நசிகேதன் வரலாறு

தெரிந்த கதை தெரியாத வரலாறு.

நசிகேதன் வரலாறு.

நண்பர் வேலுமணி அவர்கள் நசிகேதன் வரலாறு வேண்டும் என்று கேட்டதால் இன்று நசிகேதன் வரலாறு பற்றி எழுதுகிறேன்.

நசிகேதஸ்.

நசிகேதனின் தந்தை வாஜச்ரவஸ். அவர் தனக்கு அனைத்து பலன்களும் பயன்களும் பெற வேண்டும் என்று குறுகிய சிந்தனை உடன் அனைத்து பலன்களும் அளிக்கவல்ல விச்வஜித் என்ற யாகத்தை கட உப நிஷத்தில் கூறியபடி நடத்தினார்.உண்மையில் எந்தப் பயனும் பலனும் கருதி யாகம் செய்யக் கூடாது. ஆனால் இவரோ பலன் ஒன்றே கருத்தில் கொண்டு யாகத்தை நடத்தினார். மேலும் தான தர்மங்கள் முறையாக தரப்படவில்லை. பால் கறக்காது வற்றி கன்று போடும் தன்மையை இழந்து விட்ட பசுக்களை கோதானம் என்ற பெயரிலும் ஒன்றுக்கும் உதவாத வறண்ட பூமியை பூமி தானம் என்ற பெயரிலும் தானம் கொடுத்துக் கொண்டு இருந்தார். மேலும் தானம் கொடுப்பவர் நான் தானம் கொடுக்கிறேன் என்ற கர்வமோ அகம்பாவமோ துளியும் இன்றி கொடுக்க வேண்டும். ஆனால் இவரோ நான் கொடுக்கிறேன் என்ற கர்வத்துடன் ஒன்றுக்கும் பிரயோஜனம் இல்லாதவற்றைத் தானமாக வழங்கிக் கொண்டிருந்தார்.

இதைப் பார்த்த நசிகேதன் மிகவும் மனம் வருந்தி துன்புற்று தந்தை செய்யும் செயலைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் தந்தையே என்னை யாருக்கு தானம் கொடுக்க போகிறீர்கள் என்று கேட்டான். ஒரு முறை இரு முறை அல்ல மூன்று முறை கேட்டான். இதைக் கேட்ட அவன் தந்தை வாஜச்ரவிற்கு மிகுந்த கோபம் ஏற்பட்டு உன்னை எமனுக்கு தந்தேன் போ என்றார்.

எப்போதும் பெரியவர்கள் பெற்றவர்கள் என்ன தான் கோபம் இருந்தாலும் தகாத வார்த்தைகளை உபயோகிக்க கூடாது என்பதற்கு இவன் தந்தை ஒரு எடுத்துக்காட்டு.

பிறகு தந்தை கோபத்தில் தான் பேசினார் என்றாலும் தான் எமனுலகம் சென்றே ஆக வேண்டும் என்று முடிவு செய்து போகுமுன் தந்தையிடம் நமது முன்னோர்கள் பல வித யாகங்கள் செய்து உள்ளார்கள் ஆனால் யாரும் இது போல் நடந்ததில்லை தாங்கள் செய்தது மகா பாவம் அதற்கான தண்டனையை நான் அனுபவிக்கிறேன் என்று கூறி அவன் எமனுலகம் அடைந்தான்.

அவன் எமனுலகம் அடைந்த நேரம் எமன் அங்கு இல்லை மேலும் மூன்று நாட்கள் காத்திருந்த பிறகு தான் எமன் வந்தான். உடனே அவனுடைய மந்திரிகள் தூய பாலகன் ஒருவன் உனக்காக வேண்டி மூன்று தினங்கள் அன்ன ஆகாரம் இன்றி நம் வாசலில் காத்திருக்கிறான். ஆகவே முறைப்படி அவனுக்கு செய்ய வேண்டிய அனைத்து மரியாதை களையும் செய்து நமது நகருக்கு அழைத்து வருவாயாக என்று கூறினார்கள்.

உடனே எமன் அவனிடம் சென்று தூயவனே நீ மூன்று இரவுகள் என் இடத்தில் விருந்தாளியாக வந்து அன்ன ஆகாரம் இன்றி தங்க நேர்ந்தது. ஆதலால் என்னை மன்னித்து அருள்க. மேலும் அந்த பாவம் என்னைப் பிடிக்காதவாறு இருக்க நான் மூன்று தினங்களுக்கு தினம் ஒரு வரம் வீதம் மூன்று வரங்களைத் தந்தேன் பெற்றுக் கொள்க என்று கூறினார்.

அதற்கு நசிகேதன் எமதர்மராஜா நன்றி உன் மூன்று வரங்களில் முதல் வரமாக நான் திரும்பிச் செல்லும் போது என் தந்தை என்னைச் சரியாக புரிந்து கொண்டு எந்த கோபமும் இல்லாமல் தெளிந்த மனதுடன் என்னை ஏற்றுக் கொள்ள வேண்டும் இதுவே முதல் வரமாகும்.

உடனே எமதர்மன் ததாஸ்து என்றார்.

உடனே நசிகேதன் ரெண்டாவது வரமாக ஸ்வர்க்கத்தில் உள்ளவர்கள் பசி தாகம் மயக்கம் தூக்கம் கவலை சோர்வு போன்றவை இல்லாமல் இருக்கிறார்கள் அவ்வாறு அவர்கள் ஸ்வர்க்கம் செல்வதற்கான யாகங்கள் எவை எவை அதை எனக்கு விரிவாக விளக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டான்.

