கோவிந்தா கோவிந்தா வரலாறு

கோவிந்தா கோவிந்தா
திருமலை, திருப்பதி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை நீதி வழுவாமல் ஆண்டுவந்தார் தொண்டைமான் சக்கரவர்த்தி. திருமலை வாசனுக்கு நித்திய ஆராதனைகள், பிரம்மோற்சவம் மற்றும் பல விழாக்களைத் தவறாமல் நடத்திவந்தார். மக்களும் தெய்வ நம்பிக்கையுள்ளவர்களாகவும், வேங்கடவனின் பக்தர்களாகவும் சுபிட்சமாக வாழ்ந்துவந்தனர். நாடு ஒரு உன்னத நிலையில் இருந்தது.

இப்படி நல்லாட்சி நடத்திவரும் காலத்தில் ஒருநாள்  ஒருவர் மன்னரைக் கண்டு, “”அரசே, நான் சக்ரபுரி என்னும் ஊரைச் சேர்ந்தவன். என் தந்தையின் பெயர் கூர்மன். எனது பெயர் கிருஷ்ணசர்மா. என் மனைவியின் பெயர் சுதாமணி.

எங்களுக்கு மூன்றுமாத கைக்குழந்தை இருக்கிறது. நான் காசிக்கு தீர்த்தயாத்திரை செல்ல எண்ணுகிறேன். நான் திரும்பிவரும்வரை என் மனைவியையும் குழந்தையையும் தங்கள் பொறுப்பில் ஒப்படைத்துவிட்டுச் செல்லவிரும்புகிறேன்” என்று வேண்டினார்.

பக்திமானான தொண்டைமான், காசிக்கு செல்பவருக்கு உதவுவது தன் கடமையென்றெண்ணி அதற்கு ஒப்புக்கொண்டார்.

கிருஷ்ணசர்மா, மன்னனிட மும் மனைவியிடமும் விடைபெற் றுக் கொண்டு சென்றார். பொறுப்பேற்றுக்கொண்ட தொண்டைமான் அந்தப் பெண்ணையும் குழந்தையையும் தனியாக ஒரு வீட்டில் தங்கவைத்து, அவர்களுக்கு ஆறுமாத காலத்திற்கு வேண்டிய உணவுப் பொருட்களையும் மற்ற வசதிகளையும் செய்துகொடுத்தார்.

மேலும், வெளியில் உள்ளவர் களாலோ, மிருகங்களாலோ அவர்களுக்கு கெடுதல் வராமலிருக்க அந்த வீட்டின் கதவை வெளியில் பூட்டிவிட்டார்.

பிறகு நாட்டு நிர்வாகம், தெய்வத் திருப்பணி, மக்கள் பிரச்சினைகளைத் தீர்த்தல் உள்ளிட்ட பல பணிகளைச் செய்வதில் கவனம் செலுத்திவந்தார்.

காசி யாத்திரையை முடித்துக்கொண்டு திரும்பிய கிருஷ்ணசர்மா மன்னரைக் கண்டு தன் மனைவியையும், குழந்தையையும் ஒப்படைக்கும்படி கேட்டார்.

மன்னர் திடுக்கிட்டார். ஆறுமாதங்களுக்கு முன் அவர்களை ஒரு வீட்டில் வைத்துப் பூட்டியதும், மறுபடியும் அவர்களைப் போய்ப்பார்க்க மறந்துவிட்டதும் நினைவுக்கு வந்தது. சற்று யோசித்த அவர் அந்த  அரசவையில் ஓரிடத்தில் இருக்கச்சொல்லிவிட்டு, தன் காரியஸ்தனிடம் அந்த வீட்டின் சாவியைக் கொடுத்து தாய்- குழந்தையின் நிலைபற்றித் தெரிந்துவரச் சொன்னார். அங்குசென்று பார்த்துவிட்டு வந்த காரியஸ்தன் அவர்கள் இருவரும் இறந்துவிட்டனர் என்னும் அதிர்ச்சிகரமான செய்தியைச் சொன்னான்.

தன் தவறு மன்னருக்குப் புரிந்தது.

