சிருங்கேரி சாரதா தேவி கோயில் மஹாத்மியம்
தெரிந்த கதை தெரியாத வரலாறு.
இன்று நாம் காண இருப்பது சிருங்கேரி சாரதாம்பாள் மஹாத்மியம்.
(முதல் ஃபோட்டோ நாங்கள் சிருங்கேரி சென்ற போது எடுத்தது ரெண்டாவது 16.8.2018 அன்று சாரதாம்பாளுக்கு வெள்ளி கவசம் சாத்தியது இது அதிசயமாக எப்பவாவது தான் நடக்கும். சாதாரணமாக பார்க்க கிடைக்காத அரிதான போட்டோ)
சிருங்கேரி பீடம் தோன்றிய விதம் சாரதாம்பாள் கோவில் அமைந்த வரலாறு முதலியவற்றை இன்று காண்போம்.
சிருங்கேரி. பெயர்க் காரணம்.
சிருங்கேரி யின் உண்மையான பெயர் சிருங்கேரி அல்ல. ஸ்ருங்ககிரி என்பதாகும். அதாவது விபாண்டக முனிவரின் மகன் ரிஷ்யசிங்கர் (இவர் தலையில் கொம்புடன் பிறந்தவர் என்று கூறுவார்கள். கம்ப இராமாயணத்தில் இவரைப் பற்றி கூறும் போது கலைக் கோட்டு முனிவர் என்று கூறுவார்கள். மேலும் இவர் தான் ராமாயணத்தில் தசரத சக்கரவர்த்தி க்கு புத்திர காமேஷ்டி யாகம் செய்வித்தவர். இவரைப் பற்றி நிறைய பேர் அறியாத ஒரு தகவலும் உண்டு. அதாவது இவர் தசரதனின் மூத்த பெண் சாந்தாவை திருமணம் செய்து கொண்டவர். தசரதருக்கு மாப்பிள்ளை முறையும் ஆவார். இது மிகவும் நீண்ட பதிவு ஆதலால் இதைப் பற்றி பிறகு ஒரு முறை விரிவாக எழுதுகிறேன்.)
ஆதலால் ரிஷ்யசிங்கரின் பெயரால் இந்த ஊர் ரிஷ்யஸ்ருங்க கிரி என்று அழைக்கப்பட்டு. பிறகு நாளடைவில் மருவி சிருங்க கிரி ஆகி பின் சிருங்கேரி ஆனது. (இதேபோல் பரங்கி மலை யின் உண்மையான பெயர் ப்ருங்கி மலை. ப்ருங்கி முனிவர் தவம் செய்ததால் ப்ருங்கி மலை ஆகி பின் நாளடைவில் மருவி பரங்கி மலை ஆனது)
சிருங்கேரி மடம் உண்டான விதம்.
ஒரு முறை ஆதி சங்கரர் ஒரு பீடத்தை உருவாக்க வேண்டி அதற்கான சிறந்த இடத்தைத் தேர்வு செய்ய வேண்டும் என்று நினைத்து தன் சிஷ்யர்கள் புடை சூழ வந்து கொண்டு இருந்தார். அப்பொழுது நல்ல பயங்கரமான வெய்யில். உச்சி வெயில் மண்டையைப் பிளக்கும் அளவிற்கு சூடாக இருந்தது. அந்த நேரத்தில் ஒரு தவளை நிறைமாத கர்ப்பத்துடன் பிரசவிக்கும் நேரத்தை எதிர் பார்த்து மிகவும் வலியுடனும் வேதனையுடனும் வெயில் சூடு தாங்காமலும் தவித்துக் கொண்டு இருந்தது.
அந்த நேரம் எங்கிருந்தோ வந்த ஒரு நல்ல பாம்பு தவளையைப் பார்த்து உடனே அருகில் வந்து நன்கு படமெடுத்து குடை போல் விரிந்து தவளைக்கு வெயில் படாதவாறு அதைப் பாதுகாத்தது. இக் காட்சியைக் கண்ட ஆதி சங்கரர் எந்த இடத்தில் இரு பகைவர்கள் தனது பகையை மறந்து அந்நியோன்யமாக ஒருவருக்கு ஒருவர் உதவி செய்கிறார்களோ அந்த இடமே உன்னதமான புனிதமான இடம் என்று முடிவு செய்தார்.
பிறவியிலேயே பகைவர்கள் பாம்பும் தவளையும் பாம்பும் கீரியும் எலியும் பூனையும் அப்பேர்ப்பட்ட பிறவிப் பகைவர்கள் தங்களுக்குள் உள்ள பகைமையை மறந்து ஒருவருக்கொருவர் உதவி செய்கிறார்கள் என்றால் இதை விட புண்ணியம் நிறைந்த இடம் வேறும் உண்டோ என்று கூறி இவ்விடமே மிகவும் சிறந்தது என்று எண்ணி அந்த இடத்திலேயே சாரதாம்பாள் கோவிலையும் சிருங்கேரி பீடத்தையும் அமைத்தார் (சிருங்கேரி பீடம் என்பது ராஜபீடம் ஆதலால் அந்த பீடாதிபதி கள் ராஜதோரணையில் இருப்பார்கள். காஞ்சி பீடம் சந்நியாசி பீடம்)
இதுவே சிருங்கேரி பீடம் சாரதாம்பாள் கோவில் தோன்றிய வரலாறு.
இது வரை படித்தமைக்கு நன்றி நன்றி நன்றி
நாளை வேறொரு வரலாறுடன் சந்திப்போம்
Comments
Post a Comment