உடனே எமனும் அவன் கோரியபடி ரெண்டாவது வரத்தை அளித்து அது பற்றி விரிவாக கூறி பின் முடிவில் உனக்கு இன்னொரு வரமும் தருகிறேன் என்று கூறி இன்றிலிருந்து இந்த யாகம் உன் பெயரிலேயே நசிகேத யாகம் என்று அழைக்கப்படும் என்று கூறி ஒளி பொருந்திய கண்ணைப் பறிக்கக் கூடிய ஒரு மாலையையும் பரிசாக அளித்தார்.

பிறகு எமதர்மன் உன்னுடைய மூன்றாவது வரம் என்ன என்று கேட்டார். உடனே நசிகேதன் மரணத்திற்கு பிறகு வாழ்வு உண்டு என்று சிலரும் இல்லை என்று சிலரும் கூறுகின்றனர் இதைப்பற்றி உன்னிடம் கேட்டு தெளிவு பெற விரும்புகிறேன் என்று கூறினான்.

அதற்கு உடனே எமதர்மன் பாலகா இது பற்றி தேவர்களும் அறிந்தார்கள் இல்லை இது பரம தேவ ரகசியம் மேலும் இது பற்றி கூறக் கூடாது. நீ இதற்கு மாற்றாக வேறொரு வரம் கேள் என்று கூறினார். ஆனால் நசிகேதனோ எமதர்மனிடம் இதை எளிதாக யாரும் தெரிந்து கொள்ள முடியாது என்று நீயே கூறுகின்றாய். உன்னை விட்டால் வேறு யாருக்கும் தெரியாது ஆதலால் எனக்கு இந்த வரம் தான் வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தான்.

உடனே எமன் நசிகேதா நீ நூறாண்டு ஆயிரம் ஆண்டு பூமியில் வாழவேண்டுமா அநேக சம்பத்தும் செல்வமும் பொன்னும் மணியும் முத்தும் ஆபரணமும் ஐஸ்வர்யமும் தேவமாதர்களும் இன்னும் என்ன என்ன வேண்டும் நீ எத்தனை காலம் இந்த சுகங்களுடன் வாழ வேண்டுமோ பெரிய ராஜ்யத்திற்கு மஹாராஜா ஆக வேண்டுமா என்ன வேண்டுமோ கேள் தருகிறேன் இந்த வரத்தை மட்டும் கேட்காதே என்றார். இதற்கு இணையாக எதை வேண்டுமானாலும் கேள் தருகிறேன் என்றார்.

ஆனால் நசிகேதனோ எமதர்மனிடம் நீ கூறிய அனைத்தும் ஒரு நாள் இல்லை ஒரு நாள் அழிந்து போகக் கூடியது. வாழ்வு நிலையற்றது. கிழத்தன்மை அடைந்த உடன் அனைத்தையும் வெறுத்து ஒதுக்கி விடுவோம். எனக்கு உன் தரிசனமும் வரமும் சாமானிய யாக கிடைக்காது நான் பெறும் பேறு பெற்றவன் மேலும் உன்னை தரிசித்த மாத்திரத்திலேயே எனக்கு சகல ஐஸ்வர்யங்களும் வந்துவிடும். ஆதலால் எனக்கு இதைத் தவிர வேறு ஒன்றும் வேண்டாம் என்று கூறினான்.

அதற்கு பிறகு வேறு வழியில்லாமல் எமதர்மன் கூறலானார்.

நசிகேதா உன் விருப்பத்தை பூர்த்தி செய்கிறேன் என்று கூறி மிகவும் உயர்ந்தது மேலானது ச்ரேயஸ் என்றும் சுகமானது ப்ரேயஸ் என்று கூறி மேலும் ஆன்மாவைப் பற்றியும் அது அடையும் பலன்களையும் விரிவாக நசிகேதனுக்கு எடுத்துக் கூறினார்.

மேலும் ஸ்வர்க்கம் நரகம் அதை அடைவது எவ்வாறு என்று கூறி அதிலிருந்து மோட்சம் மாறுபட்டது என்று கூறி ஆன்மாவின் மேன்மை பற்றி கூறி அத்யாத்ம யோகம் செய்து பிரம்மச்சரியத்தை கடைப் பிடித்து எல்லா விரதங்களையும் செய்து இறுதியில் ஆன்மாவிற்கு அழிவில்லை அது பிறப்பதும் இல்லை இறப்பதும் இல்லை என்று கூறி இறுதியாக உடம்பு என்பது ஒரு தேர் அதில் புத்தி தான் தேரோட்டி மனம் கடிவாளம் இந்திரியங்கள் குதிரைகள் உலக விஷயங்கள் தேர் செல்வதற்கான பாதை ஆன்மா தான் பயணம் செய்பவர் என்று கூறி சுவாசப் பயிற்சி பற்றி கூறி மூச்சு வெளியேறி விட்டால் மனிதன் பிணம் பிறகு அவனை விட்டு ஆன்மா வெளியேறி விடும் என்று கூறி மரணத்திற்கு பிறகு எஞ்சி நிற்பது ஆன்மா தான் என்று கூறி நீ கேட்டதற்கான பொருள் விளக்கம் இது தான் என்று கூறி சகல சம்பத்தும் செல்வமும் ஐஸ்வர்யங்களும் அவனுக்கு தந்து அவனை வழி அனுப்பி வைத்தார்.

இதுவே நசிகேதன் வரலாறு.

இது வரை படித்தமைக்கு நன்றி நன்றி நன்றி

நாளை வேறொரு வரலாறுடன் சந்திப்போம்

     

Comments

Popular posts from this blog

மாசாணி அம்மன் வரலாறு

யாயும் ஞாயும் யாராகியரோ

முருகனின் அவதாரங்கள்