கோகர்ணம் குணந்தீஸ்வரர் முடீஸ்வரர் வரலாறு
தெரிந்த கதை தெரியாத வரலாறு.
கோகர்ணம் முர்டீஸ்வர் குணந்தீஸ்வர் தோன்றிய வரலாறு.
இன்று நாம் காண இருப்பது பஞ்ச லிங்கங்கள் ஆன கோகர்ணம் முர்டீஸ்வர் குணந்தீஸ்வர் ஜயந்தீஸ்வர் மருந்தீஸ்வரர் ஆகியவை தோன்றிய வரலாறு.
ஆத்ம லிங்கம் வரலாறு.
ஒரு முறை ராவணனின் தாய் கைகசி கடற்கரை மண்ணால் ஒரு லிங்கம் அமைத்து வழிபாடு செய்து கொண்டு இருந்தாள். அப்பொழுது அலைகள் வந்து அவள் செய்த லிங்கத்தை அடித்து கொண்டு போய் விட்டது. அந்த நேரத்தில் அங்கு வந்த ராவணன் தாய் வருத்தம் உற்று இருப்பதைப் பார்த்து தாயே கலங்க வேண்டாம் நான் ஈசனிடம் இருந்து ஆத்ம லிங்கம் வாங்கி வருகிறேன் அதை வைத்து பூஜை செய்வாயாக என்று கூறினான். அதைக் கேட்ட அவன் தாய் கைகசி மிகுந்த மகிழ்ச்சியுற்றாள்.
ராவணன் சென்று தவத்தில் ஈடுபட்டான். மிகவும் பயங்கரமான தவம் செய்து கொண்டிருந்தான். அப்பொழுது நாரதர் தேவலோகம் சென்று இந்திரன் முதலானோரை அழைத்துக்கொண்டு சத்யலோகம் சென்று பிரம்ம தேவனையும் அழைத்துக்கொண்டு அனைவரும் வைகுந்தம் சென்றனர். அங்கு நாரதர் பிரபோ ராவணன் தவம் செய்து கொண்டிரிக்கிறான் . சிவபெருமான் அவன் தவத்தில் மகிழ்ந்து ஆத்ம லிங்கத்தை கொடுத்து விடுவாரென்றால் அதன் பின் ராவணனை யாராலும் அழிக்க முடியாது என்று கூறி அனைவரும் சேர்ந்து கைலாயம் செல்வோம் வாருங்கள். அங்கு சென்று ஈசனிடம் முறையிடுவோம் என்று கூறினார். ஆனால் இவர்கள் செல்வதற்கு முன்பு ராவணனின் தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் அவன் கேட்ட ஆத்ம லிங்கத்தை கொடுத்து விட்டார். இவர்கள் அனைவரும் சென்று கூறியவுடன் நான் ஆத்ம லிங்கத்தை கொடுத்து விட்டேன் அவன் அதை எடுத்துக் கொண்டு கோகர்ணம் நோக்கி போகிறான் . அவன் அதை எடுத்துக் கொண்டு இலங்கை சென்று சேராமல் நடுவில் இறக்கி வைத்தால் அதன் சக்தி பாதாளம் வரை பாய்ந்து விடும். பின் அவனால் ஒன்றும் செய்ய இயலாது என்று கூறினார்.
அதைக் கேட்டு அனைவரும் ராவணனைக் காண வந்து கொண்டு இருக்கும் போது வழியில் ராவணன் இவர்கள் அனைவரையும் பார்த்து மிகவும் கோபப்பட்டு வேகமாக கோகர்ணம் நோக்கி போனான். உடனே மஹாவிஷ்ணு தனது சுதர்சன சக்கரத்தால் சூரியனை மறைத்தார். பின் அனைவரும் விநாயகப் பெருமானின் உதவியை நாடினர். அவர் உடனே வந்து ஆவண செய்வதாக கூறினார்.
