே பயணத்தை தொடர்ந்தான்.
அவன் பயணம் செய்து கொண்டிருக்கும் பொழுது ஒரு வீட்டின் அருகே வந்தான் .அந்த வீட்டில் ஒரு பெரியவர் தன் இரு மகள்களுடன் வாழ்ந்து வந்தார். அவனிடம் நீ எங்கே செல்கிறாய் என்று கேட்டதற்கு அவன் அனைவரிடமும் கூறிய பதிலையே கூறினான். அதற்கு அவர் நான் விவசாயம் செய்கிறேன் எவ்வளவுதான் கஸ்டப்பட்டு பாத்தி கட்டி வரப்பு கட்டினாலும் அது உடைந்துவிடுகிறது. அதற்கு என்ன காரணம் என்று இறைவனை கேட்டு வா என்று கூறினார். அவனும் சரி என்று கூறிவிட்டு மேலே பயணத்தைத் தொடர்ந்தான்.
தவம் செய்யுமிடம் வந்து அவன் தவம் செய்ய ஆரம்பித்தான் .மிகக் கடுமையாக தவம் செய்தான். உடலை வருத்தி மனதை அடக்கி இறைவனை நினைத்து தியானம் செய்தான். அவனுடைய தவத்திற்கு மெச்சி இறைவன் அவனுக்குக் காட்சி தந்தார் .என்ன வேண்டும் என்று வினவினார் .அதற்கு அவன் முதலாவதாக
பெரியவரின் கோரிக்கையை கூறினான். அதற்கு இறைவன் வயது வந்த பெண்களுக்கு தக்க பருவத்தில் திருமணம் செய்ய வேண்டும். வயதான பெண்கள் வீட்டில் இருந்தால் அந்த வீடு விளங்காது. அவர்கள் விடும் ஏக்கப்பெருமூச்சு காரணமாகத்தான் வரப்பு உடைந்து போகிறது. ஆதலால் அவர்களுக்கு திருமணம் செய்து வைத்து அவர்களது ஏக்கத்தை தடுத்து நிறுத்தினால் வரப்பு உடைவது நிற்கும் என்று கூறினார்.
இரண்டாவதாக அந்த மரத்தின் கோரிக்கையை வைத்தான் .அதற்கு இறைவன் அந்த மரம் தன்னிடத்திலே மிகப்பெரிய புதையலை கொண்டிருக்கிறது அதை யாருக்கும் தர மறுக்கிறது அதனால்தான் அதன் கனிகளை யாரும் உண்பதில்லை என்று கூறினார்.
மூன்றாவதாக நல்லபாம்பின் கோரிக்கையை கூறும்பொழுது அந்த பாம்பு மாணிக்கத்தை தன்னில் வைத்திருந்து அதன் ஒளியை பரப்பிக் கொண்டிருப்பதால் அந்த ஒளியில் அனைத்து பிராணிகளும் ஓடிவிடுவதால் அதற்கு ஆகாரம் கிடைப்பதில்லை என்று கூறினார்.
இறுதியாக ஐயனே அன்னதானப் பலன் மகிமை என்றால் என்ன என்று வினவினான். அதற்கு இறைவன் இந்த ஊர் ராஜாவின் மனைவிக்கு குழந்தை பிறக்கப்போகிறது .அதனிடம் சென்று உனது கேள்வியை கேள் என்று கூறினார். இவனும் சரி என்று நோக்கி நகரத்தை நோக்கி வரலானான்.
முதலில் பெரியவரிடம் இறைவன் கூறியதை கூற அப்படியானால் என் இரண்டு பெண்களையும் நீயே திருமணம் செய்து கொள் என்று கூறி அவனுக்கே திருமணம் செய்து வைத்தார். இரண்டாவது மரத்திடம் கூற அந்த புதையலை நீயே எடுத்துக்கொள் என்று கூறி புதையலை அவனுக்கே கொடுத்தது.மூன்றாவதாக பாம்பிடம் கூற அப்படியா இந்த மாணிக்கத்திற்கு நீதான் தகுதி உடையவன் என்று கூறி அதை அவனுக்கே கொடுத்தது. அனைத்தையும் பெற்றுக் கொண்டு அவன் நகரத்தை நோக்கி வந்து கொண்டிருந்தான்.
இதற்கிடையில் இவன் இறைவனைக் கண்டு தரிசித்தது அனைவருக்கும் தெரிய அந்த ஊர் ராஜாவே அவனை நேரில் வந்து அழைத்து அரண்மனைக்குக் கூட்டிச் சென்றார் .அப்பொழுது அவன் ராஜாவிடம் இன்னும் சற்று நேரத்தில் தங்கள் மனைவிக்கு குழந்தை பிறக்கப்போகிறது அதை பூமியில் படாமல் யார் கையும் படாமல் ஒரு தங்கத் தாம்பாளத்தில் ஏந்தி வர வேண்டும் என்று கோரிக்கை வைத்தான். ( உண்மையோ பொய்யோ தெரியாது இன்றளவும் பூமியில் பிறக்கும் குழந்தைகளை மண்ணில் படாமல் யார் கையும் படாமல் தங்கத்தாம்பாளத்தில் ஏந்தி வந்தால் அது தன்னுடைய முற்பிறப்பினைக் கூறும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன .இதை யாரும் நடைமுறைப்படுத்தியது இல்லை என்ற காரணத்தால் இன்று வரை அதனுடைய உண்மைத் தன்மையை அறிந்து கொள்ள யாராலும் இயலவில்லை.)
அவன் கூறியது போல் ராஜாவும் குழந்தை பிறந்தவுடன் பூமியில் படாமல் தங்கத்தாம்பாளத்தில் ஏந்தி அவனிடம் கொண்டு வந்தார் .அவன் உடனே அந்த குழந்தையிடம் அன்னதானப் பலன் அன்னதான மகிமை என்றால் என்ன என்று கேட்டான்.
அதற்கு அந்த குழந்தை போன ஜென்மத்தில் நான் வேடுவனாக இருந்தேன். நீ என்னை நாடி வந்தாய் .உனக்கு நான் உணவளித்து அன்னதானம் இட்டேன் .அதன் பயனாக இந்த ஜென்மத்தில் நான் ராஜாவிற்கு மகனாக பிறந்து இருக்கிறேன். நான் அன்னதானம் செய்வதை என் மனைவி தடுத்தாள்.அதன் காரணமாக அந்த சேரியில் இருக்கும் பன்னிக்கு ஏழாவது பன்றிக்குட்டியாக என் மனைவி பிறந்திருக்கிறாள் .ஆதலால் அன்னதானம் செய்தால் மனிதனுடைய வாழ்வு இப்பிறவியிலும் அடுத்த பிறவியிலும் சிறக்கும் என்று கூறியது.
(நமது மத்தியமரில் திரு கீர்த்திவாசன் அவர்கள் தலைவருடன் இரண்டு நாட்களுக்கு முன்பு அனாதை ஆசிரமத்திற்கு சென்று அங்குள்ள குழந்தைகளுக்கு அன்னதானமும் அவர்களுக்கு வேண்டியதையும் செய்தார் .அதன் காரணமாக அவர்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார்கள்.அதில் நாமும் பங்கெடுத்துக் கொண்டால் நமது வாழ்வும் சிறக்கும் என்று ஒரு கொசுறு தகவலையும் கூறிக்கொள்கிறேன்)
இதுவே அன்ன தானத்தின் பலன்மகிமை.
இதுவரை படித்தமைக்கு நன்றி நன்றி நன்றி
நாளை வேறு ஒரு வரலாறுடன் சந்திப்போம்
Comments
Post a Comment