“என் மறதியால் ஒரு பெண்ணின் மரணமும், சிசுவின் மரணமும் நிகழ்ந்துவிட்டது. அந்த பாவ தோஷங்கள் என்னை பீடிக்கும்’ என்று வேதனைப்பட்டார்.

மன்னர், அந்தப் பெருமாள்மீதே பாரத்தைப் போட்டு, கிருஷ்ணசர்மாவை அழைத்து, “”உங்கள் மனைவியும் குழந்தையும் திருமலைக்கு ஸ்வாமி தரிசனம் செய்யச் சென்றுள்ளனர். அவர்களை நானே அழைத்துவந்து தங்களிடம் ஒப்படைக்கிறேன். அதுவரை இங்கேயே தங்கி யிருங்கள்” என்று கேட்டுக்கொண்டார்.

பின்னர் திருவேங்கடமுடையான் சந்நிதிக்கு ஓடிச்சென்று, “”பெருமாளே, அறியாமல் பிழை செய்துவிட்டேன். என்னை மன்னித்தருளவேண்டும். நான் கொடுத்த வாக்கு பொய்க்காமல், இறந்தவர்களை உயிர்ப்பித்தருளவேண்டும்” என்று கண்ணீர் வடித்து மனமுருகப் பிரார்த்தித்தார்.

அப்போது வேங்கடவன் தொண்டை மானுக்கு காட்சிதந்து, “”நீயும் என் பக்தன். காசிக்கு செல்லுமுன் திருமலை வந்து என்னை வணங்கி விடைபெற்றுச்சென்ற கிருஷ்ணசர்மாவும்  என் பக்தன். அவன் மனைவியும் என்மீது மாறாத பக்தி கொண்டவள். ஆகையால் அவர்களை உயிர்பெறச் செய்வது என் கடமை” என்று திருவாய் மலர்ந்து, அருகிலிருந்த சேனை முதலியை அழைத்து, “”“ஸ்ரோம்’ என்ற நீரோடை இருக்கிறது. அங்குசென்று அந்த நீரை எடுத்துக்கொண்டு மன்னனுடன் சென்று, அந்தணனின் மனைவி, குழந்தையின் உடல்மீது தெளித்தால் அவர்கள் உயிர் பெற்றெழுவார்கள்” என்று அருளினார்.

சேனை முதலியும் அவ்வாறே செய்ய, இறந்தவர்கள் உயிர் பிழைத்தனர்.

மறுநாள் கிருஷ்ணன்சர்மாவிடம் அவரது மனைவியையும் குழந்தையையும் ஒப்படைத்த தொண்டைமான், அவரிடம்  நடந்தவற்றைக் கூறினார்.

அதைக்கேட்டுப் பரவசமடைந்த கிருஷ்ணசர்மா தன் மனைவி, குழந்தையுடன் திருமலைக்குச் சென்று ஏழுமலையானை மெய்யுருக வணங்கினார்.

அப்போது தொண்டைமான் அங்குவந்து வழிபட, திருமலைவாசன் தொண்டைமானை நோக்கி, “”பக்தி செய்வதில் உனக்கு நிகர் ஒருவருமில்லை. இனிவரும் அடுத்த பிறப்பில் வேதாந்தங்களை முழுவதும் அறிந்து தெளிந்த புனிதராய் வாழ்ந்து பரமபதம் வந்தடைவாய்” என்று ஆசியருளினார்.

பின்னர் கிருஷ்ணசர்மாவுக்கு வேண்டிய கொடைகளை வழங்கி, அவரை வழியனுப் பிவைத்தார் மன்னர். பெருமாளை வணங்கிய வண்ணம் நெடுநாள் வாழ்ந்து நல்லாட்சி புரிந்தார் தொண்டைமான் சக்கரவர்த்தி.

இறைவனை உள்ளன்போடு வழிபடுபவர்களை அவன் எப்போதும் கைவிட்டதில்லை என்பதற்கு இவ்வரலாறு ஒரு சான்று.

Comments

Popular posts from this blog

மாசாணி அம்மன் வரலாறு

யாயும் ஞாயும் யாராகியரோ

முருகனின் அவதாரங்கள்