ராவணன் பிறப்பால் அந்தணன். பூஜை புனஸ்காரங்கள் நித்ய கர்மாக்கள் சந்தியாவந்தனம் முதலியவைகளை ஒழுங்காக முறையாக செய்து வந்தான். சூரியன் மறைந்ததால் அந்திப் பொழுது ஆகிவிட்டது என்று நினைத்து சந்தியாவந்தனம் செய்ய வேண்டுமே என்று நினைத்து இந்த லிங்கத்தை என்ன செய்வது என்று ஆலோசித்த போது அங்கு விநாயகர் ஒரு சிறிய பையன் வடிவில் எதிரே தோன்றினார்.
உடனே ராவணன் அந்தப் பையனிடம் அம்பி அம்பி நான் சந்தியாவந்தனம் செய்ய வேண்டும் ஆதலால் இந்த லிங்கத்தை வைத்துக் கொண்டு இரு எக்காரணம் கொண்டும் கீழே வைத்து விடாதே என்று கூறினான். (அந்த லிங்கம் ஒரு பெரிய வேஷ்டியில் கட்டி மறைத்து வைக்கப்பட்டிருந்தது.) உடனே அந்த பையன் நான் உங்களை மூன்று தரம் பெயரைச் சொல்லி (ராவணன் தன் பெயரை கூறி இருக்கிறான்) அழைப்பேன் வரவில்லை என்றால் கீழே வைத்து விடுவேன் என்று கூறினார். ராவணனும் சரி என்று சொல்லி கிளம்பியவுடன் சற்று நேரத்திலேயே மெதுவாக ராவணா ராவணா ராவணா என்று மூன்று முறை கூவி வரவில்லை என்றவுடன் ஆத்ம லிங்கத்தை கீழே பூமியில் வைத்து விட்டார்.
அது கண்டு வெகுண்ட ராவணன் அவரை அடிக்க கையை ஓங்க விநாயகர் ஆக மாறி பின் அங்கிருந்து மறைந்து விட்டார். மிகுந்த கோபத்துடன் அந்த லிங்கத்தை அங்கிருந்து எடுக்க முயற்சிக்க முடியாமல் போக அந்த வேஷ்டியை பலம் கொண்ட மட்டும் இழுக்க அந்த வேஷ்டி நாலு துண்டாகியது. ஒவ்வொரு துண்டாக தூக்கி எறிய அது விழுந்த ஒவ்வொரு இடத்திலும் ஒரோரு லிங்கம் உருவானது.
துண்டு பூமியில் இருந்த இடத்தில் கோகர்ணத்தில் தோன்றிய லிங்கத்திற்கு மஹா பலீஸ்வர் என்றும் முதல் துண்டு பூமியில் விழுந்த இடத்தில் தோன்றிய லிங்கத்திற்கு முர்டீஸ்வர் என்றும் பிறகு விழுந்த இடங்களில் முறையே ஜஸ்வந்தீஸ்வர் குணந்தீஸ்வர் மருந்தீஸ்வரர் என்றும் ஐந்து லிங்கங்கள் தோன்றின. இதுவே பஞ்ச லிங்கம் என்று அழைக்கப்படுகிறது. இவ்வாறு தான் கர்நாடக மாநிலத்தில் பஞ்ச லிங்கங்கள் தோன்றியது.
பாகவதத்தில் கோகர்ணம் பெயர்க் காரணம் கூறப்பட்டுள்ளது. அதாவது கோ என்றால் பசு கர்ணம் என்றால் காது கோகர்ணம் என்றால் பசுவின் காது என்று அர்த்தம். மஹாபாரதத்தில் கர்ணன் கவச குண்டலங்களோடு (காதில் ) தோன்றியதால் தான் அவனுக்கு கர்ணன் என்று பெயர் வந்தது. இது ஒரு ஜஸ்ட் உபரி தகவல் அவ்வளவு தான்.
இதுவே கோகர்ணம் முர்டீஸ்வரர் தோன்றிய வரலாறு.
இது வரை படித்தமைக்கு நன்றி நன்றி நன்றி
நாளை வேறொரு வரலாறுடன் சந்திப்போம்
Comments
Post a Comment